police

என்னதான் போலீஸ் கெடுபிடியான நடவடிக்கை எடுத்துவந்தாலும் கஞ்சா விற்பவர்கள் அதற்கும் மேலிருக்கிறார்கள். காப்பானைவிட கள்ளன் பெரிது என பல சமயம் நிரூபித்தும்விடுகிறார்கள். தென்காசி மாவட்டத்தில் கஞ்சா விவகாரத்தில் கைப்பற்றப்பட்ட பணம், ஏட்டுக்கு அரிவாள் வெட்டு விழக் காரணமாயிருக்கிறது.

Advertisment

தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம் காவல் சரகத்தில் வருகிற சிவலார்குளம் கிராமத்தின் கஞ்சா விற்பனையாளர்களின் விஷயம் தெரியவந்தாலும், அந்தக் காவல் நிலையம் மெத்தனப் போக்கிலிருந்திருக்கிறது. தகவல் கொடுத்ததால் நம் கதி அதோடு முடிந்தது என்ற அச்சத்தில் பொதுமக்கள் தரப்பிலிருந்து தகவலும் போவதில்லையாம்.

இந்நிலையில் அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகளின் நெருக்கடி காரணமாக மே-29 அன்று கஞ்சா கும்பலைக் குறிவைத்து சிவலார்குளத்தி-ருக்கும் முத்தையா என்பவரது வீட்டிற்கு ஆலங்குளம் காவல்நிலையத்தின் ஆய்வாளர் மாதவன், எஸ்.ஐ. கோவிந்த்ராஜ் மற்றும் போலீசார் போயிருக்கிறார்கள் குறிப்பிட்ட அந்த வீட்டைச் சோதனையிட்டதில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 3 கிலோ ஆந்திரா கஞ்சா சிக்கியதைக் கைப்பற்றியவர்கள், அதற்காகப் பயன்படுத்தப்பட்ட பைக் மற்றும் 2 லட்சம் ரொக்கம், வங்கி பாஸ்புக்கை கைப்பற்றியிருக்கிறார்கள். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், முத்தையாவின் மகன்களான மகேஷ், பெர்-ன், கஜேந்திரன், அவர்களின் உறவினரான நவீன் உள்ளிட்ட நான்கு பேரையும் கைதுசெய்து அவர்களை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்திருக்கின்றனர்.

Advertisment

இந்தச் சூழ-ல் தம்பிகள் கைதுசெய்யப்பட்டு உள்ளே தள்ளப்பட்ட தகவல் வெளியூரி-ருந்த அவர்களின் மூத்த சகோதரனான கல்யாணசுந்தரத்திற்குப் போயிருக்கிறது. மறுகணம் அவசர அவசரமாக ஊர் திரும்பியவர் நடந்தவற்றைக் கேட்டறிந்து பதற்றம் தணியாத நிலையில், தனது தந்தை மற்றும் வழக்கறிஞருடன் அன்றைய இரவு ஆலங்குளம் காவல் நிலையத்திற்குப் போயிருக்கிறார். அதுசமயம் அங்கிருந்த போலீசாரிடம் விவரமாகப் பேசிய கல்யாணசுந்தரம், ""நாங்கள் நெருக்கடி காரணமாக வீடு கட்டுவதற்காக 12 லட்சம் வைத்திருந்தோம். அதற்கான ஆதாரமுமிருக்கிறது. நீங்கள் உங்கள் எப்.ஐ.ஆரில் 2 லட்சம் மட்டுமே கைப்பற்றியதாகக் கணக்குக் காட்டியுள்ளீர்கள். மீதிப் பணம் எங்கே? 2 லட்சத்தை வைத்துக்கொண்டு எங்களுடைய 10 லட்சம் பணத்தைத் தாருங்கள்'' என்று கேட்டிருக்கிறார்.

""ஒங்க வீட்ல 2 லட்சம் மட்டுமே இருந்தது. அதைத்தான் கைப்பற்றி வந்தோம்''’என்று பதில் சொன்ன போலீசாருக்கும் கல்யாணசுந்தரத்திற்கிடையே கடும் வாக்குவாதம் முற்றிப்போகவே அங்கிருந்த போலீசார் சிலர் கல்யாணசுந்தரத்தைச் சமாதானப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள். ஆனாலும் ஆத்திரம் பதைபதைப்பு தணியாத கல்யாண சுந்தரம், ""எம் பணம் எனக்கு வரல, நடக்கறதே வேற''ன்னு’ஓங்கிய குர-ல் கத்திவிட்டு வெளியேறியிருக்கிறார்.

அன்றைய தினம் இரவு 12 மணிவாக்கில் தனது உறவினரான நிர்மல்குமாருடன் பைக்கில் வந்த கல்யாணசுந்தரம் ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு ஹோட்டலின் முன்பாக நின்று நண்பருடன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டு தங்கத்துரை, கல்யாணசுந்தரம் நிற்பதைப் பார்த்திருக்கிறார். ஒருவகையில் கல்யாணசுந்தரம் தனது பக்கத்து கிராமம், அதோடு தன் நண்பர் என்பதால் பழக்கம்பொருட்டு அவர் அருகே வந்தவர், ""“என்ன கல்யாணசுந்தரம் இந்த நேரத்தில இங்க''ன்னு“ சகஜமாக கேட்டிருக்கிறார். ஏற்கனவே தன்னுடைய வீட்டுப் பணம் 12 லட்சம் பறிபோக காவல் நிலைய போலீசார் காரணமானதால் அவர்கள் மீது ஆத்திரத்தி-ருந்த கல்யாணசுந்தரம் பதிலே சொல்லாமல், திடீரென்று... தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தங்கத்துரையின் தலையில் வெட்டிவிட்டு பைக்கில் நண்பருடன் தப்பிச்சென்றிருக்கிறார். தங்கத்துரையின் அலறல் சத்தம் கேட்டு வந்த சக போலீசார் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர்.

போலீஸ் ஏட்டு வெட்டப்பட்ட சம்பவம் அந்த இரவிலும் நகரை அதிரவைக்க, தப்பிய கல்யாணசுந்தரத்தை மறுதினம் மாலை மடக்கியிருக்கிறார்கள். தப்பிய அவரின் கூட்டாளியான நிர்மல்குமார் தேடப்பட்டு வருகிறார்.

இது குறித்து விளக்கமறிய ஆலங்குளம் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் டி.எஸ்.பி.யைத் தொடர்புகொண்டபோது நமது அழைப்பை அதிகாரிகள் ஏற்கவில்லை. காவலர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் சுற்றுப்புற கிராமங்களில் பீதியைக் கிளப்பினாலும், ரெய்டிற்குச் சென்ற போலீசார், தடை செய்யப்பட்ட பொருட்களைப் பறிமுதல் செய்த நேரத்தில் உடன் பணம் தொடர்பானவற்றைக் கைப்பற்றும்போது உரிய நபர்களின் முன்னிலையில் ஆவணப்படுத்தாததால் இடியாப்பச் சிக்கலிருக்கிறது ஆலங்குளம் காவல் நிலையம்.