மாநில தலைவர் ஒப்புதலின்றி எதுவும் செய்யாத உங்களை ஏன் கட்சியிலிருந்து நீக்குகிறார்?
மூத்த தலைவர்களை விமர்சனம் செய்கிறவர் கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கட்சியின் தலைமை கமிட்டி முடிவெடுக்கிறது. மாநில தலைவரை தொடக்கத்தில் இருந்தே விமர்சித்துவருகிறார் கல்யாணராமன். அவரையும் என்னையும் ஒரே நேரத்தில் நீக்குகிறார்கள். கல்யாணராமன் -திருச்சி சூர்யா என்ற ஒப்பீடே தவறு. தமிழிசை -திருச்சி சூர்யா என்றுதான் வந்திருக்க வேண்டும். ஏனென்றால் தமிழிசை பா.ஜ.க. தலைவரை மட்டும் விமர்சிக்கவில்லை, கட்சியின் சித்தாந்தத்தையே கேள்விக்கு உட்படுத்து கிறார். கட்சியில் ரவுடிகள்தான் இருக்கிறார்கள் என்றார். இதற்கு உடனடியாக ஆளும்கட்சி அமைச் சர், "பார்த்தீங்களா நாங்க தான் பா.ஜ.க.வைப் பற்றி முன்னரே சொன்னோம், இப்ப அவங்களே ஒத்துக்கிட்டாங்க'” என்கிறார். இதன்வழியாக தி.மு.க.விற்கு பாயிண்ட் எடுத்துக்கொடுக்கிறார் தமிழிசை. ஊரே இவரை ஆடு என்கிறது. இவரை நம்புன பாவத்துக்கு எல்லா இடத்திலும் என்னை பலிகடாவாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்.
மாநில தலைவரை பகைத்துக்கொண்டதால் தான் தமிழிசையை கண்டித்தாரா அமித்ஷா?
தமிழிசையை அமித்ஷா சத்தம் போட்டது, இவரை பகைச்சுக்கிட்டதாலேயோ, இவரிடம் பிரச்சினை பண்ணியதாலேயோ இல்லை. தமிழிசை, நிர்மலா சீதாராமனைப் பற்றி சில இடங்களில் ஒருமாதிரி பேசிட்டாங்க. பிராமின் என்றால் மந்திரி பதவி கொடுப்பீங்க. எங்களை ஜெயிச்சுட்டு வாங்கன்னு சொல்றீங்க. அவங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. மூன்றுமுறை பெரிய அமைச்சர் பதவி கொடுக்குறீங்க, எனக்கு ஒரு முறை அமைச்சர் பதவி கொடுத்தால் தானே நிரூபித்துக் காட்டமுடியும் என்று ஒரு இடத்தில் பேச... அது மேலிடத்திற்கு தகவலாகப் போய்விட்டது. தமிழிசைக்கும், நிர்மலாவிற்கு நல்ல அரசியல் புரிதல் இருக்கிறது. ஆனால், இவர்கள் இப்படிப் பேசியதால் நிர்மலா வருத்தமடைந்தார். அது சிக்கலாகி அமித்ஷா கண்டிக்கும் நிலைக்கு ஆளானார் தமிழிசை.
இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் கட்சியின் அடிப்படை பொறுப்பிலிருந்து கடினமாக வேலை செய்து இன்று கவர்னராக ஆகியிருக்கிறார்கள். அவங்க ஆடினால்கூட ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் இந்தம்மா ஆடுவதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
கவர்னர் பதவியை விட்டுவிட்டு பாராளு மன்றத் தேர்தலில் நிற்க காரணம் தலைமை எடுத்த முடிவா?
தனிப்பட்ட முறையில் அவங்க எடுத்த முடிவுதான். தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து எம்.பி.க்காக நின்றபோது பொருளாதார ரீதியில் பலமாக இல்லை. அதனால் தோல்வி யடைகிறார். மத்தியில் கட்சியின் தலைமையுடன் நேரடித் தொடர்பை வைத்துக் கொண்டு தற்போதைய மாநிலத் தலைவருக்கே தமிழிசை தண்ணி காட்டுகிறார். பாண்டிச்சேரியில் கவர்னராக ஆனபிறகு செம்மையாக கல்லா கட்டிவிட்டார், பொருளாதாரரீதியில் திடம் ஆகிக்கொண்டு தேர்தலில் மீண்டும் நின்றார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறதா?
பா.ஜ.க. தலைவர் பிரெஸ்மீட்டில் ஒரு படம் போட்டுக் காட்டி ஒவ்வொரு அமைச்சரும் இவ்வளவு கொள்ளையடித்துவிட்டார்கள் என்று சொன்னால் நம்புவீர்கள், நான் சொன்னால் தரவு கேட்பீர்களா?
பாண்டிச்சேரிக்கு போய் கேளுங்கள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட தமிழிசை மீது விமர்சனம் வைப்பார், அவர்களிடம்கூட அவ்வளவு தரவுகள் இருக்கும். ஜிப்மர் ஆஸ்பிடல் கட்டுவதில் ஆரம்பித்து சாக்கடை கட்டுவது வரை எல்லா இடத்திலும் கை வைத்திருக்கிறார். இந்தமுறை பாண்டிச்சேரியில் பா.ஜ.க. தோற்றதற்கே தமிழிசைதான் காரணம்.
தி.மு.க.வைப் பற்றி கடுமையான குற்றச்சாட்டு வைக்கிற பா.ஜ.க.வினரே கமிஷன் வாங்குவதாகச் சொல்கிறீர்களே?
அமலாக்கத்துறை எங்கெல்லாம் மணல்குவாரி பணம் பரிவர்த்தனையாகிறது என்று சோதனை செய்கிறார்கள். அது சம்பந்தமாக இருவர் வீட்டில் சோதனை செய்தபோது அங்கே பிரதமர் மோடி படம் பெரிதாக மாட்டி வைக்கப்பட்டுள்ளது. மோடி படம் இருக்கிறதே என்று யோசித்த அதிகாரிகளுக்கு பின்னர்தான் தெரிய வருகிறது. ஒருவர் பா.ஜ.க.வின் மாவட்ட தலைவராகவும் மற்றொருவர் கமலாலயத்தின் நிரந்தர பணியாள ராகவும் இருக்கிறார். இருவருமே கேசவ விநாயகத்தின் வலது மற்றும் இடது கையாக செயல்படுபவர்கள். இருவருக்குமே மாதம் 50 லட்சம் வீதம் இரண்டு வருடம் அக்கவுண்டில் பணம் விழுந்திருக்கிறது. இது மொத்தமும் கேசவவிநாயகத்திற்கு வரவேண்டிய பணம்.
பா.ஜ.க. தலைவரின் மேற்பார்வையில்தான் இந்த அமலாக்கத்துறை ரெய்டு எல்லாமே நடந்தது. ஒரு அளவிற்குமேல் போகும்போது பா.ஜ.க.வினரும் ஈடுபட்டுள்ளது தெரியவந்ததும் அத்தோடு ரெய்டு நடத்துவதை நிறுத்திவிட்டார்கள். எங்கெல்லாம் மணல்குவாரி இருக்கிறதோ அங்கு உள்ள பா.ஜ.க. பொறுப்பாளர்களுக்கு கமிசன்கள் போய்க் கொண்டிருக்கிறது. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இதற்குள் வராது. பா.ஜ.க.வும், நாம் தமிழரும்தான் "நாங்க இருக்கிறோம் கனிம வளத்தினை திருட விடமாட்டோம்'னு பிரச்சினைக்குப் போவாங்க.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர் தலில் பா.ஜ.க.வில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லையே?
தி.மு.க. மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அ.தி.மு.க. மீது மக்களுக்கு மதிப்பே இல்லை. இந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி தமிழ்நாட்டில் 20 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் என்று மத்திய தலைமைக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் உறுதியளித்தார். அதையும் அவர்கள் நம்பினார்கள். அந்த அளவிற்கு சில விசயங்களை செய்தும் வைத்தார். நடைபயணம் மக்களை பெரும் அளவில் கவர்ந்தது என்ற பிம்பத்தை ஊடகங்கள் வழியாக உருவாக்கினார்.
ஐ.பி. என்கிற புலனாய்வு அமைப்பின் தலைமை அதிகாரிகளை பா.ஜ.க. தலைவர் கைக்குள் போட்டுக்கொண்டு, இவர் தருகிற டேட்டாக் களை அவர்கள் மத்தியில் கொடுக்கிறார்கள். அதையும் டெல்லி பா.ஜ.க. தலைமை நம்பியது.
தமிழக பா.ஜ.க.வில் யாரிடமும் பெரிதாய் பணம் இல்லை. அதனால் பாராளுமன்றத் தேர்த லில் வேலை செய்ய தொழில் அதிபர்களிடம் கட்டிங் வாங்கினார்கள். செந்தில் பாலாஜியை அடித்த அடியில் தி.மு.க. அமைச்சர்களே நடுங்கிப் போனார்கள். சாதாரண முதலாளிகள் பயப்படாமல் இருப்பார்களா? அனைவரும் அள்ளிக் கொடுத்தார்கள். கோயம்புத்தூரில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைவர் நின்றபோது அங்கிருக்கிற தொழிலதிபர்களிடம் கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேல் வாங்கினார்.
டெல்லி பா.ஜ.க. தலைமை தமிழக பாராளு மன்றத் தொகுதியில் வேலை செய்ய 39 தொகுதிக் கும் தலா 30 கோடி ரூபாய் தேர்தல் செலவுக்காக கொடுத்தார்கள். ஆனால் இதை ஒழுங்காக போய்ச் சேரவிடாமல் கேசவவிநாயகம் தடுத்துவிட்டார். நயினார் நாகேந்திரன் மற்றும் பா.ஜ.க. தலைவருக்கு மட்டும் செலவுசெய்தார்.
நயினார் நாகேந்திரன் பணம் ரயிலில் சிக்கியது. அதை போட்டுக் கொடுத்தது யார்?
பா.ஜ.க. தலைவர்தான் போட்டுக் கொடுத்தது. கொடிக்கம்ப பிரச்சினையில் அமர் பிரசாத் ரெட்டி கைதானபோது, யார் போலீஸ் கமிஷனராக இருந்தது? ரயிலில் இந்தப் பணம் மாட்டியபோது அந்த இடத்தில் யார் போலீஸ் கமிஷனராக இருந்தது? என பார்த்துக்கொள்ளுங் கள். தமிழகத்தில் உள்ள 65% ஐ.பி.எஸ். அதிகாரி கள் இவருக்கு நண்பர்கள், நேரடித் தொடர்பில் இருப்பவர்கள். இவர் சொன்னால் முதல்வரைத் தாண்டி இவருக்காக அவர்கள் உடனடியாக எது வேண்டுமானாலும் செய்வார்கள்.
அமர்பிரசாத் ரெட்டி விசுவாசமாகத்தான் இருந்தார். அவரை ஏன் கைது செய்தார்கள்?
விசுவாசத்துக்கு இங்கு மதிப்பில்லை. கூட இருப்பவர்களையே கழுத்தறுப்பதுதான் இவர்களது வேலை என்று நானே எக்ஸ் பக்கத்தில் போட்டேனே. இந்த நேர்காணல் வெளியானதும் என்னைக்கூட சிறையில் தூக்கி வைப்பார்.
(பேட்டி தொடரும்...)
நேர்காணல்: வே.ராஜவேல்
தொகுப்பு: தாஸ்