ஆட்சியர் வழங்கிய இலவச வீட்டுமனைப் பட்டா ஊர் பொதுக்குளத்தில் இருப்பதோடு, அந்த இடத்திற்கு வீட்டுவரி ரசீது வழங்கிய அவலம் நாகை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
நாகை மாவட்டம் திருமருகல் அருகேயுள்ள உத்தூரைச் சேர்ந்தவர் மாதவன். இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள். தினசரி கிடைக்கும் வேலையைக் கொண்டு ஜீவனம் செய்துவரும் மாதவனுக்கு குடியிருக்க சொந்தமான இடமோ, வீடோ இல்லை. மாதவனின் தந்தை காலத்திலும் இதேநிலைதான். மாதவனும் அவரோடு உடன்பிறந்தவர்களும் திருமணமானதும் வாடகை வீட்டில் இருந்துவந்துள்ளனர்.
கொரோனா பலரது வாழ்க்கையில் விளையாடியதுபோல மாதவன் குடும்பத் திலும் விளையாடிவிட்டது. வீட்டிற்கு வாடகை கொடுக்கமுடியாமலும், இரண்டு வேளை உணவுக்கும், பிள்ளைகளை வளர்க் கவும் போராடி மீண்டும் ரோட்டோரமே வந்துள்ளார். இந்தச் சூழலில் இலவச மனையும், குடியிருக்க வீடும் வழங்கக்கோரி நாகை மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனுகொடுத்து வந்தனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் அம்பல் ஊராட்சியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், நாகை ஆட்சியர் அருண்தம்புராஜ் பத்துக்கும் மேற்பட்டோருக்கு இலவச பட்டா வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் மாதவன், சசிகலா தம்பதிக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆட்சியரால் வழங்கப் பட்ட பட்டாவுக்கு உரிய இடம் எங்கிருக் கிறது என்று தெரியாமல் பலமுறை நாகை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மாதவன் நடையாய் நடந்துள்ளார். மாதவனுக்கு வழங்கிய பட்டாவின் சர்வே எண்ணைக் கொண்டு ஆய்வுசெய்த அதிகாரிகளோ உங்களுக்கு வழங்கிய பட்டாவிற்கு உரிய இடம் குளத்தில் இருக்கிறது எனக் கூறி தலை யில் இடியை இறக்கியுள்ளனர். இதற்கிடையில் ஊராட்சிமன்றத் தலைவரோ, அந்தப் பட்டாவிற்கு வீடு இருப்பதாகக் கூறி வீட்டுவரி ரசீதும் கொடுத்துள்ளார் என்பதுதான் வேதனையின் உச்சம்.
இதுகுறித்து மாதவன் கூறுகையில், "கொரோனாவால் வாழவழியின்றி செத்துட லாம்னு நினைச்சேன். மூன்றும் பெண் பிள்ளைகளா இருக்கு. நல்லா படிக்கிற பிள்ளைங்க. அதுங்களுக்காக வாழணும்னு நானும் என் மனைவியும் கிடைக்கிற வேலைகளைச் செய்து, அதுல வர்ற வரு மானம் சாப்பாட்டுக்கே சரி யாகிடுது. எங்களால வாழவே முடியலன்னுதான் வீட்டு மனையும் வீடும் கேட்டோம். வருவாய்த் துறையினர் சரியாக ஆய்வுசெய்யாமல் ஊர் பொதுக் குளத்தில் எனக்கு பட்டா வழங்கியிருக்காங்க. அந்த இடத்திற்கு வீட்டு வரி ரசீது போட்டும் கொடுத் திருக்காங்க. மாற்று இடம் கேட்டு நடையா நடந்துட் டோம். மாற்றித் தரமாட்டேங் குறாங்க. மூன்று பெண் குழந் தைகளை வச்சிக்கிட்டு ரொம்ப சிரமப்படுறோம்'' என்கிறார்.
மாதவனின் மனைவி சசிகலாவோ, "இப்ப இருக்கிற இடத்துல ராத்திரியில் நிம்மதியா தூங்கி பல வருஷம் ஆச்சுங்க. கரண்டு வசதி, குடி நீர் வசதி கிடையாது. துணி துவைக்கக்கூட ஒரு கிலோ மீட்டர் போகணும். பாம்பு, பூச்சி பொட்டுக்கு ஒருபுறம் பயந்தாலும், மூணு பொம் பளப் பிள்ளைகளை வச்சிக் கிட்டு பாதுகாப்பு இல்லாம வாழறோம். இலவசமா எத்தனையோ பேருக்கு பட்டா வழங்கியிருக்காங்க. எங்களுக்கு குளத்துல கொடுத் திருக்காங்க. இப்ப கொடுத்த பட்டாவையும் வாங்கிட்டுப் போயிட்டாங்க''’என்கிறார்.
நாகை வட்டாட்சியர் ராஜசேகரிடம் இது குறித்து கேட்டோம், "விசாரிக்கச் சொல்லி யிருக்கிறோம், ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்கிறார். நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜிடம் இதுகுறித்து கேட்டோம், "இதுமுற்றிலும் தவறானது. அந்த இடம் நத்தம் பட்டா. நீர்நிலை இல்லை'' என்கிறார்.
நாகை வருவாய்த்துறை அதிகாரி ஒருவ ரிடம் பேசினோம், "முன்பிருந்த அலுவலர்கள் பட்டா வழங்கியுள்ளனர். இதுதொடர்பான புகார் குறித்து விசாரித்ததில் குளக்கரையில் உள்ளது. அந்த இடத்தில் வீடுகட்டி வசிக்க முடியாது என்று அவர்கள் கூறியதால் மாற்று இடம் வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். அதேநேரம் தற்போதைய மாவட்ட ஆட்சியர் நேர்மையாக இருக்கிறேன் என்கிற பேரில் அவசர கதியில் ஒவ்வொன் றையும் விளம்பரத்திற்காகச் செய்கிறார். எதையெடுத்தாலும் தனக்கு பேரும் புகழும் வரவேண்டும் என்கிற எண்ணத்தில் ஒவ்வொரு வேலையையும் அவசரப்படுத்துகிறார். மாதவனுக்கு வழங்கிய பட்டாவைப்போல நிறைய பேருக்கு இருக்கு, இனிமேல்தான் வெளியே வரும்''’என்கிறார்.
சர்வே செய்ய வந்த ஒரு அதிகாரி குளம் என் கிறார், மற்றொரு அதிகாரி குளக்கரை என் கிறார், ஆட்சியரோ நத்தம் புறம்போக்கு என் கிறார். வட்டாட்சியரோ மாற்று இடம் பார்க் கிறோம் என்கிறார்.… ஏன் இத்தனை குழப்பம்? எப்போது முடியும் இந்தக் குழப்பம்?!