edappadi

நாடாளுமன்றத் தேர்தலில், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே அ.தி.மு.க. மீண்டும் மண்ணைக் கவ்வியது ர.ர.க்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடியின் தொகுதியான சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டி.எம்.செல்வகணபதி 5,66,085 வாக்குகளை அள்ளினார். அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேஷை விட 70,357 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வுக்கு 4,95,728 வாக்குகள் கிடைத்தன.

Advertisment

சேலம் நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், கடந்த 2021-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், சேலம் வடக்கு, சேலம் மேற்கு தவிர மற்ற தொகுதிகளில் அ.தி.மு.க., தான் வெற்றி பெற்றுள்ளது. இப்படி அ.தி.மு.க.வின் கோட்டையான சேலத்தில், தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாடாளுமன்றத் தேர்தல்களில் தி.மு.க.வை வெற்றிபெறச்செய்து, எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

எடப்பாடியின் சொந்த மண்ணிலேயே தொடரும் தோல்வி குறித்து மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, ''சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில், நீண்ட அரசியல் அனுபவமுள்ள டி.எம்.செல்வகணபதி களமிறக்கப்பட்டார். அவருக்கு எதிராக செம்மலை போன்ற சீனியர்களில் ஒருவர் நிறுத்தப்படுவாரென எதிர்பார்த்தோம். ஆனால், அரசியல் களத்திற்கே புதியவரான கான்ட்ராக்டர் பரமசிவத்தின் மகன் விக்னேஷ் என்ற இளைஞரை நிறுத்தினார் இ.பி.எஸ். இது அ.தி.மு.க.வுக்கு முதல் சறுக்கல். அறிமுகமில்லாத வேட்பாளரை மக்களிடம் கொண்டு சேர்க்கவே படாதபாடு பட்டுவிட்டோம்.

Advertisment

அதிகார பலம், வலுவான கூட்டணியோடான தி.மு.க., 70 சதவீத வாக்காளர்களுக்கு 500 ரூபாய் முதல் பாரபட்சமின்றி கரன்ஸியை பாய்ச்சினர். அ.தி.மு.க. தரப்பிலோ 250 ரூபாய் தான் தரப்பட்டது. பா.ஜ.க.வை ஒதுக்கி வைத்தால் முஸ்லிம், கிறித்தவ சமூகத்தினர் வாக்குகள் வந்து கொட்டும் என்று கணக்கிட்டதும் தப்பாகிப்போனது. மைனாரிட்டி சமூகத்தினரும், அரசு ஊழியர்களும் பெரும்பான்மையாக வசிக்கும் சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் ஒவ்வொரு சுற்றிலும் தி.மு.க.வை விட அ.தி.மு.க. சராசரியாக 2000 வாக்குகளுக்கு மேல் பின்தங்கி இருந்தது.'' என்கிறார்கள்.

அதேநேரம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் மட்டும் ஒவ்வொரு சுற்றிலும் அ.தி.மு.க.வுக்கு சராசரியாக 2000 வாக்குகள் கூடுதலாகக் கிடைத்துள்ளன. இந்த ஒரு சட்டமன்றத் தொகுதியில் மட்டும் இலைக்கட்சிக்கு 1,23,842 வாக்குகளும், தி.மு.க.வுக்கு 77,522 வாக்குகளும் கிடைத்துள்ளன. அதேபோல், அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேஷின் சொந்த சட்டமன்றத் தொகுதியான ஓமலூரில், தி.மு.க. கூட்டணியைவிட 3,553 வாக்குகள் மட்டுமே இலைக்கட்சிக்கு குறைவாகக் கிடைத்துள்ளது. இத்தொகுதியில் வேட்பாளரின் தந்தையான கான்ட்ராக்டர் பரமசிவத்திற்கு தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதும், அவர் சார்ந்த வன்னியர் சமுதாய ஆதரவும், தண்ணீராய் இறைத்த பணமும் ஓரளவுக்கு சப்போர்ட் செய்துள்ளது.

எடப்பாடி, ஓமலூர் சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் தீயாக வேலை செய்த இலைக்கட்சி நிர்வாகிகள், சேலம் மாநகரப் பகுதியில் கோட்டை விட்டுவிட்டனர். இதனால், சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.வைவிட 24,400 வாக்குகள் குறைவாகவும், வீரபாண்டியில் தி.மு.க.வுக்கு 25,135 வாக்குகள் கூடுதலாகக் கிடைத்துள்ளது. சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் 40,308 வாக்குகளும், பா.ம.க. வசமுள்ள சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் 21,988 வாக்குகளும் தி.மு.க. கூடுதலாகப் பெற்றுள்ளது. இத்தனைக்கும் இந்த தொகுதியில்தான் இலைக்கட்சியின் மாநகர் மா.செ. வெங்கடாசலம் இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றிருந்தார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. சேலம் மேற்கு ஒன்றிய முன்னாள் செயலாளர் ஏ.வி.ராஜூவிடம் கேட்டபோது, ''எடப்பாடி தலைமையேற்ற பிறகு, எல்லா முடிவுகளையும் தன்னிச்சையாக எடுப்பதுதான் சரிவுக்கு முக்கிய காரணம். தனது பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, அவருடைய எடப்பாடி தொகுதியில் மட்டும் வாக்காளர்களுக்கு தலா 1000 பட்டுவாடா செய்தார். மற்ற தொகுதிகளுக்கான பணத்தை பகுதி செயலாளர்களே சுருட்டிக்கொண்டனர். மாநகர மா.செ. வெங்கடாசலம், தனிப்பட்ட ஈகோ காரணமாக சேலம் தெற்கு எம்.எல்.ஏ. பாலசுப்ரமணியத்தின் ஆதரவாளர்களை ஓரங்கட்டினார். எல்லாவற்றுக்கும் மேலாக, கட்சிக்கு உழைத்தவர்களுக்கு சீட் தராமல், சேலம், ஈரோடு உள்பட 17 தொகுதிகளில் கான்ட்ராக்டர்களிடம் தலா 20 கோடி பெற்றுக்கொண்டு சீட் கொடுத்திருக்கிறார் எடப்பாடி. இதனால் எடப்பாடி தலைமையில் சந்தித்த பத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. தோல்வியடைந்திருக்கிறது. இதனால் அவரை, "பத்து தோல்வி பழனிசாமி' என்றும் சொல்லலாம்"" என்றார் பகடியாக.

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாசமோ, ""கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுடன் கூட்டணியிலிருந்த பா.ஜ.க., பா.ம.க. கட்சிகள் இப்போது இல்லாததுதான் தோல்விக்குக் காரணம். ஆனாலும், 2019 தேர்தலைக் காட்டிலும் இப்போது கூடுதலாக வாக்குகளை பெற்றிருக்கிறோம். இதெல்லாம் எடப்பாடியார் செய்த நலத்திட்டங்களுக்குக் கிடைத்த வாக்குகள்தான்.'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். அ.தி.மு.க.வில் மக்கள் செல்வாக்குள்ள மூத்த நிர்வாகிகள் ஓரங்கட்டப்படுவதும், கட்சி படிப்படியாக கான்ட்ராக்டர்கள் மயமாகி வருவதும் தொடர்ந்தால், வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மண்ணைக் கவ்வ வேண்டியதுதான் என எச்சரிக்கிறார்கள் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகள்.

-இளையராஜா