தென்மாநிலங்களை நோக்கி பிழைப்புக்காக வடமாநி லத்தவர்கள் வந்துகுவிவதைப் பயன்படுத்திக் கொண்டு திருட்டுக் கும்பல்கள் ஆதாய மடையப் பார்க்கின்றன. அப்படி வீடுகளை நோட்டம்விட்டு திருடிய ராஜஸ்தான் கும்பலைப் பற்றிய கதை தான் இது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரத்தன், ராம்பிரசாத், சங்கர், ராமா ஆகியோர் குடும்பத்தினருடன் திருச்சியில் தங்கியிருந்து சாலையோ ரங்களில் பல்வேறு தொழில்கள் செய்வதுபோலவும், போக்குவரத்து சிக்னலில் பிச்சை எடுத்து வாழ் வதுபோலவும் காட்டிக்கொண்டு, இருப்புப் பாதை அருகிலுள்ள பூட்டிய வீடுகளை நோட்ட மிட்டுள்ளனர். ஆட்கள் இல்லாதபோது வீட்டி லுள்ள பொருள்களைத் திருடி வந்துள்ளனர். இவர்கள் திருச்சி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 10 வழக்கு களில் சம்பந்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை செய்து, கடந்த டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட தொடர்விசாரணையில் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடிய ஒரு வாரத்திற்குள் ராஜஸ்தான் சென்று அங்கு திருட்டு நகை வாங்குபவர்களிடம் விற்றுள்ளதாகத் தெரிவித் துள்ளனர். இப்படியாக 10 நிகழ்வுகளில் சுமார் 254 சவரன் தங்க நகைகளும், 1 கிலோ வெள்ளிப் பொருட்களும் திருடப்பட்டுள்ளன.
இதையடுத்து, திருடப்பட்ட நகைகளை மீட்க கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி அமர்வு நீதிமன்ற குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர், சியாமளாதேவி நீதிமன்றம் மூலம் அந்த 4 பேரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டி பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்து, ஆணைபெற்று போலீஸ் காவலில் எடுத்துள்ளார். ரத்தன், சங்கர் ஆகியோருடன் கண்டோன்மென்ட உதவி ஆணை யர் கென்னடி தலைமையில் 2 ஆய்வாளர்கள், 1 உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் கள் அடங்கிய 15 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டு, திருடுபோன பொருட்களை மீட்க கடந்த 28-ஆம் தேதி ராஜஸ்தான் கிளம்பினர்.
ராஜஸ்தான் சென்ற தனிப்படையினர் பில்வாரா மாவட்டம் புலியாகலான் காவல் நிலையத்திற்கு மார்ச் 2-ஆம் தேதி சென்று, உள்ளூர் காவல் நிலைய 2 உதவி ஆய்வாளர் மற்றும் 3 காவலர்கள் உதவியுடன் புலியா பஜார் என்ற இடத்தில் திருட்டு நகைகளைப் பெற்றுவைத்திருந்த தன்சியா என்ற நபரிடமிருந்து, வழக்கு சொத்துக்களான 300 கிராம் தங்கத்தையும், லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் கடந்த 3ஆம் தேதி பறிமுதல் செய்துள்ளார்கள்.
திருட்டு நகைகளை வாங்கிய அஜ்மீர் மாவட்டம் ராமலயா கிராமத்தைச் சேர்ந்த சானியா என்பவரை பினாய் காவல் நிலைய உள்ளூர் காவலர்கள் உதவியுடன் பிடித்து விசாரித்தபோது, அவர் வழக்குச் சொத்தான 100 சவரன் தங்க நகைகளைத் திருப்பிக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார். பின்னர் உள்ளூர் காவல் அதிகாரிகளின் துணையுடன் ரத்தனின் வீட்டைச் சோதனையிட்ட தனிப்படையினர், அங்கிருந்த வழக்கு சொத்தான 2 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
அதன்பின்னர் சானியாவிடமிருந்து நகைகளை திரும்பப்பெறுவதில் காலதாமதம் ஆனதால், 5-ஆம் தேதி திருச்சிக்கு திரும்பிச் செல்ல முடிவெடுத்த தனிப்படையினர், மீட்கப்பட்ட வழக்கு சொத்துக்களுடன், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றுகொண்டி ருந்தபோது, சுமார் 11.30 மணிக்கு சானியாவின் சகோதரர் எனச் சொல்லிக்கொண்டு லட்சுமணன் என்பவர் தனிப்படையினரை அலைபேசியில் தொடர்புகொண்டு, திருடப்பட்ட தங்க நகை களுக்கு ஈடாக 25 லட்சம் ரூபாய் கொடுத்து விடுவதாகவும், அஜ்மீர் வந்து தொகையைப் பெற்றுச்செல்லும்படி தெரிவித்துள்ளார்.
அன்று மதியம் 2.30 மணிக்கு உதவி ஆணையர் கென்னடி, ஆய்வாளர் சியாமளாதேவி, ஒரு காவலர் ஆகியோரை, இரண்டு குற்றவாளிகளுடன் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டு, உறையூர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மோகன் தலைமையில் மீதமிருந்த தனிப்படையினர் அஜ்மீருக்கு புறப்பட்டுச்சென்று, மாலை 6 மணிக்கு லட்சுமணன் கூறிய இடமான ரயில்வே நிலையம் அருகில் சென் றிருக்கின்றனர். அப்போது அங்கிருந்த ராஜஸ்தான் மாநில ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திருச்சி தனிப்படையினரை வளைத் துக்கொண்டு விசாரணைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
திருட்டு வழக்கிலிருந்து தனது சகோதரியை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ. 25 லட்சம் தர வேண்டும் என தமிழ்நாடு காவல்துறையினர் மிரட்டு வதாக, லட்சுமணன் அதிகாரிகளிடம் பொய் யான தகவலைத் தெரிவித் ததன் பேரில், அதிகாரிகள் தனிப்படையினரை விசாரணைக்கு உட்படுத்தி யுள்ளனர்.
ராஜஸ்தான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட திருச்சி தனிப்படையினரை விடுவிக்க, தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ராஜஸ்தான் மாநில டி.ஜி.பி. உமேஷ் மிஸ்ராவிடமும், தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ராஜஸ்தான் மாநில நுண்ணறிவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி. செங்கதிரிடமும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.ஜி.பி., ராஜஸ்தான் மாநில லஞ்ச ஒழிப்புத் துறை ஏ.டி.ஜி.பி. ஹேமந்த் பிரியதர்ஷனிடமும் தொலைபேசியில் பேசி விளக்கியதும் தனிப்படை போலீசார் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து தனிப்படையினர் ராஜஸ்தானிலிருந்து புறப்பட்டனர்.
இதுகுறித்து விளக்கமளித்த திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்தியப்பிரியா, "தவறான புரிதல் காரணமாக ராஜஸ்தான் ஊழல் தடுப்பு அதிகாரிகள், தனிப்படை யினரை விசாரணைக்கு உட்படுத் தினர். உயர் அதிகாரிகள் உரிய விளக்கமளித்தபின் அவர்கள் புரிந்துகொண்டதும், அவர்களை அனுப்பிவைத்தனர்''’என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.