வின் மற்றும் அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தராமலும், கட்சிப் பணிகளுக்குச் செலவழித்ததைத் திருப்பித் தராமலும், ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக விஜய நல்லதம்பி அளித்த புகார் மீதான வழக்கில், முன்ஜாமீன் கிடைக்காமல் தலைமறைவாகி, மாநிலம்விட்டு மாநிலம் ஓடி, காவல்துறையின் எட்டு தனிப்படையினருக்கும் 20 நாட்கள் ‘தண்ணி’ காட்டிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை, 5-ஆம் தேதி ‘கண்ணி’ வைத்துப் பிடித்தனர், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படையினர்.

6-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுவிடும் வாய்ப்பு இருந்தும், ஒருநாள் முன்னதாக ராஜேந்திரபாலாஜியின் தொடர் ஓட்டத்தை ‘ஸ்மெல்’ செய்து, கர்நாடகா - ஹாசன் பகுதியில் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்டார்.

rajendrabalaji

Advertisment

ராஜேந்திரபாலாஜி சிக்கியது எப்படி?

ஒவ்வொரு 30 கி.மீ.-க்கும் காரை மாற்றியபடியே இருந்த ராஜேந்திரபாலாஜி, விழுப்புரம், திருப்பத்தூர், தர்மபுரி, பெங்களூரு எனப் பயணித்தபடியே இருந்துள்ளார். சேஸிங் தகவலை முன்கூட்டியே அவருக்கு ‘பாஸ்’ செய்து ஒருசில காக்கிகளும் விசுவாசம் காட்டியிருக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அல்லது கட்சியின் முக்கிய பிரமுகர்கள், அவருடைய தலைமறைவு ஓட்டத்துக்கு உதவியுள்ளனர். குறிப்பாக, தர்மபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் நீட்டிய நட்புக்கரம் வலுவானது.

கே.பி.அன்பழகனின் டிரைவர் ஆறுமுகமும், பினாமி என்று சொல்லப்படும் பொன்னுவேலும், தர்மபுரி யிலிருந்து பெங்களூரு ரயில்நிலையம் வரை ராஜேந் திரபாலாஜியை அழைத்துச் சென்று டெல்லிக்கு அனுப்பிவைக்க முயற்சித்த சி.சி.டி.வி. பதிவை ஆய்வு செய்து, அவ்விருவரையும் பிடித்து விசாரித்தனர்.

அதேநேரம், டெல்லி செல்லவிருந்த பிளானை கேன்சல் செய்துவிட்டு, ஓசூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள சானமாவு கிராமத்தில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. செயலாளர் ராமகிருஷ்ணன் வீட்டில் ராஜேந்திரபாலாஜி தங்கியிருக்கிறார். அங்கிருந்து சிக்கப்பள்ளாப்பூர் சென்று ராமகிருஷ்ணனின் உற வினரான அனிஷா வீட்டுக்குப் போயிருக்கிறார்.

கோவில்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்ட ராஜேந்திரபாலாஜி, தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலுக்குச் சென்றுவிட்டு, நெஞ்சுச்சளி தொந்தரவு காரணமாக சிகிச்சை பெற மருத்துவ மனைக்கு காரில் கிளம்பியிருக்கிறார். ஆறுமுகம் மற்றும் பொன்னுவேல் அளித்த தகவலின் அடிப்படையில், பா.ஜ.க. ராமகிருஷ்ணனின் போனை ‘ட்ரேஸ்’ செய்தபடியே இருந்த தனிப்படை யினர், ஹாசன் பகுதியில் வைத்து ராஜேந்திரபாலாஜி யைக் கைது செய்தனர்.

மேலும், அவ ருக்கு அடைக்கலம் அளித்த ராமகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜிக்கு காரோட் டிய உதவியாளர் நாகேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய மூவரும் பிடிபட்டனர்.

rajendrabalaji

Advertisment

5-ஆம் தேதி

காலை 10 மணி: ஹாசன் பகுதியில் காவி வேட்டி மற்றும் டி ஷர்ட்டில் இருந்த ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தபோது, எதுவும் பேசாமல், போலீசாரின் காரில் அமர்ந்துள்ளார்.

மதியம் 12:45 மணி : கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில், கோவை தனிப் படையினர், விருதுநகர் மாவட்ட போலீசாரிடம் ராஜேந்திரபாலாஜியை ஒப்படைத்தனர்.

மாலை 5:45 மணி: காவல்துறை வாகனம் தமிழக எல்லையை அடைந்தது. தனிப் படையினர் கேட்ட கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்த ராஜேந்திரபாலாஜி, "கேரளா போனேன்; ஆந்திரா போனேன்...'’என்று, தான் பயணித்த மாநிலங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

இரவு 8:30 மணி: நாமக்கல்லில் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் டிபன் சாப்பிட அனுமதிக்கப்பட்டனர்.

6-ஆம் தேதி

நள்ளிரவு கடந்து 1-15 மணி: விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ராஜேந்திரபாலாஜி விசாரிக்கப்பட்டார். அவர் கார் டிக்கியில் வைத்திருந்த 500 ரூபாய், 2000 ரூபாய் கரன்ஸிக் கட்டுகள் மற்றும் உடமைகள் கணக்கிடப்பட்டன.

அதிகாலை 4-20 மணி: விசாரணைக்குப் பிறகு, ராஜேந்திரபாலாஜி மட்டும் மருத்துவப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

காலை 7-50 மணி: ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜேந்திரபாலாஜி, 15 நாள் ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளார்.

rrrr

தேடப்படும் குற்றவாளியான ராஜேந்திர பாலாஜிக்கு உதவியது பா.ஜ.க.வினர் என்பதாலோ என்னவோ, ஹாசனிலிருந்து பிடித்துவரப்பட்ட மற்ற மூவர் மீது வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இதே வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் விஜய நல்லதம்பி, ராஜேந்திரபாலாஜியின் உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகியோரை நெருங்கவே இல்லை. அதனால் தான், ராஜேந்திரபாலாஜியை மட்டுமே குறிவைத்து கைது செய்தது, அரசியல் காழ்ப்புணர்ச்சி என அ.தி.மு.க.வினரால் விமர்சிக்கப் படுகிறது.

ஆக, சிறை செல்லக்கூடாது என்ற ராஜேந்திரபாலாஜியின் மனக்கோட்டையைத் தகர்த்து, கைதியாக அவரைச் சிறைக்குள் தள்ளி பெருமூச்சுவிட்டுள்ளது தமிழகக் காவல்துறை!

-ராம்கி, அருண்பாண்டியன்

அட்டை மற்றும் படங்கள்: ராம்குமார்

_______________

பா.ஜ.க.வினரோடு கெமிஸ்ட்ரி!

இந்துக் கடவுளர்கள் மீது அதீத நம்பிக்கையுள்ள ராஜேந்திரபாலாஜி, நாடு முழுவதும் உள்ள பிரசித்திபெற்ற கோவில்களுக்குச் செல்லும் வழக்கம் உடையவர் என்பதாலும், பொதுவெளியில் இந்துமத ஆதரவுக் கருத்துகளை பகிரங்கமாக வெளிப்படுத்தி வந்ததாலும், பா.ஜ.க.வினரோடு ‘கெமிஸ்ட்ரி’ ஒத்துப்போய், தமிழகத்தில் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலும் அரசியலுக்கு அப்பாற்பட்ட தொடர்பில் இருந்துள்ளார். தனிப்படையினர் தன்னைத் தேடியபோதும், கோவிலுக்குச் செல்வதை அவரால் நிறுத்தமுடியவில்லை. பக்தி மார்க்கத்தில் அவருக்குள்ள ஈடுபாடு பிடித்துப்போனதால்தான், தலைமறைவாகி காவல்துறையால் தேடப்படுபவர் எனத் தெரிந்தும், பா.ஜ.க. செயலாளரான ராமகிருஷ்ணன் அடைக்கலம் அளித்ததற்காக பிடிபட்டிருக்கிறார்.

__________________

செல்லாக்காசு அரசியல்!

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரான ராஜேந்திரபாலாஜியை ஒரு செல்லாக்காசு ஆக்கிவிட வேண்டுமென்ற அரசியலைக் கையிலெடுத்து தீவிரம் காட்டிவரும் காவல்துறைக்கு, அவருடைய கைதால் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.வினரால் சட்டம்-ஒழுங்கு கெட்டு விடாதென்பது நன்றாகவே தெரியும். கைதான ராஜேந்திர பாலாஜி கண்முன்னே, அவரை ஆதரித்து வாழ்த்து கோஷமும், ஆட்சிக்கு எதிரான ஒழிக கோஷமும் அ.தி.மு.க.வினர் யாரும் எழுப்பிவிடக்கூடாதென, குவிக்கப்பட்ட போலீசார் கறாராகச் செயல்பட்டனர். ஆனாலும், "மாவீரன் கே.டி.ஆர். வாழ்க' என, ராஜேந்திரபாலாஜி விருதுநகருக்கு கொண்டுவரப் படுவதற்கு முன் சிலர் கோஷமிட்டதை, விருதுநகரில் கேட்க முடிந்தது.

விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு ராஜேந்திரபாலாஜியைக் கொண்டுவரும்போதும், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போதும், ஒரு ஸ்ட்ரென்த் காட்டிவிட வேண்டுமென்று, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதனையறிந்த காவல்துறையினர், விருதுநகர் மாவட்ட எல்லைகளிலேயே அ.தி.மு.க.வினரின் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினார்கள். ஆனாலும், காவல்துறையின் கண்ணில் படாமல், வேறு ரூட்டில் வந்து, விருதுநகரிலும் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் திரண்டனர். "இங்கே கூட்டம் போடக்கூடாது; கலைந்துபோகவில்லை என்றால் கைது செய்வோம்...''’ என்று காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்க, "இது ஜனநாயக நாடுதானே! பொய் வழக்கி லிருந்து தப்பிப்பதற்காகத்தானே ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார்? 20 நாட்கள் கழித்து எங்கள் மாவட்ட செயலாளரின் முகத்தை நேரில் பார்க்கக்கூட விடமாட்டோம் என்று சொல்வது சர்வாதிகாரமாக இருக்கிறது. நாங்கள் கோஷம்கூட எழுப்பவில்லையே? சாலையில் உட்கார வில்லையே''’என்று எதிர்த்துப் பேச, ராஜவர்மன் உள்ளிட்ட 66 பேர் கைது செய்யப்பட்டு, சூலக்கரை மண்டபமொன்றில் அடைக்கப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் முன்பாகக் கூடிய முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டனர்.