கடந்த ஜூலை 17-19ஆம் தேதி நக்கீரனில், "கோடிகளில் மோசடி! திண்டுக்கல் மாநகராட்சி அவலம்!' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். செய்தி வந்தவுடனே மாநகராட்சி பரபரப்பாக, கமிஷனர் ரவிசந்திரன் உடனடியாக எஸ்.பி.க்கு ஆடிட்டர் ரிப்போர்ட்டை அனுப்பி வைத்தார். அதைத் தொடர்ந்து எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றவியல் போலீசார் அதிரடியாகக் களமிறங்கி மாநகராட்சி பணமான ரூ.4 கோடியே 66 லட்சத்தை கையாடல் செய்த கேசியர் சரவணனை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து மாநகராட்சிக்குள் நுழைந்த காக்கிகள், கேசியர் அலுவலகத்தை ஆய்வு செய்துவிட்டு தணிக்கைக் குழுவிடம் விசாரணை செய்தனர். அதேபோல் கண்காணிப்பாளராக இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சாந்தி, கண்காணிப்பாளர் பதவியோடு கணக்குப் பிரிவு, உதவி வருவாய் அலுவலர் என வருவாய் வரக்கூடிய மூன்று பிரிவிலுமே பணிபுரிந் துள்ளதால் அப்பிரிவு களிலுள்ள அலுவலர்களிட மும் விசாரணை செய்தனர். அதுபோல் கேசியராக இருந்து சஸ்பெண்ட் செய் யப்பட்ட சதீஷை பற்றியும் விசாரணை செய்துள்ளனர். காக்கிகளின் விசாரணை தொடர்கிறது.
மேலும், ஆடிட்டர்களான செந்தில்குமார், சரவணன், சோபனா ஆகியோர், மக்களின் வரிப்பணத்தை கையாடல் செய்த ஊழியருக்கு துணை போயிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டியிருந்தோம். அதைத் தொடர்ந்து, செந்தில்குமார், சரவணன், சோபனா ஆகிய மும்மூர்த்திகளை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தி லுள்ள ஊரக வளர்ச்சித்துறைக்கு அதிரடியாக டிரான்ஸ்பர் செய்துள்ளார்கள். அதோடு துறைரீதியான விசாரணையும் நடத்தப்பட்டுவருகிறது. மற்றொரு பெண் ஆடிட்டரான மணிமேகலைக்கும் தொடர்புள்ளதாக பேச்சு வருகிறது. பேங்க் சலானையும், அக்கவுண்டையும் சரிபார்த்து, டிக் செய்து கொடுத்திருக்கிறாராம் என்ற பேச்சும் மாநகராட்சி அலுவலகத்தில் பேசப்பட்டு வருகிறது. மேலும், கண்காணிப்பாளர் சாந்தி சமீபத்தில் தான் கோபால் நகரிலிருக்கும் தனது வீட்டை புதுப்பித்து, இரண்டு மாடி கட்டியிருக்கிறார். அதுபோல் புது காரும், இடங் களும் வாங்கியிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. இதுபோல் சரவணனுடன் சில அலுவலர்களும் தொடர்பிலிருந்து லட்சாதிபதிகளாக மாறியிருக்கிறார்கள். அவர்கள்மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென்ற பேச்சும் மாநகராட்சி அலுவலகத்தில் எதிரொலிக்கிறது.
இது சம்பந்தமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப்பிடம் கேட்டபோது, "கமிஷனரின் புகாரின் அடிப்படையில் சரவணனை கைது செய்து விசாரணை செய்ததில், நான்கு, ஐந்து பேரை அவர் கூறியிருக்கிறார். அவர்களிடம் விசாரணை செய்ய இருக்கிறோம். அதில் அலுவலர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை தொடர்பிருப்பதாகவும் தெரிகிறது. மேலும் தேவைப்பட்டால் கோர்ட் மூலம் சரவணனை கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்யவும் தயாராக இருக்கிறோம்'' என்றார் உறுதியாக.
-சக்தி