டீக்கடைகள் போல் மூலை முடுக்கு களெல்லாம் சூதாட் டம் பெருகி வரு கிறது என்ற தகவல் கிடைக்கவே விசாரணையில் இறங்கினோம்.
"திண்டுக்கல் அருகேயுள்ள செட்டிநாயக் கன்பட்டி அருகேயிருக்கும் காட்டுத் தோட்டத்து வீட்டில் தினசரி இரவு பகல் பார்க் காமல் 50-க்கும் மேற்பட்டோர் கார் டூவீலர் களில் வந்து வெட்டுச்சீட்டு சூதாட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். இப்படி வரக்கூடிய சூதாட்டக்காரர்கள் ஐயாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை வைத்து ஆட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.
இதனால் ஒரு நாளைக்கு 20 லட்சம் முதல் 50 லட்சம் வரை சூதாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சூதாட்டத்தில் கடை வியாபாரிகள், விவசாயிகள், பைனான்சியர்கள், லாரி டிரைவர்கள், லோடுமேன்கள் உள்பட சிறு வியாபாரிகளும் கலந்துகொண்டு பல ஆயி ரங்களை வைத்து விளையாடி வருகிறார்கள். இதில் பலரும் பணத்தைப் பறிகொடுத்துவிட்டு புலம்பியபடி செல்கிறார்கள்.
பணத்தை இழந்த சூதாட்டக்காரர்கள் சிலர் மனதளவில் பாதிக்கப்பட்டு போதைக்கு அடிமையாகித் திரிகிறார்கள். இப்படி வெட்டுச்சீட்டு சூதாட்டம் விளையாட வரும் சூதாட்டக்காரர்களுக்கு சரக்கு வாங்கிக் கொடுத்து விளையாட வைத்து உசுப்பேத்தி விடவும் இங்கு ஆட்கள் இருக்கிறார்கள்.
இப்படி பட்டப்பகலில் வெட்டுச்சீட்டு சூதாட்டம் கொடிகட்டிப் பறப்பதைக் கண்டு அப்பகுதியிலுள்ள குளத்தூர், சீலப்பாடி, தாடிக்கொம்பு, வேடசந்தூர் உட்பட சில பகுதிகளிலிருந்து சூதாட்டக்காரர்கள் படையெடுத்து வருகிறார்கள். இதையெல் லாம் தடுக்கவேண்டிய தாடிக்கொம்பு காவல்நிலையத்தைச் சேர்ந்த காக்கி கள், சூதாட்டத்தை முன்னின்று நடத்தும் குமார் தரும் சில்லறை ஆதாயத்துக்கு ஆசைப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் அப்பாவிகள் பல ஆயிரங்களை இழந்துவருகிறார்கள்.
ஆளுங்கட்சிகாரங்கன்னு சொல்லி திண்டுக்கல் பைபாஸ் பகுதியில் இருக்கும் கிழக்கு மீனாட்சிநாயக்கன் பட்டி அருகே ஒரு தனியார் காம்ப்ளக்சில் பகிரங்கமாகவே பல ஆயிரங்களை வைத்து வெட்டுச்சீட்டு நடந்துவருகிறது. அதேபோல் திண்டுக்கல் நகர்ப் பகுதியிலுள்ள கோவிந்தா புரம், நாகல் நகர், பஸ் ஸ்டாண்டு உள்பட சில பகுதிகளிலும் காக்கிகளுக்கு மாமூல் கட்டிக்கொண்டு மறைமுகமாக சூதாட்டம் நடத்திவருகிறார்கள். இப்படி குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, வத்தலக்குண்டு, கொடைக்கானல், கொடைக் கானல் மேல்மலைப் பகுதிகளில் சூதாட்டம் படுஜோராக நடந்துவருகிறது.
இதுசம்பந்தமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப்பிடம் கேட்டபோது, “"பணம் வைத்து சூதாடியதாக 28 பேரை கைதுசெய்து, அவர்களிடமிருந்து சில லட்சங்களை பறிமுதல் செய்திருக்கிறோம். ஒரு தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் அதிரடி நடவடிக்கை எடுத்து இந்த சூதாட்டத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றார் உறுதியாக!
-சக்தி