அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் -கும்பகோணம் சாலையில் உள்ளது தா.பழூர் காவல் நிலையம். இந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி ஆயுதக்களம். இந்த ஊருக்கு அருகே ஓடும் செங்கால் ஓடைப்பகுதியில் சடலம் ஒன்று அரைகுறையாக எரிக்கப்பட்டுக் கிடப்பதாக அப்பகுதிக்கு ஆடு, மாடு மேய்க்கச் சென்றவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்றனர். அங்கு கிடந்த உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
உடலை ஆய்வு செய்ததில் விரலில் மோதிரம் ஒன்று அணிந்திருந்ததை போலீசார் கண்டனர். அந்த மோதிரத்தில் சிவா என்ற எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது. இந்த அடையாளங்களைக் கொண்டு காவல்துறை யினர் விசாரணையை முடுக்கிவிட்டனர். காவல் நிலையங்களில் காணாமல்போனவர்கள் பற்றிய புகார் குறித்து விசாரணை செய்தனர். அதில் தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த 30 வயது சிவா என்ற இளைஞர் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் காணாமல் போயுள்ளதாகத் தெரியவந்தது. எரிந்துகிடந்த உடலின் விரலில் அணிந்திருந்த மோதிரத்தை சிவாவின் உறவினர்களிடம் காட்டினர். மோதிர அடையாளத்தைக் கொண்டு எரிக்கப்பட்டது சிவாதான் என்பதை அவரது உறவினர்கள் உறுதிசெய்தனர்.
இதையடுத்து சிவா செங்கால் ஓடை பகுதிக்கு வரக் காரணம் என்ன? என விசாரணை செய்தனர். சிவா கும்பகோணத்திலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலைசெய்து வந்துள்ளார். அந்த நிதி நிறுவனம், வாகனங்கள் வாங்குகிறவர்களுக்கு தவணை முறையில் வட்டிக்கு கடன் வழங்கி வந்துள்ளது. அதில் சிவா கடன் வசூல்செய்பவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 28ஆம் தேதி கிராமத்திற்கு கடன் வசூல்செய்யச் செல்வதாக கூறிச்சென்றவர் பிறகு அலுவலகத்திற்கும் வரவில்லை, வீட்டிற்கும் வரவில்லை என்ற தகவல் கிடைத்தது. இதையடுத்து சிவாவின் செல்போன் எண்ணை ஆய்வுசெய்தனர். அதில் கடைசியாக கோடாலி கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவர் சிவா எண்ணிற்கு பேசியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கோடாலி கிராமத்திற்கு சென்று மகேஷ், அவரது மனைவி விமலாவை விசாரணை வளையத்தில் கொண்டுவந்தனர்.
விசாரணையில், கடந்த சில மாதங் களுக்கு முன்பு சிவா வேலை செய்யும் நிதி நிறுவனத்தில் மகேஷ் கடன் பெற்று கார் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். சில மாதங்கள் தவணைத் தொகையை நிறுவனத்திற்கு செலுத்திய மகேஷ் பிறகு தவணைத் தொகையைச் செலுத்தவில்லை. இதையடுத்து நிதி நிறுவனம் சிவாவிடம் கோடாலி கிராமத்தைச் சேர்ந்த மகேஷிடம் சென்று நிறுவனத்திற்குச் சேரவேண்டிய தொகையை வசூல்செய்யும் பணியை ஒப்படைத்துள்ளது.
நிறுவனத்தின் உத்தரவின்பேரில் வசூல்செய்வதற்காக அடிக்கடி கோடாலி கிராமத்திற்கு வந்துள்ளார் சிவா. மகேஷ் பணத்தை செலுத்தாமல் அலைக்கழித்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் சிவா செங்கால் ஓடையில் எரிக்கப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார். மகேஷ்மீது சந்தேகமடைந்த போலீசார்... மகேஷ், அவரது மனைவி விமலா இருவரிடமும் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் சிவாவை கொலைசெய்து எரித்ததாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அந்த வாக்குமூலத்தில், "சிவா தவணைத் தொகையை வாங்குவதற்கு அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். நாங்கள் பணம்செலுத்த காலதாமதம் செய்தோம். இதனால் கோப மடைந்த அவர் எங்களை அவமானப்படுத்திப் பேசினார். இதனால் அவர் மீது கோபமடைந்த நாங்கள் அவரை தீர்த்துக்கட்ட திட்ட மிட்டோம்.
கடந்த 28-ஆம் தேதி தவணைத் தொகையை செலுத்தத் தயாராக உள்ளதாக செல்போன்மூலம் பேசி கிராமத்திற்கு வரவழைத்தோம். அன்றிரவு எட்டு மணியளவில் எங்கள் வீட்டுக்கு முன்பு வந்து நின்றுகொண்டு சிவா குரல் கொடுத்தார். திட்டமிட்டபடி வீட்டு முன்பு நின்றுகொண்டிருந்த சிவாவை பின்புறமாக வந்து தடியால் தலையில் ஓங்கி அடித்தேன். நிலைகுலைந்து சிவா கீழே விழுந்தார். உடனே விமலா வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து வந்து எனது சகோதரி மகன்களான ராஜேஷ், விக்னேஷ் கையில் கொடுத்தாள். அவர்கள் கடப்பாரையால் சிவாவைத் தாக்கினர். இந்த தாக்குதலில் சிவா அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.
செங்கால் ஓடை பகுதியில் தயார் நிலையில் டீசல் மற்றும் பனை ஓலைகளை அடுக்கி வைத்திருந்தோம். இரவு நேரம் ஆள் நடமாட்டமில்லாதபோது, சிவாவின் உடலை அங்கே இழுத்துச்சென்று பனை ஓலைகளைப் போட்டு மூடி டீசலை ஊற்றி எரித்தோம். உடல் அடையாளம் தெரி யாத அளவிற்கு எரிந்த பிறகு நாங்கள் வீட்டுக்கு வந்துவிட்டோம். யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று உறுதியாக இருந்தோம். போலீசார் சிவா அணிந்திருந்த மோதிரம், செல்போன் தொடர்பை வைத்து எங்களைப் பிடித்து விட்டனர்''’என்று வாக்குமூலத்தில் தெரிவித் துள்ளனர்.
இதையடுத்து மகேஷ், அவரது மனைவி விமலா, மகேஷின் சகோதரி மகன்கள் ராஜேஷ் விக்னேஷ் ஆகிய நால்வர் மீதும் கொலைவழக்கு பதிவு செய்ததோடு கொலையில் சம்பந்தப்பட்ட மகேஷ், விமலா, ராஜேஷ் ஆகிய மூவரையும் கைதுசெய்துள்ளனர் தலைமறைவாக உள்ள விக்னேஷை போலீசார் தேடிவருகிறார்கள்.
-எஸ்.பி.எஸ்.