பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்திய அரசு உளவு பார்த்ததாக எழுந்துள்ள புகார் குறித்து ஆய்வுசெய்ய தொழில்நுட்ப நிபுணர் குழு ஒன்றை அமைத்து உத்தர விட்டுள்ள உச்சநீதிமன்றம், "இன்னும் எட்டு வாரங்களுக்குப் பின் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்' என தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் இந்திய எதிர்க்கட்சியினர், ஊடகவியலாளர்கள், அமைச்சர்கள், போராளிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்களின் செல்போன்கள் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. அமைப்பு உருவாக்கிய பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக பிரச்சனை எழுந்தது. இதையெடுத்து பத்திரிகையாளர் இந்து என்.ராம், சசிகுமார், எடிட்டர்ஸ் கில்டு, கம்யூனிஸ்டு எம்.பி. ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்ட பலரும் உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து முறையான விசாரணை நடத்தவேண்டுமென மனுத் தாக்கல் செய்தனர்.

ss

கில்லி சாஃப்ட்வேர்

Advertisment

பெகாசஸ் மென்பொருள் குறித்தும் அதன் செயல்திறன் குறித்தும் முதலில் சுருக்கமாகப் பார்ப்போம்.

இஸ்ரேலைச் சேர்ந்த நிவ் கார்மி, ஷேலவ் ஹூலியோ, ஓம்ரி லேவி என்னும் மூன்று நிறுவனர் களின் முதலெழுத்தின் சுருக்கமே என்.எஸ்.ஓ. உலகமெங்கும் உள்ள 45 நாடுகளுக்கு இந்த என்.எஸ்.ஓ. நிறுவனம் பெகாசஸ் மென்பொருளை விற்றிருக்கிறது. இதுவரை உளவு அறிய உருவாக்கப்பட்டதிலே திறமைமிக்க மென்பொருள் பெகாசஸ். முந்தைய தலைமுறை தொலைபேசியிலே தகவல் தொடர்பை மேற்கொண்டது. ஆனால் செல் போன் வரவுக்குப் பின்பு தகவல்தொடர்பின் பரிமாணம் வேறொரு உயரத்துக்குச் சென்றது. இந்த பெகாசஸ் மென்பொருள், ஆன்ட்ராய்டு அல்லது ஐபோன் இரண்டிலும் செயல்படும் திறன்கொண்டது. பெகாசஸ் நிறுவப்பட்ட போனிலிருந்து குறுஞ்செய்தி, காணொலி, போன் உரையாடல், என்கிரிப்ட் செய்யப்பட்ட செய்திப் பரிமாறல் அனைத்தையும் உளவு பார்க்கமுடி யும். சம்பந்தப்பட்ட நபருக்குத் தெரியாமல் அவரது கேமராவை இயக்கி படமெடுக்கக் கூட முடியும் என்கிறார்கள்.

ss

Advertisment

பெகாசஸ் மென்பொருள் குறித்து ஆய்வு செய்துவந்த லாப நோக்கமற்ற ஊடக நிறுவனமான போர்ஃபிட்டன் ஸ்டோரிஸ் அமைப்பு, கடந்த ஜூலையில் உலக நாடுகளை எச்சரித்து ஒரு செய்தி வெளியிட்டது. அப்போதுதான் உலகமெங்கும் இந்த மென்பொருளால் 50,000 பேர் கண்காணிக்கப்படும் தகவல் வெளியானது.

நழுவிய மத்திய அரசு

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்யகாந்த், ஹிமா கோலி தலைமையிலான அமர்வின் மூலம் விசாரணை மேற்கொண்டது. இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

வழக்கின் தொடக்கநிலையில் ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றம், இந்திய அரசு பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்துகிறதா என கேள்வியெழுப்பிய நிலை யில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, ஆம் என்றோ, இல்லையெனவோ சொல்லாமல் இதுபோன்ற தகவல்களை பொதுவெளியில் வெளியிடுவது தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என நழுவலாக பதிலளித்தார். மேலும், இந்த விவகாரத்தில் தவறான தகவல் பரவுவதைத் தவிர்க்கும் வகையில் சிறப்புக் குழு அமைக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக அவர் கூறினார். தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது எனக் காரணம் கூறி, இந்திய அரசு விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்ய மறுத்துவிட்ட நிலையில், உச்சநீதிமன்றமும் விட்டுக் கொடுக்காமல் தேசநலன் சார்ந்த விஷயங்கள் தவிர்த்து மற்ற விஷயங்களை பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யுங்கள் என வலியுறுத்தியது.

dd

பின் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் போதிய விவரங்களை தெரிவிக்கவில்லையென உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

ஓங்கிக் குட்டிய உச்சநீதிமன்றம்

இந்நிலையில், அக்டோபர் 27-ஆம் தேதி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "பெகாசஸ் விவகாரத்தை உலகம் முழுக்கவே பல நாடுகள் தீவிரமாக எடுத்துக்கொண்டு, உண்மையை வெளிக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளன. எனவே இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்கமுடியாது.

பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவுபார்த்ததாகக் கூறப்படும் புகார் குறித்து மத்திய அரசு தெளிவான பதிலை அளிக்கவில்லை. விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்ய மறுக்கும் அரசு, நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் எனச் சொல்வது ஏற்கத்தக்கதல்ல.

dd

தொழில்நுட்பம், தனிமனிதரின் அந்தரங்க உரிமை, கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடியதாக இருக்கக் கூடாது. ஊடகங்களின் கருத்துச் சுதந்திரம், குடிமக்களின் அடிப்படை உரிமை ஆகியவற்றை பாதிக்கும் வகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்கக்கூடாது. எனவே புகார் குறித்து ஆய்வு செய்ய சுதந்திரமான தொழில்நுட்பக் குழு அமைக்கப்படுகிறது''’என்று குறிப்பிட்டனர்.

மேலும், மனுதாரர்கள் பெகாசஸ் உளவுபார்ப்பு குற்றச்சாட்டு குறித்து ஆராய சுதந்திரமான ஆய்வுக் குழு ஒன்றை அமைக்கவேண்டுமென கோரிக்கை எழுப்பியிருந்தனர். அதற்குமாறாக, மத்திய அரசு தானே ஒரு நிபுணர் குழுவை அமைத்து விசாரிப்பதாக ஒரு யோசனையை முன்வைத்தது. மத்திய அரசின் தலையில் குட்டி அந்த யோசனையை நிராகரித்தது உச்சநீதிமன்றம். சுயேட்சையான நிபுணர் குழு அமைக்கும்போது, பல்வேறு நபர்களும் தனிப்பட்ட காரணங்களாலும், தயக்கங்களாலும் உச்சநீதிமன்ற நிபுணர் குழுவில் இடம்பெறுவதைத் தவிர்த்ததையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

தொழில்நுட்ப நிபுணர் குழு

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் உண்மையா என அறிய அமைக்கப்படும் தொழில்நுட்ப நிபுணர் குழுவுக்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமைவகிப்பார். மத்திய அரசு தெளிவான நிலைப்பாட்டை எடுக்காதது, இவ்விவகாரத்தில் வெளி நாட்டு அமைப்புகளுக்கு உள்ள தொடர்பு, குடிமக்களை கண்காணிக்க வெளிநாட்டு அல்லது தனியார் அமைப்புகள் நியமிப்பதற்கான சாத்தியக்கூறுகள், குடிமக்களின் உரிமையை மத்திய- மாநில அரசுகள் பறித்துள்ள புகார், உண்மை அம்சங்களை ஆராய்வதற்குள்ள அதிகாரவரம்பு ஆகியவை குறித்து இந்தக் குழு ஆராயும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இக்குழுவில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அலோக் ஜோஷி, சர்வதேச மின்னணு தொழில்நுட்ப ஆணையத்தின் துணைக்குழு தலைவர் சந்தீப் ஓபராய் இருவரும் ரவீந்திரனுக்கு துணையாக நியமிக் கப்பட்டுள்ளனர். இணைய பாதுகாப்பு, டிஜிட்டல் தடயவியலில் நிபுணத் துவமுடைய குஜராத்தின் நவீன்குமார் சௌத்ரி, கேரளாவின் அமிர்தா விஷ்வ வித்யாபீட கல்லூரிப் பேராசிரியர் பிரபாகரன், மும்பை ஐ.ஐ.டி. கணினி அறிவியல் துறை பேராசிரியர் அஷ்வின் அனில் ஆகியோர் இக்குழுவின் மற்ற தொழில்நுட்ப நிபுணர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

pagues

பெகாசஸ் மென்பொருளால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள், 2019-ல் இந்தியர்கள் சிலரின் வாட்ஸ்-அப் கணக்கு முடக்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், மத்திய- மாநில அரசுகள் இத்தாலிய நிறுவனத்திடம் பெகாசஸ் மென்பொருளை வாங்கியதா என்பது போன்ற விவரங்களையும் ஆய்வு செய்ய நிபுணர் குழுவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பத்திரிகைச் சுதந்திரம் பாதுகாப்பு!

"கண்காணிப்படுகிறார் அல்லது உளவு பார்க்கப்படுகிறார் என்ற அச்சுறுத்தல் ஒரு நபர் தனது உரிமைகளைப் பயன்படுத்த முடிவுசெய்யும் விதத்தை பாதிக்கும். அத்தகைய நிலை சுய தணிக்கைக்கு வழிவகுக்கும். இது ஜனநாயகத்தின் முக்கிய தூணான பத்திரிகை சுதந்திரம் தொடர்பானதென்பதால் கவலையளிக்கிறது.

பத்திரிகைக்கு தகவல் அளிக்கும் நபர்கள் அல்லது அமைப்பு களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதே பத்திரிகைச் சுதந்திரத்துக்கான அடிப்படை நிபந்தனையாகும். அத்தகைய பாதுகாப்பு இல்லாதபோது பொதுமக்கள் மற்றும் பொதுநலன் தொடர்பான விஷயங்களில் ஊடகத்துறையினருக்கு சோர்ஸ்கள் உதவ இயலாமல் போய்விடும். அப்படியிருக்க, ஊடகத் துறையினரை உளவறியும் முயற்சிகள் ஜனநாயக நாட்டில் பத்திரிகை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது'' என நீதிபதிகள் ஊடகங்களுக்கு ஆதரவாகப் பேசினர்.

வன்முறை மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராகப் போராட ஓரளவு கண்காணிப்புத் தேவைப்படலாம். ஆனால் குடிமக்களின் அடிப்படை உரிமையும் அந்தரங்கமும் பாதிக்கப்படும்போது நீதிமன்றம் வாயைப்பொத்திக்கொண்டு பார்வையாளராக இருக்காது என தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, “"பிரதமர், தேசத்தைவிட மேலானவரல்ல. நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டும்''” என வலியுறுத்தியுள்ளார்.