வெளிப்படையான நிர்வாகம், தூய்மையான ஆட்சி என்கிற குறிக்கோள் களில் உறுதியாக இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதற்கேற்ப தனது செயலாளர்கள் உள்பட துறை உயரதிகாரிகள் நியமனம் வரையில் தனிக்கவனம் செலுத்தினார். ஆனாலும் அடுத்த நிலையில் கீ போஸ்டிங்கில் உள்ள ஊழல் அதிகாரிகள் குறித்த சர்ச்சைகள் ஓயவில்லை.
முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச் சாமியிடம் உள்துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணி ஆகிய முக்கிய துறைகள் இருந்தன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/posting-corruption.jpg)
இதில் நெடுஞ்சாலை துறையில் 10,000 கோடி ரூபாய் மெகா ஊழல் நடந்துள்ளது என்று கவர்னரிடம் தி.மு.க. கொடுத்த ஊழல் பட்டியலில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு டெண்டரிலும் எடப்பாடிக்காக அதிகாரிகள் வசூலித்துக் கொடுத்தது குறைந்தபட்சம் 13 சதவீத கமிஷன். ஐ.ஏ.எஸ்.கள் தொடங்கி இன்ஜினியர்களுக்கு சுமார் 9 சதவீதம் கமிஷன்.
நெடுஞ்சாலைத் துறையில் மொத்தம் 10 தலைமைப் பொறியாளர்கள் இருக்கின்றனர். அவர்களில் முதன்மை இயக்குநராக மாற்றப்பட்டுள்ள குமார், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் (தரக்கட்டுப்பாடு) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள கோதண்டராமன், தலைமைப் பொறியாளர் சுமதி தவிர மற்ற 7 பேர் மீதும் ஊழல் குற்றச் சாட்டுகள் அதிகம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/posting-corruption1.jpg)
திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் ரூ.10,000 கோடியில், 80 சதவீத தொகை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவுக்கு ஒதுக்கப்படும். இந்த பிரிவின் தலைமைப் பொறியாளராக இருந்த சாந்தி, எடப்பாடிக்கு வலது கரமாக இருந்தவர். தற்போது இவரை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு மாற்றியுள்ளனர். சமீபத்தில் சாலைகளின் தரத்தை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அனைத்தும் தரமற்றவை என ரிசல்ட் வந்தது. இதனையடுத்து நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் கீதா, நபார்டு மற்றும் கிராம சாலைகள் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நபார்டு மற்றும் கிராம சாலைகள் பிரிவின் தலைமைப் பொறியாளரான செல்வன், சென்னை- கன்னியாகுமரி தொழில் தட சாலைகள் திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கே தலை மைப் பொறியாளராக இருந்த பாலமுருகன், கோடிகளின் நட மாட்டம் அதிகமுள்ள தேசிய நெடுஞ்சாலைக்கும், தேசிய நெடுஞ் சாலையில் இருந்த சந்திரசேகர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவுக்கும் பரஸ்பரம் மாற்றப்பட்டுள்ளனர். இரண்டுமே வெயிட்டான இடங்கள். இரண்டு அதிகாரிகளுமே ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ்சுக்கு நெருக்கமானவர்கள். தி.மு.க. அரசிலும் இவர்களின் கை ஓங்கத் துவங்கியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/posting-corruption3.jpg)
வடிவமைப்பு அலகின் தலைமைப் பொறியாளராக இருந்த விஜயா மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள். வி.ஆர்.எஸ். கொடுத்து தப்பிக்க நினைத்தும் முடியாத நிலையில், இவரை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை பொது மேலாளராக அயல் பணியில் நியமித்துள்ளனர். பெருநகரம் பிரிவின் தலைமைப் பொறியாளராக இருந்த சுமதியை வடிவமைப்பு பிரிவுக்கு மாற்றியுள்ளனர்.
திட்டங்கள் பிரிவின் தலைமைப் பொறியாளராக இருப்பவர் முருகேசன். தமிழகம் முழுவதும் கட்டப்படும் பாலங்கள் இவரது பொறுப்பில்தான் உள்ளன. எடப்பாடியின் சமூகத்தை சேர்ந்த இவர், இப்போதும் சிபாரிசின் மூலம், தனது பதவியை தக்க வைத்துக்கொண்டார். ஊழல் அதிகாரிகள் மீது தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்காமல், இடமாறுதல் மட்டும் செய்வது நேர்மையான அதிகாரிகளிடம் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/posting-corruption2.jpg)
நெடுஞ்சாலை துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவில் மட்டும் 8 கண்காணிப்பு பொறியாளர்கள் இருக்கிறார்கள். தலைமைப் பொறியாளர்களுக்கு வலது கரமான இவர்கள் யாருமே இதுவரை மாற்றப்படவில்லை. அதேபோல, துறையிலுள்ள 150 கோட்டப் பொறியாளர்களில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவில் 41 பேர் இருக்கிறார்கள். இவர்களும் மாற்றப்படவில்லை. ஒவ்வொரு கோட்டமும் 150 கோடிகளை கையாளும். இதில் சென்னை மாநகர சாலைகள் கோட்டம் மட்டும் 600 கோடி. இந்த கோட்டத்தின் பொறியாளராக இருக்கும் சரவண செல்வன், சசிகலா உறவினர். இடத்தை தக்கவைத்துக்கொள்ள 4 அமைச்சர்களிடம் சிபாரிசு கடிதம் வாங்கி செமையாக காய்களை நகர்த்தி வைத்துள்ளார். இன்னமும் செல்வாக்காக இருக்கும் இந்த அதிகாரிகளோடு அடிக்கடி தொடர்பில் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி‘’ என்று விவரிக்கின்றனர் கோட்டை தரப்பினர்.
ஆவினில் 300 கோடிக்கும் அதிகமான ஊழல் நடந்துள்ளது. இதற்கு சூத்திரதாரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. பல்வேறு இனங்களில் ஆவினுக்கு 61 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதை தணிக்கைத்துறை ரிப்போர்ட் தந்திருக்கிறது. இதில் ராஜேந்திரபாலாஜியோடு இணைந்து செயல்பட்டவர்கள் நிர்வாக இயக்குநராக இருந்த நந்தகோபால் ஐ.ஏ.எஸ்.சும், பொது மேலாளர் ரமேஷ்குமாரும். நந்தகோபாலை இடமாறுதல் செய்த உயரதிகாரிகள், ரமேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை நக்கீரனில் அம்பலப்படுத்திய பிறகு சி அண்ட் எஃப் முறையை ரத்து செய்தனர். இதனால் ஆவினுக்கு 13 கோடி ரூபாய் லாபம் என்கிறார் அமைச்சர் ஆவடி நாசர். ஆனால், இத்தனை ஆண்டுகள் நட்டம் ஏற்படுத்திய அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. பால்வளத்துறையின் செயலாளர் ஜவஹர் ஐ.ஏ.எஸ்., ஆவினின் எம்.டி. கந்தசாமி ஐ.ஏ.எஸ்., ரமேஷ்குமார் மூவரும் ஒரே புள்ளியில் இணைந்துவிட்டனர்.
தமிழகத்திலுள்ள 25 மாவட்ட பால் ஒன்றியங் களில் போர்டு மீட்டிங் நடத்தக்கூடாது என 10-ந்தேதி அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறார் துறையின் செயலாளர் ஜவஹர். இதனை பின்பற்றி இதே உத்தரவை ஆவின் பொதுமேலாளரும் (பெர்சனல்) பிறப்பித்துள்ளார். இதற்கு கொரோனா கட்டுப்பாடுகளை காரணமாக காட்டியுள்ளனர். மாவட்ட ஒன்றியங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழு (போர்டு) 13 பேருடன் இயங்குகிறது. நாடாளுமன்றமும் சட்டமன்றமும் இந்த கொரோனா காலத்தில் நடக்கலாம். ஆனால், 13 பேர் கொண்ட பால் ஒன்றியங்களின் நிர்வாக குழு மட்டும் நடக்கக் கூடாதா? கூட்டுறவு சங்கங்களின் விதிகள்படி இப்படி உத்தரவு பிறப்பிக்க பால்வளத்துறை செயலாளருக்கோ, ஆவின் நிர்வாகத்துக்கோ அதிகாரம் கிடையாது என்கிறார்கள்.
அதேபோல, துணை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்.சிடம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) என்கிற பல ஆயிரம் கோடிகள் கொட்டும் துறை இருந்தது. இந்த துறையில் தலைமை திட்ட அமைப்பாளராக சி.கே.பாலசுப்பிரமணியம், பெரியசாமி, கிருஷ்ணகுமார் ஆகிய மூவரும் ஓ.பி.எஸ்.சுக்கும் இ.பி.எஸ்.சுக்கும் வலது- இடது கரமாக இருந்தனர். இதில், பாலசுப்பிரமணியத்துக்கு கடந்த 3 ஆண்டுகளாக உடல்நலம் சரியில் லாததால் தலைமைத் திட்ட அமைப்பாளர் பணிகளை சரிவர செய்ய இயலவில்லை. பணிச்சுமை குறைவாக உள்ள பிரிவுக்கு பாலசுப்பிரமணியத்தை மாற்ற உயரதிகாரிகள் முயற்சித்தனர். ஆனால், ஓ.பி.எஸ்.சின் வலது கரம் என்பதால் மாற்ற முடியவில்லை. அதேபோல, கிருஷ்ணகுமார், பெரியசாமி ஆகிய இவர்கள் வசம்தான் ப்ளான் அப்ரூவல், பில்டிங் அப் ரூவல் அனைத்தும் இருக்கின்றன. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தரப்பிலிருந்து இவர்களுக்கு உத்தரவு வரும். அந்த கோப்புகள் மட்டுமே நகரும். இதன் மூலம் நடந்த ஊழல்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்றது. ஆனால், ஓ.பி.எஸ். உத்தரவில் அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து இப்போதும் இவர்களுக்கு உத்தரவு வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/posting-corruption4.jpg)
ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்ததால் கிருஷ்ணகுமார், கும்டா என்ற அமைப்பின் உறுப்பினர் செயலாளராக அ.தி.மு.க. ஆட்சி யில் நியமிக்கப்பட்டார். ஆனால், அதன் பணிகளை கவனிக்காமல் ப்ளான் மற்றும் பில்டிங் அப்ரூவல் பணிகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.சின் விசுவாசிகளாக இருக்கும் இந்த 3 உய ரதிகாரிகளிடமிருந்து இப்போதும் பழைய ஆட்சியாளர்களுக்கு தகவல் பாஸ் ஆகிறது என்கிறார்கள் நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள்.
இதுபோன்று பல்வேறு துறைகளிலும் ஊழல் அதிகாரிகள் கோலோச்சி வருகிறார்கள். மாற்றப்படாமலிருக்கும், இரண்டாம் நிலை ஊழல் அதிகாரிகள், துறைக்கு வரும் புதிய ஐ.ஏ.எஸ்.களை எளிதாக வளைத்துவிடுகின்றனர். இதனால் உண்மையான நிர்வாக நிலவரம் முதல்வர் ஸ்டாலினுக்குச் செல்லாமல் கவனமாக பார்த்துக் கொள்கின்றனர் உயரதிகாரிகள்.
பி.ஏ.க்கள் தர்பார்!
அ.தி.முக. ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணிக்கும் துறைச் செயலாளருக்கும் இணைப்புப் பாலமாக செயல்பட்டவர் நகராட்சி நிர்வாக ஆணையத்தில் இருந்தவர் மணக்காவலப்பெருமாள். இவர் மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள் உண்டு. அதன் காரணமாக, திருநெல்வேலி மாநகராட்சிக்கு உதவியாளராகப் பணி மாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும் இரண்டு வருடங்கள் பணியில் சேராமல், பின்னர் ஒரு நாளில் பணியில் சேர்ந்து, அன்றே கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்று, அதே நாளில் சென்னை மாநகராட்சிக்கும் பணிமாறுதல் பெற்றார். இதற்கு காரணம், துறைச் செயலாளர். ஆனாலும், மாநகராட்சிப் பணிக்கு வேலையில் சேராமல், நகராட்சி நிர்வாகத் துறைச் செயலாளருக்கு உதவி யாளராகச் செயல்பட்டார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் அதே துறையின் தற்போதைய செய லாளரிடமே தொடர்கிறார் மணக்காவலப்பெருமாள்.
அரசு செயலாளருக்கு தனி செயலாளராகப் பணியாற்ற தலைமைச் செயலகத்தில் தகுதியான பலர் இருந்தும், மணக்காவலப் பெருமாள் அன்அஃபீஷியலாக இந்தப் பணியில் நீடிப்பதற்கு, துறையில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, தன் மீதான 23 ஊழல் குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வைத்துள்ளார் என்று மணக்காவலப் பெருமாள் பற்றி அதிரவைக்கிறார்கள் அமைச்சர் கே.என்.நேருவின் துறையில் இருப்பவர்கள்.
அதே அமைச்சரிடம் முதுநிலை நேர்முக உதவியாளராகத் தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் நாராயணன், ஓ.பி.எஸ்.ஸின் தீவிர ஆதரவாளர். அ.தி.மு.க. ஆட்சியில் ஆணையர் பதவி உயர்வு தொடர்பான டீலிங்கில் அப்போதைய அமைச்சருக்கான பணப்பரிவர்த்தனைகளை கவனித்தவர் இவர்தான் என்கிறார்கள்.
போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் உதவியாளராக இருந்த சதீஸ்கண்ணா என்பவர் இப்போதைய அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் அன்அஃபீஷிய லாகத் தொடர்கிறார். அதுபோலவே, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பவர்ஃபுல்லான போஸ்டில் நியமிக்கப்பட்டிருக்கும் மணிகண்ணன், சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிறப்பு நேர்முக உதவியாளராக இருந்தவர்.
அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டுகளில் செமத்தியாகக் கல்லா கட்டிய பலர், தி.மு.க. ஆட்சியில் ஏதேனும் ஒரு வகையில் உள்ளே நுழைந்து ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இதுபற்றி முதல்வர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றால், அங்கே நேர்முக உதவியாளராக உள்ள மணிவண்ணன் என்பவரின் ராஜாங்கத்தைப் பார்த்து, அங்குள்ள அலுவலர்கள் முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வரை அலறுகிறார்களாம்.
-நமது நிருபர்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/posting-corruption-t.jpg)