கடந்த செப்டம்பரில் தி.மு.க. அரசு நடத்திய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.வே பெரும்பாலான இடங்களில் அபாரமாக வெற்றிபெற்று, மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களை கைப்பற்றியது. இதனால் 2019-ல் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அது கைப்பற்றிய ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகளை கேட்ச்பண்ணும் வேலையை தொடங்கிவிட்டது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங் களில், அ.தி.மு.க. கூட்டணி 11 ஒன்றியங்களையும், தி.மு.க. கூட்டணி இரண்டு ஒன்றியங்களையும் வசப்படுத்தியிருந்தன. ஒரு ஒன்றியத்திற்கு (மங்களூர்) மட்டும் தேர்தல் நடத்தப் படாமல் இருந்தது. 2019 தேர்தலில் மங்களூர் ஒன்றி யத்தில் 24 கவுன்சிலர்களில் அ.தி.மு.க அணி 14, தி.மு.க அணி 10 என இருந்த நிலையில் சேர்ம னுக்கான மறைமுக ஓட்டெடுப்பில் அ.தி.மு.க 12, தி.மு.க 12 என சமமாக வந்ததால், குலுக்கல் சீட்டு போடுவதற்கு தி.மு.க வலியுறுத்திய நிலையில் அ.தி.மு.கவின் 14 கவுன்சிலர்களும் எதிர்த்தனர்.
இதனால் தேர்தலை மீண்டும் நடத்த அதிகாரிகள் முடிவு செய்ததற்கு எதிராக தி.மு.க உயர் நீதிமன்றத்தில் குலுக்கல்தான் போட வேண்டும் என்று வழக்கு தொடுத்ததால், 2 ஆண்டுகளாக சேர்மன் தேர்தல் நடத்தப் படாமலேயே இருந்தது. தற்போது தி.மு.க ஆட்சி அமைந்துள்ள நிலையில் அந்த வழக்கை தி.மு.கவினர் வாபஸ் வாங்கினர். சென்னை உயர் நீதிமன்றமும் அடுத்த 21 நாட்களுக்குள்ளாக சேர்மன் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
அதன்படி 10.11.2021 அன்று சேர்மன் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு முதல் நாளே மேல் ஆதனூர் அ.தி.மு.க கவுன்சிலர் ராமச்சந்திரன், கழுதூர் தே.மு.தி.க கவுன்சிலர் குள்ளன், தொழுதூர் சுயேச்சை கவுன்சிலர் ராஜேந்திரன் ஆகிய 3 பேரும் தி.மு.க மாவட்ட செயலாளரான அமைச்சர் கணேசன் முன்னிலை யில் தி.மு.கவில் சேர்ந்ததால், தி.மு.க அணியின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. தி.மு.க வேட்பாளரின் வெற்றி உறுதியானது. அடுத்த நாள் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க வேட்பாளர் சுகுணா சங்கர் 13 வாக்குகளும். அ.தி.மு.க வேட்பாளர் மலர்விழி இளங்கோவன் 11 வாக்குகளும் பெற, தி.மு.க சுகுணா சங்கர் சேர்மன் ஆகிவிட்டார்.
இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் நம்மிடத்தில், "கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுடன் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் காலியான இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம் 7-வது வார்டில் கவுன்சிலராக இருந்த அ.தி.மு.கவை சேர்ந்த மல்லிகாவும், அவரது கணவர் பாலதண்டாயுதமும் கொரோனாவால் அடுத்தடுத்து உயிரிழந்ததையடுத்து, இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தல் பிரச்சாரத்தின் போதே தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான கணேசன், "இங்கே தி.மு.க. ஜெயித்தால் தி.மு.க. யூனியன் சேர்மனை பிடிக்கும். மக்களுக்கு நல்லது நடக்கும்'' என்றார். அவர் சொன்னபடியே இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது.
விருத்தாசலம் ஒன்றியத்திலுள்ள 19 கவுன்சிலர்களில் தற்போது அ.தி.மு.க. 4, பா.ம.க. 4, பா.ஜ.க. 1, பா.ஜ.க. ஆதரவு சுயேட்சை 1, தே.மு.தி.க. 1, மேலும் ஒரு சுயேட்சை மற்றும் மறைந்த அ.தி.மு.க. கவுன்சிலர் என 13 கவுன்சிலர்கள் ஆதரவோடு அ.தி.மு.க. சேர்மனாக செல்லதுரையும், துணை சேர்மனாக பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் சுரேஷின் தாயார் பூங்கோதையும் இருந்து வருகிறார்கள்.
இடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு அமைச்சர் கணேசன் இதனை சவாலாக எடுத்துக்கொண்டு வெற்றிபெற்ற தி.மு.க. கவுன்சிலரோடு 5 பேர் உள்ளதால் மேலும் 5 கவுன்சிலர்களை வளைத்து விட்டால் சொன்னபடி தி.மு.க சேர்மேன் ஆக்கி விடலாம் என கணக்குப் போட்டு காய் நகர்த்த தொடங்கியுள்ளார்.
தற்போது அ.தி.மு.க. தரப்பிலிருந்தே ஒரு கவுன்சிலரை தி.மு.க.வுக்கு இழுத்துவிட்டார் கணேசன்.
ராஜேந்திரப்பட்டினத்தை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர் தனம் சிவலிங்கம் கடந்த 31-ஆம் தேதி காலை அமைச்சர் கணேசன் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்க்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து எப்பாடுபட்டாவது விருத்தாசலம் யூனியனை கைப்பற்றியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு மேலும் சுயேட்ச்சைகள், பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க. என பல தரப்பு கவுன்சிலர்களை இழுக்க, காய் நகர்த்தி வருகிறது தி.மு.க.
இதேபோல் நல்லூர் ஒன்றியத்திலுள்ள 21 கவுன்சிலர்களில், அ.தி.மு.க. 7, பா.ம.க. 2, அ.தி.மு.க. ஆதரவு சுயேட்சைகள் 3 என 12 கவுன்சிலர்கள் ஆதரவோடு பா.ம.க.வை சேர்ந்த செல்வி ஆடியபாதம் சேர்மனாகவும், அ.தி.மு.க.வை சேர்ந்த ஜான்சிராணி தங்கராஜ் துணை சேர்மனாகவும் உள்ளனர். கடந்த மாதம் 25-ஆம் தேதி ஒன்றிய நிர்வாகக்குழு சாதா ரண கூட்டம் நடத்த அறிவிப்பு வெளி யானது. ஆனால் அன்றைக்கு ஒன்றிய சேர்மன் செல்வி, துணை சேர்மன் ஜான்சிராணி, அ.தி.மு.க பச்சமுத்து, முத்து, பா.ம.க. செல்வக்குமார் என 5 பேர் மட்டுமே கலந்து கொண் டனர். போதுமான உறுப்பினர்கள் பங்கேற்காத தால் அந்த கூட்டத்தை அடுத்து வரும் 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் கள். இதனையறிந்த அருண்மொழிதேவன், அ.தி.மு.க கவுன்சிலர்களை அழைத்து 'இப்படியெல் லாம் நடந்து கொள்ளக் கூடாது. எந்த வகையிலும் தி.மு.க சேர்மனை பிடிப்ப தற்கு நாமே வழி ஏற்படுத் திக் கொடுக்கக்கூடாது' என்று கூறியிருக்கிறார். ஆனாலும் கடந்த 9-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் ஆதரவு கவுன்சிலர்கள் 9 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 12 பேர் புறக்கணித்தனர். இதனால் இங்கும் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது தி.மு.க.
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அ.தி.மு.க மற்றும் பா.ம.க. சேர்மன்களை கவிழ்க்க தி.மு.க. காய் நகர்த்துகின்ற அதேசமயத்தில், தங்கள் தரப்பு பதவி களை எப்படி காப்பாற்றிக்கொள்வது என அ.தி.மு.க.வும் பா.ம.க.வும் பரிதவித்தபடி விழி பிதுங்கி நிற்கின்றன.