கடுங்குளிரை விரட்டியடித்து தமிழக அரசியல் களத்தை சூடாக்கிவிட்டது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு. கடந்த ஜனவரி 4ஆம் தேதி, இத்தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் மரணித்த இரண்டே வாரத்தில், யாருமே எதிர்பார்க்காதபடி, இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தொகுதியில், ஜனவரி 31ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி, பிப்ரவரி 7ஆம் தேதி நிறைவடைகிறது. வாக்குப்பதிவு பிப்ரவரி 27 எனவும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி எனவும் அறிவிப்பு வந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளார்கள். இதில் ஆண்கள் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 713 பேர், பெண்கள் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 140 பேர். சென்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் எண்ணிக்கை இரண்டு லட்சமாக இருந்தது. அப்போது ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 37 பேர் (சுமார் 70%) வாக்களித்திருந்தனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக நின்ற திருமகன் ஈவெரா 67,300 வாக்குகளும், அ.தி.மு.க. கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் யுவராஜ் 58,396 வாக்குகளும் பெற்றிருந்தனர். வாக்கு வித்தியாசம் 8,904.
தற்போது ஆளுங்கட்சியாக தி.மு.க. பொறுப்பேற்று, ஏறக்குறைய இரண்டாண்டுகளான நிலையில் வந்துள்ள இடைத்தேர்தல் என்பதால், முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சிக்கான சான்றிதழைத் தரும் தேர்தல் என்ற வகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.
தி.மு.க. கூட்டணியில் சிட்டிங் சீட் என்பதால், காங்கிரஸ் போட்டியிடுமென்று அதன் தலைவர் ஏற்கெனவே கூறியிருந்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸுக்கென்று பெரிய பலம் இல்லையென்றாலும், தந்தை பெரியாரின் கொள்ளுப் பேரன் என்றும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் என்றும் பரப்புரை செய்தது மக்களிடம் எடுபட்டது. தற்போது இங்கே காங்கிரஸில் பலமான வேட்பாளர்கள் இல்லையென்று கட்சியினரே கூறுகிறார்கள்.
இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனே நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஏற்கனவே காங்கிரஸ் தலைவர், எம்.பி., தேசிய அளவிலான தலைவர் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனோ, எம்.எல்.ஏ. தேர்தலில் நிற்க தயக்கம் காட்டுவதாகவும், அடுத்த எம்.பி. எலெக்ஷனில் ஈரோடு தொகுதியை மீண்டும் எதிர்பார்ப்பதாகவும் தெரிகிறது.
அக்கட்சியின் இளைஞரணி ராஜேஷ் ராஜப்பா, தெற்கு மாவட்டத் தலைவர் மக்கள் ராஜன், கவுன்சிலர் இ.பி.ரவி எனச் சிலர் வேட்பாளராக ஆர்வம்காட்டுகிறார்கள். லோக்கல் தி,மு.க.வினரோ, தாங்களே நிற்க வேண்டுமென்று தலைமைக்கு வேண்டுகோள் வைக்கிறார்கள். கூட்டணி அடிப்படையில் காங்கிரஸுக்கு ஒதுக்கி தேர்தல் முடிவு பாதகமானால் அது தி.மு.க. ஆட்சிக்கே பலவீனமாகிவிடும் என்பதால் நேரடியாக தி.மு.க.வே களம்காண்பது நல்லதென்று உடன்பிறப்புகள் கூறுகிறார்கள்.
இதையடுத்து, இத்தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குடும்பத்தினர் போட்டியிட்டால் காங்கிரசுக்கு சீட்டு, இல்லையென்றால் தி.மு.க.வே நிற்க முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.
சமூக அடிப்படையில் இத்தொகுதியில் மெஜாரிட்டியாக முதலியார் சமூகத்தைச் சார்ந்த 90 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அடுத்ததாக கவுண்டர், வன்னியர், தலித் என பிற சமூக வாக்காளர்கள் உள்ளார்கள். சென்ற சட்டமன்றத் தேர்தலிலேயே ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர், கவுண்டரல்லாத ஒருவர் என்று முடிவெடுத்த தி.மு.க. தலைமை, முதலியார் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.சந்திரகுமார், ஈரோடு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ஆ.செந்தில்குமார் என இருவரது பெயர்களை பட்டியலில் வைத்திருந்தது. தற்போது செந்தில்குமார், சந்திரகுமார் ஆகியோரோடு கேபிள் வாரியத் தலைவராக இருந்து நீக்கப்பட்ட ஈரோடு குறிஞ்சி சிவக்குமார், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஈரோடு பிரகாஷ் எனப் பெரிய பட்டாளமே வேட்பாளர் கோதாவில் குதித்துள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் இத்தொகுதியை எதிர்பார்க்கிறது. அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், சென்ற தேர்தலில் போட்டியிட்ட இளைஞர் அணி யுவராஜா ஆகியோர் தங்கள் ஆர்வத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. தான் இங்கு போட்டியிட வேண்டுமென்று சில நாட்களுக்கு முன்பே அக்கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்திடம் எடப்பாடி பழனிச்சாமி கூறியதோடு, ""ராமலிங்கம் நீங்கதான் வேட்பாளர், வேலையைப் பாருங்கள்'' என உத்தரவு போட்டுள்ளார். அதற்கு ராமலிங்கம் ""அண்ணா அதிகம் செலவாகுமே...'' எனக் கூற, ""ஏன் உன்னிடம் பணம் இல்லையா? நான் தரட்டுமா?'' என கொஞ்சம் குரலை உயர்த்த, ""இல்லை... இல்லை... நானே செலவு செய்கிறேன்'' என ராமலிங்கம் கூறியதோடு, அடுத்தநாளே தேர்தல் பணியைத் தொடங்கி, பூத் கமிட்டிக்கு 5,000 என அ.தி.மு.க. தரப்பில் பட்டுவாடாவே முடிந்துவிட்டது.
இந்நிலையில் தேர்தல் அறிவிப்பு வந்து விட்டதால், அ.தி.மு.க. தரப்பில் சுறுசுறுப்பு காணப்படுகிறது. ஏற்கெனவே இத்தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த அ.தி.மு.க. தென்னரசு, தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துவிட்டார். மற்ற அ.தி.மு.க. நிர்வாகிகளும் பெரிய அளவில் ஈடுபாடு காட்டாமல் இருக்கிறார்கள். ஏறக்குறைய அ.தி.மு.க. வேட்பாளர் கே.வி.ராம லிங்கம்தான் என உறுதியான நிலையில்... நேரடி ஃபைட்டாக தி.மு.க.தான் அடுத்ததாக தனது வேகத்தைக் காட்டவேண்டும்!