- சி.மகேந்திரன் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிட் கட்சி!

டிராக்டரை ஒரு ஆயுதமாகக் கொண்டு, உலகில் எந்த நாட்டிலாவது, யாராவது போராடியிருப்பார்களா என்பது, எனக்குத் தெரியவில்லை. ஏர்முனை தமிழர் வாழ்வோடு இணைந்த ஒன்று. தமிழர்களின் விவசாயப் பிறப்பை பத்தாயிரம் ஆண்டுகள் என்கிறார்கள். புதிய கற்காலம் நிறைவு பெற்று, இரும்பு காலத்தில் அடியெடுத்து வைத்தபோதுதான், மண்ணை உழுது, பயிரிடும் கொழு‘ கண்டுபிடிக்கப்பட்டு, நிலத்தை பண்படுத்தும் விவசாயமுறை வந்தது. ஏர் என்னும் கலப்பையின் நவீன வடிவம்தான் இன்றைய டிராக்டர். பஞ்சாப், அரியானா விவசாயத்தின் பிரிக்க முடியாத அங்கமாகவே மாறிவிட்டது டிராக்டர்.

farmers

ஐந்து நதிகள் ஓடியதால் பஞ்சாப் என்னும் பெயர் கொண்ட இதில் ஜீலம், செனாப், ராவி, பியாஸ், சத்லஜ் ஆகிய ஐந்து நதிகள் தவழ்ந்து வருகின்றன. பொங்கிப் பெருக்கெடுத்த நதிகள் ஓடிய போதிலும், பெரும்பகுதி நிலம் பாலைவனம். ஒட்டகங்களின் மேய்ச்சல் காடு. ஐந்தாண்டு திட்டத்தின் வழியாக வந்து சேர்ந்தது பக்ரா நங்கல். அணை வந்த பின்னர் எல்லாமும் மாறிப் போனது. பாலைவனம் சோலைவனமானது.

Advertisment

பக்ரா நங்கல் அணை ஒன்றல்ல. இரண்டு. பக்ரா அணையும், நங்கல் அணையும் தனித்தனியானவை. ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று அமைந்திருக்கிறது. அணை, 1961-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இதை ஒட்டி அடியெடுத்து வைத்த பசுமைப் புரட்சி ஒருபுறம் உணவுப் பஞ்சத்தைப் போக்கினாலும் மறுபுறத்தில், மண்ணை மடலாக்கி, மனித உடலில் விதவிதமான நோய்களைக் கொண்டுவந்து சேர்த்தது. பசுமை புரட்சியால் பல்வேறு சோதனைகளை சந்தித்த விவசாயிகளுக்கு, அது தந்த பரிசு பொருளாக அவர்களிடம் மிச்சமாய் இருப்பது டிராக்டர் மட்டும் தான். இதையும் பயனற்றதாக ஆக்கிவிட கார்ப்பரேட் உலகம் பெரும் சதி செய்யத் தொடங்கியபோது பஞ்சாப்-அரியானா விவசாயிகள் விழித்துக்கொண்டார்கள்.

கார்ப்பரேட்டுகள் டிராக்டர்களைக் கைப்பற்ற விரும்பவில்லை, அது அவர்களுக்குத் தேவையும் இல்லை. சொந்த தாயாக கருதும் விவசாய நிலங்களை வலுக்கட்டயமாக கைப்பற்றத்தான் அவர்கள் திட்டம் போட்டார் கள். நிலம் இல்லாமல் டிராக்டர்களால் என்ன செய்ய முடியும்? உலகில் பல நாடுகளில் நிலங்களை கைப்பற்றிய கார்ப்பரேட்டுகள், விவசாயிகளை அவர்கள் சொந்த நிலத்திலேயே கூலித்தொழிலாளியாக மாற்றி அமைத்து விட்டார்கள். இதை உணர்ந்து கோபத்தின் மொத்தவடிவமாய் எழுந்து நிற்பதால், டிராக்டர்களில் இன்று அனல் வீசுகிறது. இதை நவீன ஆயுதமாக மாற்றிக்கொண்டுவிட்டார்கள் விவசாயிகள்.

பஞ்சாப், அரியானா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் 13 ஆயிரம் டிராக்டர்கள் இருக்கின்றன. டிராக்டரின் பயன்பாட்டை மிகவும் நன்றாகவே இந்த இரண்டு மாநிலத்தைச் சார்ந்தவர்களும் உணர்ந்திருக்கிறார்கள். இந்தப் பயன்பாடு எவ்வாறெல்லாம் அமைந்துள்ளது என்பதை சிங்கு எல்லையில் என்னால் பார்க்க முடிந்தது.

Advertisment

f

டிராக்டர்களால், நாற்று நட முடிகிறது. களைகளை அகற்ற முடிகிறது, அறுவடை செய்து, தானியங்களை டிராலிகளில் ஏற்றி, விற்பனைக் கூடங்களுக்கு எடுத்துச்செல்ல முடிகிறது. என்பதை பெருமையுடன் கூறுகிறார்கள். உலகில் எங்கெல்லாம் நவீனமாக டிராக்டர்கள் கண்டுபிடித்து விற்பனைக்கு வருகிறதோ, அங்கெல்லாம் சென்று அதை தேடிப்பிடித்து, வாங்கி வந்துவிடுகிறார்கள் பஞ்சாப் விவசாயிகள்.

இன்று டெல்லியை முற்றுகையிட்டு நிற்கும் டிராக்டர்கள் ஒரு புது பயன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. விவசாயிகளின் "பாடி வீடா'கவும் டிராக்டர்கள் மாறியுள்ளது. தொல் தமிழர்கள் போர்க்களங்களில் பாடி வீடுகளை அமைத்திருந்தார்கள். போர் தொடங்குவதற்கு முன்னர் அமைத்துக்கொள்ளும் பாசறைதான் பாடி வீடு. வேனிற் பாசறை, கூதிர் பாசறை, வாடை பாசறை என்று பருவ காலங்களுக்கு ஏற்ப பாசறைகள் இருந்ததாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. தமிழர்கள் அமைத்துக்கொண்ட பாசறை வீடுகள் இப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறது. டெல்லியை சுற்றி விவசாயிகள் அமைத்துள்ள இந்தப் பாசறை உயிரைக் கொல்லும் பனி காற்றிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் பாடி வீடு. போராட்டக்களத்தில் குளிரில் பெரும் எண்ணிக்கையில் விவசாயிகள் செத்துப் போகாமல் காவல் தெய்வமாய் நின்று பாதுகாப்பை வழங்கியவை இந்த டிராக்டர் என்னும் பாடி வீடுகள் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டுள்ளனர் அந்த விவசாயிகள்..

ஒவ்வொரு டிராக்டர் டிராலியிலும் பெரியதாக இருந்தால் 25 பேர். நடுத்தரமாக இருந்தால் 15 பேர், சிறியதாக இருந்தால் 10 பேர் என்று தங்கும் வசதியை உருவாக்கிக்கொள்கிறார்கள். டிராலியின் அடியில் கோதுமை வைக்கோல், அல்லது நெல் வைக்கோல் வைத்து நிரப்பப்படுகிறது. அதன் மேல் மெத்தை, கம்பளி போர்வை என்று குளிருக்கான எல்லா பாதுகாப்புகளும் இருக்கின்றன. தங்கள் வீட்டில், தங்கள் கிராமத்தில் இருக்கும் உணர்வை ஒவ்வொரு டிராக்டரிலும் உருவாக்கிக் கொண்டு விடுகிறார்கள். தேசிய இனங்களின் மரபணுகள் பற்றிய ஆய்வுகள் நிறைய வருகின்றன. இவர்களின் இந்த வாழ்க்கை பஞ்சாபியரின் போர்க்கால வாழ்க்கையின் தொடர்ச்சியா? தேவையற்ற கவலைகளை உருவாக்கிக்கொள்ளாமல் போராட்டத்தில் வெற்றி ஒன்றை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்.

டிராக்டர்களை உற்றுக் கவனிக்கிறேன். எத்தனை வகைப்பாடுகளில் டிராக்டர்கள், பல வண்ணங்களில், பல வடிவங்களில். இதைப்போலவே டிராக்குகள் இழுத்துச் செல்லும் டிராலிகளும் வகை வகையாக. குழந்தைப் பருவத்தின் மனப்பதிவுகள் ஆழமும் ரம்மியமும் கொண்டவை. எனது கிராமத்தில் நான் பார்த்தவற்றில் சில ஞாபகங்கள் என் நினைவுக்கு வருகின்றன. கிராம மக்களின் கொண்டாட்டம் உழவுமாடுகள்தான். இளம் கன்றுகளைத் தேர்வுசெய்து உழவு செய்வதற்கு பயிற்றுவித்தல், கொம்புகளை சீவி காளைகளை அழகுபடுத்துதல், சந்தைக்கு சென்று புது மாடுகளை தேர்வு செய்து வாங்குதல். சில வருடங்கள் உழவுக்குப் பயன்படுத்திவிட்டுப் பின்னர் அதை விற்பனை செய்து புது மாடுகளை வாங்கி, அதனை வீட்டுக்கு அழைத்து வருதல் என்று வேளாண் குடும்பங்களில், காளைகளின் உலகம் குடும்ப வாழ்க்கையோடு இணைந்தவை.

f

காளைகள் மீதான இதே வாஞ்சைதான் பஞ்சாப், அரியானா விவசாயிகளுக்கு டிராக்டர்கள் மீது இருக்கிறது. போராட்டக் களத்திலும் டிராக்டர்களை தினம், தினம் கழுவி சுத்தம் செய்து, அழகு படுத்தி வண்ண விளக்குகளு டன் வீதிகளில் அழைத்து வருகிறார்கள். பல வண்ணத்தில் மின்விளக்குகளால் டிராக்டர் அழகுபடுத்தப்படுகிறது.

பஞ்சாப், அரியானாகாரர்களுக்கு இசையின் மீது தனி அலாதியான விருப்பம். அதிலும் பஞ்சாபியரின் ‘"பங்கரா'’இசை யாரையும் ஆட வைத்துவிடும். டிஜிட்டல் ஒலி பெருக்கிகளை டிராக்டர்களில் அமைத்து, துள்ளல் நிறைந்த இசையை. அவர்கள் அமர்ந்து ரசிக்கும் தோரணை உலகில் இப்படி ஒரு இன்பம் உண்டா? என்ற எண்ணத்தை வரவழைத்து விடுகிறது. பொதுவாக நீண்ட நாள் போராட்டங்களில் பங்கேற்பவர் களுக்கு இயல்பாகவே மனச்சோர்வு வருவது இயற்கை மட்டுமல்ல. அது சில நேரங்களில் முக்கியப் பிரச்சனையாகவும் மாறிவிடும். போராட்டத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கிவிடும்.

எல்லா இடங்களிலும் ஆடல்கள், எல்லா இடங்களிலும் பாடல்கள் என்று கலையின் வேர் களோடு ஒன்றிப் போன மக்கள் தங்கள் மனச் சோர்வை போக்கி கலையின் மூலம் புத்துயிர்ப்பை பெற்றுக்கொண்டுவிடுகிறார்கள். இதுவும் பஞ்சாபியரின் போர்க்கால சமூக வாழ்க்கையின் தொடர்ச்சிதான் என்பதில் சந்தேகமே இல்லை.

போராட்டக்களத்தில் ஒரு முழக்கம் இன்று உச்சத்திற்கு வந்திருக்கிறது. இதுவும் ஒரு அரசியல் முழக்கம்தான். உறக்கத்திற்குச் செல்லும் முன்னரும், கண் விழித்துப் படுக்கையிலிருந்து எழுந்த பின்ன ரும், நமது காதுகளில் ‘"நரேந்திரமோடி’ ‘முர்தா பாத்' ’ என்னும் முழக்கம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இது, மக்களின் நியாயமான உணர்வு நாடாளுமன்றங்களிலும், ஊடகங்களிலும் மறுக்கப்பட்டதன் வெளிப்பாடு. சர்வதிகாரம் இதுதான் என்பதை உணர்ந்து கிளர்ந்தெழும் மக்களின் கோபப்புயல் முன்னறிவிப்பு.

அந்த முழக்கத்துக்குள் புதிய எரிமலை ஒன்றும் வெடிக்கக் காத்திருக்கிறது. ஆனால் அந்த எரிமலையின் கோபம் நரேந்திர மோடி மீது மட்டுமல்ல.

(புரட்சிப் பயணம் தொடரும்)