ஆசிரியர் கொலை
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட மீன வர்கள் நிறைந்த கடற்கரை கிராமம் மல்லிப் பட்டினம். இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சின்னமனை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் முத்துவின் மகள் ரமணி கடந்த 6 மாதங்களாகப் தற்காலிக தமிழ் ஆசிரியை யாகப் பணியாற்றிவந்தார். புதன்கிழமை காலை வழக்கம்போல பள்ளிக்கு வந்த ஆசிரியை ரமணி தனக்கு வகுப்பு இல்லாததால் ஓய்வறை யில் இருந்திருக்கிறார். அப்போது, அங்கு வந்த சின்னமனை கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் "இப்பவே என்கூட வா... வெளியே போய் திருமணம் செய்துகொண்டு வாழ்வோம்''’என்று கூற ரமணியோ, "என் வீட்டார் சம்மதிக்க வில்லை, அதனால் என்னால் உன்னைத் திருமணம் செய்ய முடியாது''’என்று கூறியிருக் கிறார். இந்நிலையில், தான் மறைத்து வைத்திருந்த மீன்வெட்டும் கத்தியால் ஆசிரியை ரமணியின் கழுத்து, வயிற்றுப் பகுதி என ஆழமாக 3 இடங்களில் குத்த, ஆசிரியை ரமணி ஓலமிட்டுக்கொண்டே சரிந்தார்.
ஆசிரியை கத்தியால் குத்தப்பட்டதும் சத்தம் கேட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் கதறிக்கொண்டு ஆசிரியையை மீட்டு மருத் துவமனைக்கு தூக்கிச்சென்றனர். ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு போகும் வழியில் ஆசிரியை ரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேநேரத்தில் ஆசிரியையை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற மதன்குமாரை அங்கிருந்த ஆசிரியர்களே பிடித் துக்கொண்டனர். உடனே சேதுபாவாசத்திரம் போலீசாருக்கு தகவல்கொடுக்கப்பட்ட நிலையில்... போலீசார் பள்ளிக்கு வந்து மதன்குமாரை கைது செய்தனர்.
விசாரணையில், “"நான் ரமணியைக் காதலித் தேன்... அவளும் என்னைக் காதலித்தாள். அவங்க அண்ணன் சம்மதிக்காததால் என்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்தாள். ஏமாற்றத்தில் கத்தியால் குத்தினேன்''’என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், சட்ட மன்ற உறுப்பினர்கள் பேராவூரணி அசோக் குமார், பட்டுக்கோட்டை அண்ணாதுரை ஆகியோர் ஆசிரியை உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். "ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படும்''’என்றார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
வக்கீலுக்கு அரிவாள் வெட்டு!
ஓசூரில் பட்டப்பகலில் கோர்ட் வளாகத்தில் வைத்து வக்கீல் கண்ணன், குமாஸ்தா ஆனந்தகுமாரால் வெட்டப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
இதன் பின்னணியை விசாரித்தோம். ஓசூர் நாமல்பேட்டையைச் சேர்ந்த குமாஸ்தா ஆனந்த குமார். இவர் தனது மனைவி சத்தியவதியை சட்டத்துறையைச் சார்ந்த படிப்பு படிக்க வைத்து வக்கீலாக்கியிருக்கிறார். ஓசூரில் கிரிமினல் வழக்குகளை எடுத்து நடத்திவருகிறார். ஓசூர் நீதிமன்ற வளாகத்துக்கு வரும் சத்தியவதியிடம் அறி முகமாகிய கண்ணன், சத்தியவதிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவது, வாட்ஸ்ஆப்பில் செய்தி அனுப்புவது என்று அவருடன் பழக முயன்றிருக்கிறார்.
இது நீதிமன்ற வட்டாரத்தில் பலருக்கும் தெரிந்திருக்கிறது. இந்நிலையில் இந்த விஷயம் தெரியவந்த ஆனந்தகுமார், மனைவியிடம் விவரம் கேட்டுக் கண்டித்ததுடன் உண்மையிலே கண்ண னுடன் பழக்கம் இல்லையென்றால் கண்ணனை செருப்பாலடித்துவிட்டு வருமாறு கூறியிருக்கிறார். இக்கட்டுக்கு ஆளான சத்தியவதி, நீதிமன்ற வளா கத்திலேயே வைத்து கண்ணனைக் செருப்பாலடித்து திட்டியிருக்கிறார். இதில் அவமானப்பட்டுப் போன கண்ணன், சில மாதங்கள் நீதிமன்ற வளாகத்துக்கே வராமலிருந்திருக்கிறார்.
சில மாத இடைவெளிக்குப் பின் நீதிமன்றம் வரத்தொடங்கிய கண்ணன், மீண்டும் சத்தியவதிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவது போன்ற வழக்கமான தொந்தரவுகளைத் தொடங்கியிருக்கிறார். மேலும், சத்தியவதியை தனியாகச் சந்தித்தபோது, "ஆனந்த குமாரை டைவர்ஸ் பண்ணிவிட்டு வா… நாம் கல்யா ணம் பண்ணிக்கலாம்''’என்பது போன்றெல்லாம் தெரிவிக்க, அதற்கு மறுப்புத் தெரிவித்து கண்டித்த சத்தியவதி, கணவர் வசம் கண்ணனின் நடவடிக்கை குறித்துத் தெரிவித்திருக்கிறார்.
இத்தனைக்குப் பிறகும், தொல்லை செய்யும் கண்ணன்மீது ஆத்திரமான நிலை யில்தான், கோர்ட் வளாகத்திலே வைத்து சரமாரியாக கண்ணனை வெட்டியிருக் கிறார். கண் உட்பட பல இடங்களில் ஆபத் தான வெட்டுக்கள் விழுந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்திருக்கிறார் கண்ணன். ஓசூர் 2-வது ஜூடிசியஸ் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சென்று சரணடைந்திருக்கிறார் ஆனந்தகுமார். கண்ணனின் காயங்கள் மிக மோசமாக இருப்பதால், அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகக்குறைவே என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. விவகாரத்தில் சத்தியவதியும் சம்பந்தப்பட்டிருப்பதால், அவரையும் போலீஸ் கைது செய்துள்ளது.
பெண் விவகாரத்தால், தஞ்சை, ஓசூர் பகுதியில் நடந்த கொலை மற்றும் கொலை முயற்சிகள் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
-இரா.பகத்சிங், கீரன்