ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் 56 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை வரலாற்றை உலகுக்குப் பறைசாற்றும் முகமாக, ’"மாமனிதன் வைகோ -தி ரியல் ஹீரோ'‘ எனும் தலைப்பில் மிகச்சிறந்த ஒரு ஆவணப்படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார் ம.தி.மு.க.வின் தலைமைக் கழக செயலாளரும் வைகோவின் மகனுமான துரை.வைகோ.
இந்த ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் சத்யம் திரையரங்கில் 11-ந்தேதி நடந்தது. விழாவின் நாயகர் வைகோ கலந்துகொள்ள, கவிப்பேரரசு வைரமுத்து முன்னிலை வகிக்க, சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆவணப்படத்தை வெளியிட்டு மகிழ்ந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சுமார் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.
தனது தந்தைக்காக இப்படி ஒரு வரலாற்று ஆவணப் படத்தை தயாரிக்க வேண்டும் என்று கடந்த 7 வருடங்களாகத் திட்டமிட்டு, மிகக்கடுமையாக உழைத்திருக்கிறார் துரை. இதற்காக, திராவிட அரசியலில் வைகோவோடு இணைந்து பயணித்த அரசியல் தலைவர்கள், திராவிட இயக்கத் தலைவர்கள், தமிழ்த்தேசிய தலைவர்கள், மாற்றுக் கட்சிகளின் தலைவர்கள், மூத்த பத்திரிகை யாளர்கள் என, பலரையும் சந்தித்து தகவல்களைத் திரட்டியிருக் கிறார் துரை.வைகோ. அவரின் உழைப்பு பிரமிக்கத்தக்கதாக இருக்கிறது.
தமிழக அரசியலில் தமிழர்களுக்காகவும் தமிழினத்தின் உரிமைகளுக்காகவும் தி.மு.க.வில் சேர்ந்து வைகோ நடத்திய போராட்டங்கள், பேசிய உரைகள், முன்னெடுத்த நடவடிக்கைகள், தியாகங்கள், நடைப் பயணங்கள் என அனைத்தையும் இந்த ஆவணப் படத்தில் அழுத்தமாக காட்சிப் படுத்தியிருக்கிறார் துரை.வைகோ. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் தனது அரசியல் பயணத்தை வைகோ தி.மு.க.வில் தொடங்கியது முதல் தற்போது வரை பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு சம்பவங்களும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தன.
அனைத்து அரசியல் சம்பவங்களும் நிகழ்வுகளும் கால வரிசையில் மிகக் கச்சிதமாக, முரண்பாடுகளில்லாமல் விவரிக் கப்படுகிறது இந்த ஆவணப்படத்தில். எழுத்தும் (ஸ்க்ரிப்ட்) இசையும், பின்னணிக் குரலும் ஆவணப் படத்தை கம்பீரமாகத் தூக்கி நிறுத்துகின்றன.
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித்தின் தூண்டுதலில், நமது நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களை முந்தைய எடப்பாடி பழனிச்சாமி அரசு கைது செய்தபோது, "ஆசிரியர் கோபாலை விடுதலை செய்' என்று வீதியில் இறங்கி ஆக்ரோஷமாக தர்ணா போராட்டம் நடத்தி, எங்கள் விடுதலைக்கு ஆரம்ப புள்ளி வைத்தவரே மாமனிதர் வைகோதான். கைதுக்கு எதிரான ஆக்ரோஷத்தையும் அது தொடர்பான சம்பவங்களையும் மிக வலிமையாக பதிவு செய்திருக்கிறார் துரை.வைகோ.
இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.
ஆவணப்படத்தை ரிலீஸ் செய்து வாழ்த்திப்பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "இந்த நிகழ்ச்சி நடைபெறும் சத்யம் தியேட்டரில் சினிமா ஹீரோக்கள் கலந்துகொண்ட பலரையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், நிஜ ஹீரோவை இப்போதுதான் பார்க்கிறோம். திரைப்படத்தில் வருகிற ஹீரோக்களெல்லாம் சித்தரிக்கப்பட்டவர்கள். ஆனால், சித்தரிக்கப்படாத நிஜ ஹீரோ அண்ணன் வைகோதான்! உயரத்தில் மட்டுமல்ல கொள்கையிலும் இலட்சியத்திலும் தியாகத்திலும் உயர்ந்தவர் வைகோ.
பொடா சட்டத்தில் வைகோ கைதாகி வேலூர் சிறையில் இருந்தார். தி.மு.க.-ம.தி.மு.க. கூட்டணி உருவாகியிருந்த நேரம். இதற்கான ஒப்பந்தத்தில் வைகோவிடம் கையெழுத்து வாங்கி வரச்சொல்லி என்னையும் துரைமுருகனையும் அனுப்பிவைத்தார் கலைஞர். சிறையில் சந்தித்து ஒப்பந்தக் கடிதத்தை அவரிடம் கொடுத்தபோது, அதனைப் படித்துக்கூடப் பார்க்காமல் கையெழுத்திட்டவர் வைகோ.
நாடாளுமன்றத் தேர்தலின்போது, வைகோவை சந்தித்து, "உங்கள் உடல்நலன் எனக்கு முக்கியம். இந்த நாட்டுக்கு முக்கியம். நீங்கள் மாநிலங்களவைக்குப் போகவேண்டும்' என்கிற என் விருப்பத்தைச் சொன்னபோது, அதை நிறைவேற்றினார் வைகோ. இந்தச் சமுதாயத்துக்காக அண்ணன் வைகோ தொடர்ந்து பணியாற்ற வேண்டும், பாடுபட வேண்டும், வாழவேண்டும்''’என்றார் உணர்ச்சிப்பூர்வமாக மு.க.ஸ்டாலின்.
விழாவில் பேசிய வைரமுத்து, "வைகோவின் ஆற்றலைப் பார்த்து வியந்து நிற்கிறேன். அவர் உரையாடுகிறபோது இருக்கிற தெளிவு, கண்களைப் பார்த்து பேசுகிற மாண்பு, உடல் மொழி இவைகளெல்லாம் எங்களுக்கு நம்பிக்கை தருகின்றன. கொள்கைத் தெளிவும், சிந்தனைத் தெளிவும் உடையவர். ஒரு தலைவனுக்கு முக்கியமான செய்தி என்ன தெரியுமா? பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு, அவனது வாழ்நாளில் என்ன பதிவு இருக்கிறது என்பதுதான். ஒரு உச்ச மனிதனின் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு மணித்துளிக்கும் பதிவு இருப்பது நம் வைகோவுக்கு மட்டுமே! எங்கள் தலைவனுக்கு அங்கீகாரம் இல்லையே என்று பல பேர் கருதலாம். ஆனால், பொழிகிற மேகத்தை யார் அங்கீகரிப்பது? நதியின் ஓட்டத்தை யார் அங்கீகரிப்பது? சூரியனின் வெளிச்சத்தை யார் அங்கீகரிப்பது? பொது வாழ்க்கையில், ஒரு பதவியை பெற்றுவிடப் போராடுவது ஒரு வகை. வைகோவின் வாழ்க்கையோ அதையெல்லாம் தாண்டியது. உழைத்துக்கொண்டே இருப்பேன்; அதிகாரம் என்னை விரும்புகிற வரைக்கும் அதிகாரத்தை நான் விரும்பமாட்டேன் என வாழ்கிற வாழ்க்கை வைகோ வுடையது''‘என்றார்.
ஆசிரியர் கி.வீரமணி பேசும்போது,’"டெல்லியில் பெரியார் மையம் உயர்ந்து நிற்கிற தென்றால் அதற்கு வைகோ தான் காரணம். அதற்கு எப்படி நாங்கள் கைமாறு செய்யப் போகிறோம்? தந்தை பெரியாருக்கு நீங்கள் செய்த மரியாதை இருக்கிறதே… அது வரலாற்றையும் கடந்த ஒரு ஆவணம். எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் உங்களின் அடக்க உரை மூலம், ஆற்றல் மூலம் அதை உடைத்தெறிவீர்கள். வர லாற்றுக்கு வரலாறு படைப் பவர் வைகோ''’என்றார் அழுத்தமாக.
வி.சி.க. தலைவர் திருமாவளவன் பேசும்போது, "வைகோவின் வரலாற்றை மிக ஆழமாக தொகுத்திருக்கிறார் துரை.வைகோ. அண்ணன் வைகோவின் போராட்டங்கள் ஒவ்வொன்றையும் ஒரு காவியமாக தொகுக்க முடியும். ஆவணப்படுத்தில் காட்சிப் படுத்தப்பட்டவை பெரும் பாலும் எனக்குத் தெரிந் தவைதான். தெரியாதது ஒன்று இருக்கிறது. குருசாமி நாயக்கரை காப்பாற்றிய நிகழ்வு இருக்கிறதே...…என்னை மெய்சிலிர்க்க வைத்தது. ஒரு தலைவனின் போராட்டம் என்பது புகழுக்கோ விளம்பரத்துக்கோ அல்ல; மக்களின் மீட்சிக்கானது; மக்களின் விடுதலைக்கானது என்பதை உணர்த்தும் வகையில் இருந்தது அந்த நிகழ்வு. ஆவணப் படமென்றாலே அரை மணி நேரத்தில் போரடித்துவிடும். ஆனால், ஒன்றரை மணிநேர இந்த ஆவணப்படம், ஒரு திரைப்படம் போல் ஈர்ப்பைத் தருகிறது. தமிழினத்திற்காக, விடுதலைப்புலிகள் இயக்கத்திற்காக, கடுமையான ஒடுக்குமுறைகளைச் சந்தித்தவர் வைகோ. இந்த ஆவணப்படம் பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு பாடம்'' என்றார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேசும்போது, "நான் அரசியலுக்கு வருவதற்கு அண்ணன் வைகோவின் உணர்ச்சிப்பூர்வமான பேச்சுதான் முதற்காரணம். அண்ணன் வைகோ முன்னெடுத்த அனைத்து போராட்டங்களிலும் களத்தில் நின்றேன். இந்த மண்ணுக்காக, மக்களுக்காக, இனத்துக்காக ஒரு கட்சியிலிருந்து வெளியேறி தனிக்கட்சி என ஒரு சிறிய இயக்கத்தை கட்டியமைத்து நான் போராடுகிறேன் என்றால் அதற்கு உந்து சக்தி அண்ணன் வைகோதான்''’என்று தொடங்கி, வைகோவுக்கும் அவருக்கு மிடையிலான பல்வேறு அரசியல் சம்பவங்களை நினைவுகூர்ந்தார் வேல்முருகன்.
ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா பேசும்போது, "சத்தியத்தின் பாதையில் லட்சியப் பயணத்தை மேற்கொண்டதன் காரணமாகத்தான் நிஜ ஹீரோவாக இருக்கிறார் அண்ணன் வைகோ. மேடைப் பேச்சு என்பது சாதாரணமானது அல்ல. மக்களை ஈர்க்கக்கூடியதாக, கவரக்கூடியதாக இருக்க வேண்டும். கருத்துக்களை ஆழமாக பதிய வைக்கவேண்டும். அதை மோனோ ஆக்டிங்கா நடித்துக் காட்டவேண்டும். அப்படிப்பட்ட சிறந்த ஆற்றல் வைகோவுக்கு உண்டு. மாநில உரிமைகள், தமிழர் நலன், மக்கள் ஜனநாயகம் ஆகியவை வைகோவின் உயிர் மூச்சு. மக்கள்விரோத அரசை, பாசிச அரசை எதிர்ப்பதில் அவரது குரல் நாடாளுமன்றத்தில் கம்பீரமாக ஒலித்தது. அந்த கம்பீரமான குரல் இன்னும் பல்லாண்டுகள் ஒலிக்க வேண்டும்''” என்றார்.
சி.பி.ஐ. மாநில செயலர் முத்தரசன் பேசும்போது, "மேடை பேச்சில் ஒரு சம்பவத்தை குறிப்பிடும்போது வெறும் சம்பவமாக பதிவு செய்யாமல் அது குறித்த வருடம், தேதி, நேரம், அதில் சம்மந்தப்பட்ட நபர்களின் பெயர்கள் உள்ளிட்ட அனைத்தையும் விவரித்து பேசுவது, வைகோவின் பதவியை அவர் பெரிதாக நினைத்ததில்லை. அவர் நினைத்திருந்தால் மத்திய அமைச்சராகியிருக்கலாம். அதற்கு நிறைய வாய்ப்பிருந்தது. ஒருபோதும் அவர் அதை விரும்பவில்லை. மாறாக தொண்டர்களை அமைச்சர்களாக்கி அழகு பார்த்தவர் வைகோ. தியாகம், உழைப்பு, நேர்மை, அர்ப்பணிப்பு… இதுதான் வைகோ''’என்றார் உணர்ச்சி மேலிட.
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது, "தமிழ்ச் சமூகத்துக்கு வைகோ கிடைத்திருப்பது மிகப்பெரிய வரப்பிரசாதம். வைகோ அவர்களுக்கு பல சிறப்புகள் உண்டு. அதில் தலையாய சிறப்பு என்பது, தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பதுதான். தலைவர் மூப்பனாருடன் நாங்கள் ஒன்றியிருந்த காலத்தில், வைகோவின் பேச்சினை அடிக்கடி கேட்பவர் மூப்பனார். அரசியலுக்கு அப்பாற்பட்டு வைகோ மீது பேரன்பு கொண்டிருந்தார். இந்த ஆவணப்படத்தில் மூப்பனார் எங்கேனும் வருகிறாரா என பார்த்தேன். வரவில்லை. தேர்தல் அரசியல் என்பது வேறு; சமுக சீர்திருத்த அரசியல் என்பது வேறு. தேர்தல் அரசியலில் சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். ஆனால், சமரசம் செய்துகொள்ளாமலே வெற்றி பெற்றவர் வைகோ''’என்றார்.
ஆவணப் படம் குறித்துப் பேசிய துரை.வைகோ, "இந்த ஆவணப்படத்தை தயாரிக்கும்போது பல நாட்கள் தூக்கத்தை தொலைத்திருக்கிறேன். பலமுறை அழுதிருக்கிறேன். இந்த மனிதரை நாம் பயன் படுத்திக்கொள்ள முடிய வில்லையே என்கிற அளவில் இந்த ஆவணப்படம் தாக்கத் தை ஏற்படுத்தும்''’ என்றார்.
இறுதியாக ஏற்புரை யாற்றிய வைகோ, "இப்படி ஒரு ஆவணப்படத்தை துரை. வைகோ தயாரிப்பது ஒரு மாதத்திற்கு முன்புவரை எனக்குத் தெரியாது. தெரிந் திருந்தால் இந்தத் தலைப்பை வைக்க சம்மதித்திருக்க மாட்டேன். மாமனிதர்கள் என்பவர் யார்? கார்ல்மார்க்ஸ், ஏங்கல்ஸ், வ.உ.சி., காந்தியடிகள், ஜவகர்லால் நேரு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், வால்டர் ரூசோ, ஆப்ரகாம் லிங்கன், மார்டின் லூதர் கிங், திலகர், நடேசனார், தியாகராயர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர்தான் மாமனிதர்கள். அவர்களைப் போல நான் எதையும் சாதித்துவிடவில்லை. எனது பொதுவாழ்க்கையில் எத்த னையோ துயரம் நிறைந்த அதிர்ச்சி தரும் சம்பவங்கள். அடுக்கடுக்கான ஆபத்துகள். அத்தனையும் கடந்து வந்திருக்கிறேன். அவற்றை ஆவணப் படமாக எடுப்பார் என நான் எதிர்பார்க்கவே இல்லை''’ என்றவர், சனாதான ஆபத்துக்கு எதிரான தனது ஆவேசத்தை உரத்துப் பேசினார் வைகோ.
ஆவணப் படம் திரை யில் முடியும்பொழுது, எல்லோர் நெஞ்சிலும் முதல்வர் ஸ்டாலின் கூறியது போல் ஒரு ரியல் ஹீரோவாக மாமனிதர் வைகோ நிழலாடினார்.