ஒன்மேன் ஷோவாக திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க.வில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு, நன்னிலம் சட்டமன்றத் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக வெற்றி பெற்ற தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, நன்னிலம் பயணியர் மாளிகையில் அதிமுக நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்திவிட்டு அங்கிருந்தபடியே சென்னைக்குப் புறப்பட்டார்.
அவருக்கு லேசான மூச்சுத்திணறலும், நெஞ்சுவலியும் ஏற்படவே. அவசர அவசரமாக ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. அமைச்சருக்காக திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் அ.தி.மு.க.வினர் யாகம், பூஜை என வழிபாடு நடத்தினர். மியாட் மருத்துவமனையில் ஜனவரி 5ந் தேதி சேர்க்கப்பட்டவருக்கு, 7ந் தேதி கொரோனா பாசிட்டிவ் என அறிவித்தனர், அதன்பின்னர் கொரோனா தொற்று இல்லை சாதாரண நெஞ்சுவலிதான் என கூறினர். ஆனாலும் தொடர் சிகிச்சையில் அங்கேயே இருந்த அமைச்சர் காமராஜ் பொங்கலுக்கு முதல்நாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினர் பொங்கல் கொண்டாடுவதற்காக மன்னார்குடி சென்றுவிட்டனர், ஆனால் அமைச்சர் காமராஜ் கிரின்வேஸ் சாலையில் உள்ள அரசு வீட்டிலேயே இருந்து கட்சியினரையும் அதிகாரிகளையும் சந்தித்து வந்தார்.
5 நாட்கள் இடைவெளியில் மீண்டும் கடுமையான காய்ச்சல்- வயிற்றுப் போக்குடன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், மீண்டும் மியாட் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார். அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஜனவரி 19-ஆம் தேதி காலை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல் நிலை மோசமடைவதை உணர்ந்த சுகாதாரத்துறை அமைச்சரும், சுகாதாரத்துறை செயலாளரும் இதுபற்றி முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் தகவலை கூறிவிட்டு அரும்பாக்கம் எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அமைச்சர் காமராஜுக்கு எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க இரவே முதல்வர் பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் கேட்டறிந்தனர்.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ""உணவுத்துறை அமைச்சர் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்'' என்றார்.
அமைச்சர் காமராஜுக்கு நெருக்கமான திருவாரூர் மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ""கொரோனா தொற்று பொங்கல் சமயத்தில் ஏற்பட்ட தல்ல, இரண்டு மாதங்களுக்கு முன்பே தொற்று ஏற்பட்டுவிட்டது. (அப்போது இதை நக்கீரனில் ஒருபக்கம் செய்தியாக வெளியிட்டிருந்தோம்) ஆனாலும் அவர் தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். உள்ளூர் செய்திகளில் எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வது அவரது வழக்கம். நோய்த்தொற்று குறித்து அதிகாரிகள் எடுத்துச் சொன்னாலும் அவர் பொருட்படுத்தவில்லை. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தானே துவக்க வேண்டும், தன் கையால் கொடுக்க வேண்டுமென இருந்தார். தேர்தல் வாக்காளர் சேர்ப்பு முகாமிலும் தினசரி கலந்து கொண்டார், அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தை அடிக்கடி எந்தவித பாதுகாப்பும் இல்லாமலேயே நடத்திவந்தார். அதன் விளைவு அவருக்கு நோய் தொற்று அதிகமாகிவிட்டது. அவரது உடலை அவரே கெடுத்துக் கொண்டார்'' என்கிறார் ஆதங்கமாக.
அமைச்சரின் உடல்நிலை குறித்து அவரது நெருங்கிய வட்டாரங்களில் கேட்டோம். “""பொங்கலுக்காக குடும்பத்தினர் சொந்த ஊருக்கு சென்று விட்டதால், அமைச்சரின் க்ரீன்வேஸ் சாலை இல்லத்தில் அவரை கவனிக்க போதுமான ஆள் இல்லை. உதவியாளர் சர்புதீன் மட்டும் அங்கிருந்து உதவியிருக்கிறார். மூச்சுத்திணறல் ஏற்பட்டதும் சுகாதாரத்துறை செயலாளரைத் தொடர்புகொண்டு தெரிவிக்க, அவர் மூலம்தான் மருத்துவ உதவிகள் கிடைத்துள்ளன. ஆனாலும் பெரிய முன்னேற்றம் இல்லை. ஆபத்தான கட்டத்தில், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். முதல்வரும் துணை முதல்வரும் சில அதிகாரிகளும் வந்து பார்த்து விட்டு சென்றுள்ளனர். 20 ம் தேதி காலை உடல்நிலை சீராக இருக்கிறது என அறிவித்தனர், மதியம் அளவில் நெருக்கமான உறவினரை தவிர மற்றவர்கள் யாரும் மருத்துவமனையில் இருக்கவேண்டாம், எல்லோரும் வெளியே போங்க என சொல்லி விட்டனர். அமைச்சருடன் எப்போதும் இருக்கும் நெருக்கமான கட்சிக்காரர்களைக்கூட வெளியேற்றுவது அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. மாவட்டம் முழுவதும் இருக்கும் அனைத்து கோவில்களிலும் பூஜை நடத்தும்படி கட்சிக்காரர்களிடம் சொல்லி இருக்கிறோம். அவர் மீண்டு வரணும்'' என்றார் கவலையோடு. சசிகலா சகோதரர் திவாகரனால் அரசியலுக்கு வந்த காமராஜ், ஜெ அமைச்சரவையில் இடம்பெற்றபிறகு, தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். டெல்டா மாவட்டத்தில் செல்வாக்கும் அதிகார பலமும் கொண்டவர். ஆளுநரிடம் தி.மு.க அளித்த மனுவில் காமராஜின் துறை சார்ந்த புகார்களும் அடங்கும். டெல்லியும் கண்காணித்தது.
தேர்தல் களத்திற்குத் தேவையானவற்றை வலுவாக வைத்திருந்தார் காமராஜ். டெல்டா மாவட்ட தேர்தல் செலவுகளுக்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணு மரணமடைந்த நிலையில், அமைச்சர் காமராஜின் உடல்நிலை முதல்வர் வரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைந்து நலன்பெற மருத்துவம் போராடுகிறது.