ஆடிக்கு ஒரு முறை, அமாவாசைக்கு ஒரு முறை என்பதுபோல, தமிழகத்தையே அதிர வைத்த அந்தக் கொடூரம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பரபரப்பானது. தற்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதிய கைது நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 5-ந் தேதி இரவு சி.பி.ஐ., பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை தூசு தட்டி, 3 பேரைத் தூக்கிக் கொண்டு போயிருக்கிறது .
யார் அந்த 3 பேர்?
3 பேருமே அ.தி.மு.க.காரர்கள் என்பதும், அவர்களின் பெயர் ஹெரான் பால், பாபு, அருளானந்தம் என்பதும்தான் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அருளானந்தம் பொள்ளாச்சி மாநகர மாணவரணி துணை செயலாளர். பொள்ளாச்சி அ.தி.மு.க வி.ஐ.பி.யின் வலது கையாகவே சொல்லப்படும் அருளானந்தத்தை கட்சி ஆபிசில் வைத்தே தூக்கிக் கொண்டு போய் விசாரித்துக் கொண்டிருக்கிறது சி.பி.ஐ.
ஹெரானும், பாபுவும் பொள்ளாச்சி வி.ஐ.பி.யின் மகன்கள் இருவருக்கும் நெருக்கம். பாபு, அந்த வி.ஐ.பி.யின் மகன்களுக்கு பெண் நண்பர்களை அறிமுகப்படுத்தும் ஆட்களில் மிக முக்கியமானவன். சி.பி.ஐ. இந்த வழக்கை மீண்டும் தோண்டித் துருவும் என்பதையும் நக்கீரன் சுட்டிக்காட்டியிருந்தது.
தேர்தல் பிரச்சாரத்தில், அ.தி.முக.வின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி பிஸியாக உள்ள நிலையில் சி.பி.ஐ மேற்கொண்ட கைது மூவ் நடவடிக்கைகளின் பின்னணி பற்றி சி.பி.ஐ அதிகாரிகள் சிலரிடம் கேட்டோம்.
பொள்ளாச்சி வழக்கில் நக்கீரனின் பங்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. ஏற்கனவே திருநாவுக்கரசு, சபரி என்கிற ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார், ஆச்சிபட்டி மணிகண்டன்... என 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். இப்போது விசாரணைக்கு கொண்டு வந்திருக்கும் ஹெரான் பால் உள்ளிட்ட ரெண்டு பேரும் நக்கீரன் சுட்டிக்காட்டிய நபர்களே.
இந்த ஹெரான் பால் சைக்கோ போல பெண்களிடம் நடந்து கொள்வான் . பெல்ட்டால் அடிக்கும் கொடூரத்தை ரசிக்கும் மனப்பான்மை உடையவன்... என நீங்கள் சொல்லியதை வைத்தே நாங்கள் இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தோம். தற்போதைய அரசியல் சூழல்- முதல்வர் வேட்பாளர்- சீட் பங்கீடு எனப் பல கணக்குகள் இந்த திடீர் நடவடிக்கையின் பின்னணியில் உள்ளன. பொள்ளாச்சி பவர் புள்ளியான அ.தி.மு.க. வி.ஐ.பியின் வாரிசு களுடன் தொடர்புடையவர்களை நெருங்கியிருக்கிறோம். விசா ரணையில் கிடைக்கும் தகவல் களின் அடிப்படையில் வாரிசு களையும் நெருக்குவோம்.
அரசியல் காரணங்களைத் தாண்டி, எங்கள் விசாரணை யில் புதிய கோணங்களும் கிடைத்துள்ளன. வழக்கமாக திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில்தான் பெண்களைத் தூக்கிக் கொண்டு போய் அழிச்சாட்டியம் செய்வார்கள். ஆனால் இப்போது எங்கள் விசாரணையில் இரண்டு பெண் களை கண்டறிந்து விசாரித்தோம். அவர்கள் இருவரையும் சபரிராஜன் தன் வீட்டிற்கு கொண்டு சென்று இருக்கிறான் .
அங்கே வைத்து வல்லுறவு செய்திருக்கிறார்கள். பெல்ட்டால் அடித்து சித்திரவதை செய் திருக்கிறார்கள். அதில் சபரி ராஜனோடு அருளானந்தம், பாபு, ஹெரோன் பால் மூன்று பேரும் சேர்ந்து இருக்கிறார்கள். அதனால் தான் அவர்களைத் தூக்கிக் கொண்டு வந்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த விசாரணையில் அடுத்தடுத்த கட்டங்கள் இன்னும் முக்கியமானதாக இருக்கும். அவரும் நக்கீரன் சுட்டிக் காட்டிய ஆள்தான். திருநாவுக்கரசை விசாரிக்கும்போது, பொள்ளாச்சி நகராட்சித் தலைவராய் இருந்த கிருஷ்ணகுமார், எஸ்.பி.வேலுமணியின் தீவிர ஆதரவாளர். அவருக்காக நிறைய வேலைகளை செய்திருக் கிறேன் என திருநாவுக்கரசு வாக்கு மூலம் கொடுத்து இருக்கிறான். இப்போது உடல் நிலை சரியில்லாமல் சேலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறான் திருநாவுக்கரசு.
அவரது வாக்குமூலத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்துள்ளோம். கிருஷ்ணகுமாரை கைது செய்து தூக்குவதன் மூலம் இன்னும் நிறைய உண்மைகளை வெளிக்கொண்டு வந்து அ.தி.மு.க.வை மிரட்டும் பெரும் பணியில் இருக்கிறது பி.ஜே.பி கவர்மெண்ட். இந்த வழக்கு கடைசி கட்ட நிலையை எட்டி விட்டதாகவே மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும்படி நடந்துகொள்ள வேண்டும் என எங்களுக்கு உத்தரவும் இடப்பட்டி ருக்கிறது'' என்கிறார்கள்.
இந்த நிலையில் அருளானந்தம் நிதின் கட்கரியுடன் எடுத்துக்கொண்ட புகைப் படங் களையும், பொள்ளாச்சி வி.ஐ.பி.யுடன் எடுத்துக் கொண்ட புகைப் படங்களையும், எஸ்.பி.வேலுமணி யுடன் எடுத்துக் கொண்ட புகைப் படங்களையும் வைத்து, அருளானந்தம் மேல்பட்ட மனிதர் களோடு நல்ல பழக்கத்தில் இருந்திருக்கிறான் என கண்டறிந்து கொண்டிருக்கிறது சி.பி.ஐ.
பொள்ளாச்சி வி.ஐ.பி.யின் வாரிசுகளை சி.பி.ஐ. இன்னும் நெருங்காத நிலையில், புதுப்புது ஆதாரங்கள் கிடைத்து வருவதால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இந்த வழக்கை, அரசியல் சூழலைப் பொறுத்து எந்த இடத்திற்கும் இழுத்துச் செல்லலாம் என்கிறார்கள் நிலவரம் அறிந்த அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும்.
-அருள்குமார்
__________
ஆர்ப்பாட்டம்!
பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஊடகங்களின் கவனத்தைப் பெறுவதற்கு முன்பாக, இளம்பெண்கள் பாதிக்கப்பட்டதையும் அதில் அ.தி.மு.க. புள்ளிகளின் தொடர்பு இருப்பதையும் மகளிர் அமைப்பினர்- தி.மு.க. நிர்வாகிகள் தங்களின் போராட்டம் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர் போராட்டத்தின் விளைவாக, திருநாவுக்கரசு கைதாக, அவனது ஆடியோ கசிந்ததன் அடிப்படையில்தான் முழு வில்லங்கமும் வெளிவர ஆரம்பித்தது.
திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட 5 பேருடன் தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைதான வர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி திமுக மகளிர் அணியினர் மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் நீதிமன்ற வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டமூவரையும் கோவை மத்திய சிறையில் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார். இதனை அடுத்து காவல்துறையினர் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் தி.மு.க. மகளிர் அணி மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தின் ஒன்றாவது வாயில் முன்பு அமர்ந்து பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகள் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிப்பதாகவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர். ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதனையடுத்து பலத்த பாதுகாப்புடன் கைது செய்யப்பட்ட அருளானந்தம், பாபு, ஹெரோன் பால் ஆகிய மூவரும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
_________
அ.தி.மு.க தொடர்பு!
பொள்ளாச்சி பகுதியில் இளம்பெண்களை ஆளுங்கட்சிப் புள்ளிகளும் அவர்களின் வாரிசுகளும் தொடர்ச்சியாக வேட்டையாடி வருகிறார்கள் என்பதை நக்கீரன் அம்பலப்படுத்தி வந்தது. கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால், அ.தி.மு.க அதனை மறுத்துவந்தது. விசாரணைக்கு முன்பாகவே, யாருக்கும் தொடர்பில்லை என ஊடகங்களிடம் எஸ்.பி. பேட்டி கொடுக்கும் அளவுக்கு மேலிட நெருக்கடி இருந்தது. ஆனாலும், அ.தி.மு.க புள்ளிகளுக்கும் பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்குமான தொடர்புகள் தொடர்ந்தபடியே இருந்தன. அண்மையில் பவானியில் நடந்த உள்ளாட்சி நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டத்திற்கு சென்ற பொள்ளாச்சி வடக்கு யூனியன் அச்சிப்பட்டி ஊராட்சித் தலைவரான அ.தி.மு.கவின் எஸ்.என்.ரங்கநாதனுடன் ஹெரான்பாலும், பாபுவும் சென்றனர். ஊராட்சித் தலைவரின் கட்டிலிலேயே படுக்குமளவுக்கு ஹெரான் தன் கெத்தைக் காட்ட, பாபுவும் அதே அறையில் இருந்து போட்டோ எடுத்தது வாட்ஸ்ஆப்பில் குரூப்களில் ஷேர் ஆனது.