சேலத்தில் அ.தி.மு.க.வின் மாஜி மண்டலக்குழுத் தலைவர் கூலிப்படையால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம். அ.தி.மு.க.வில் 55வது வார்டு செயலாளராகவும், கொண்டலாம்பட்டி மண்டலக்குழுத் தலைவராகவும் இருந்தவர். தேர்தல் பணிகளில் உத்வேகமாகச் செயல்படக்கூடியவர் என்பதால் அ.தி.மு.க. தலைமையின் 'குட் புக்'கில் இருந்தவர்தான் சண்முகம். ரியல் எஸ்டேட் மற்றும் மாநகராட்சி டெண்டர் பணிகளை எடுத்துச் செய்துவந்தார். ஜூலை 3ஆம் தேதி இரவு 9.40 மணியளவில், வழக்கமான கட்சிப் பணிகளை முடித்துவிட்டு தனது வீட்டுக்கு செல்வதற்காக சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவில் நுழைந்ததுமே, எதிரில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து மர்ம நபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். கொலையாளிகள் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.
தகவலறிந்த அ.தி.மு.க. மா.செ. வெங்கடாசலம், பாலசுப்ரமணியம் எம்.எல்.ஏ. செம்மலை மற்றும் நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மாநகர காவல்துறை ஆணையர் விஜயகுமாரி, துணை ஆணையர் மதி வாணன், அன்னதானப் பட்டி காவல்நிலையத்தினர் என மொத்த காக்கி படை யும் சம்பவ இடத்திற்கு வந்தனர். கொலையாளி களை கைது செய்யும் வரை சடலத்தை உடற்கூராய்வுக்கு எடுத்துச்செல்ல விட மாட்டோம் எனக்கூறி சண்முகத்தின் உறவினர் களும், கட்சிக்காரர்களும் மறியலில் ஈடுபட, 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகே உடற்கூராய்வுக்கு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
சண்முகத்தின் மனைவி பரமேஸ்வரி, 55வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஸ்குமார் மீது சந்தேக மிருப்பதாகத் தெரிவிக்க, அடுத்த சில மணி நேரத்தில் சதீஸ்குமார் உள்ளிட்ட 10 பேரை கொத்தாகத் தூக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. தாதகாப்பட்டி யில் சோழிய வேளாளர் மற்றும் வன்னியர் சமூகத்திற்குப் பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயிலின் நிர்வாகக்குழுத் தலைவராக இருந்த சண்முகத்தின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் முடிவுக்கு வந்தது. ஆனால் அவரோ தலைவர் பதவியை விட்டுத்தர மறுத்தார். இக்கோவிலுக்கு இருக்கும் 50 கோடி ரூபாய் சொத்துக்களை சண்முகம் அபகரிக்க நினைப்பதாகவும் புகாரெழுந்ததால், இவ்விவகாரம், வார்டு கவுன்சிலர் என்ற அடிப்படையில் தனலட்சுமியின் கணவர் சதீஸ்குமாரிடம் செல்ல, சதீஸ்குமார் கடுமையாக எதிர்த்தார். கடுப்பான சண்முகம், கோயில் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறை எடுத்துக் கொள்ள வேண்டும் என அரசுக்கு பெட்டிஷன் அனுப்பினார். இவ்விவகாரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜேந் திரன் தலையிட்டு சமாதானப்படுத்தினார். இதேபோல, அம்பாள் ஏரிப்பகுதியில் சாலை அமைக்கும் பணியிலும் சதீஸ்குமாருடன் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
ஒருபுறம் மாநகராட்சி தேர்தலில் தோல்வி, தன்னுடைய வார்டில் தி.மு.க. கவுன்சிலருக்கு அதிகரித்து வரும் செல்வாக்கு, கோயில் தலைவர் பதவிக்கு ஆப்பு என அடுத்தடுத்து சரிவைச் சந்தித்து வந்த சண்முகம், இத்தனைக்கும் காரணமான சதீஸ்குமாருக்கு வேறு வழியில் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தார். சதீஸ்குமாரை உள்ளூரில் "லாட்டரி சதீஸ்' என்று சொன்னால் தான் தெரியும். அந்தளவுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேலத்தில் லாட்டரி மாபியாவாக உருவெடுத்துள்ளார். அதோடு தற்போது சந்துக்கடை, கஞ்சா விற்பனையிலும் இறங்கி யுள்ளார். இதையெல்லாம் சண்முகம் போலீசுக்கு போட்டுக்கொடுத்ததில் சதீஸ்குமாரின் ஆட்களை காவல்துறை கைது செய்துள்ளது. இதையடுத்தே பகை வளர, கொலையில் முடிந்திருக்கிறது.
சண்முகம் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அரசு மருத்துவமனையில் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, 'உண்மை தொண்டரை இழந்துவிட்டோம்,' என்று கண்ணீர் சிந்தியபடி சொன்னார். சீலநாயக்கன் பட்டி மயானத்தில் சண்முகத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சதீஸ்குமார், அருண்குமார், பாபு, பூபதி, முருகன், மணிமாறன், கருப்பண்ணன் என்கிற சந்தோஷ்குமார், கவுதம், நவீன், சீனிவாசபெருமாள் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சதீஸ்குமாரின் மனைவி கவுன்சிலர் தனலட்சுமி போலீஸ் பிடியில் விசாரணையில் உள்ளார்.
இதுகுறித்து சேலம் மாநகர காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, "தாதகாப்பட்டி மாரியம்மன் கோயிலில் நிர்வாகக்குழு தலைவர் பதவியை விட்டுத்தர மறுத்ததாலும், மாநகராட்சி பணிகளைச் செய்வதற்கு தி.மு.க. கவுன்சிலர் தனலட்சுமிக்கு இடையூறு ஏற்படுத்தியதாலும், சதீஸ்குமார் ஆள்களை ஏவி சண்முகத்தை கொலை செய்துள்ளார்'' என்றனர்.
கோயில் நிர்வாகக்குழுவில் ஏற்பட்ட மோதல் விவகாரம் மட்டுமின்றி, சதீஸ்குமாரின் கஞ்சா உள்ளிட்ட அனைத்து இல்லீகல் பிஸினஸுக்கும் வேட்டு வைக்கும் வேலைகளில் சண் முகம் இறங்கியதால் தான், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்கிறது காக்கியின் மற்றொரு தரப்பு. விசாரணையின் போது சதீஸ்குமாரை ராஜ மரியாதையுடன் நடத்தியிருக்கிறது காவல்துறை. மருத்துவ பரிசோதனைக்கு அவரை அழைத்து வந்தபோதுகூட, ஜாலியாக சிரித்துக் கொண்டேதான் சென்றார். சதீஸ்குமாரின் இல்லீகல் பிஸினஸுக்கு உடந்தையாக இருந்த காக்கிகள் சிலரின் தலைகளும் உருளும் என்கிறார்கள்.