இன்னும் அந்த விவகாரம் ஓயவில்லை. குமரி மாவட்டம், அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் சர்ச்சை பேச்சால் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மற்றும் கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில்... "கடந்த 10 ஆண்டுகளாக ஸ்டீபன் மீது, அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல் உள்ளிட்ட பிணையில் விடப்படாத பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தும் ஓரு வழக்கில்கூட கைது செய்ய போலீசார் ஸ்டீபனை நெருங்கவில்லை இதற்கு காரணம், அப்போது முதல்வர்களாக இருந்த ஜெயலலிதாவும் எடப்பாடி பழனிச்சாமியும் அருமனைக்கு வந்து சென்றதுதான்' என்கிறார்கள் ஸ்டீபன் மீது புகார் கொடுத்தவர்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் ஹோமர்லால்... "அருமனையில் கிறிஸ்துமஸ் விழா நடத்தி அங்கு முதல்வர்களையும் அரசியல் தலைவர்களையும் அழைத்துவந்து அதன்மூலம் அரசு அதிகாரிகள் மத்தியில், தன்னை ஒரு ஆளுமைமிக்கவராக காட்டியவர்தான் ஸ்டீபன். இதில் 2010-ல் ஜெயலலிதாவும் 2020-ல் எடப்பாடி பழனிச்சாமியும் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளாக மாவட்ட காவல் கண்காணிப்பாளராக யார் வந்தாலும் அவர்கள் ஸ்டீபனை சந்தித்து தொடர்பில் இருப்பதுதான் வழக்கம்.
இந்த நிலையில்தான் கடந்த 2015-ல் முறையான ஆவணங்கள் இல்லாமல் ஓடிய கேரள பதிவெண் கொண்ட, ஸ்டீபனுக்கு சொந்தமான டூரிஸ்ட் பஸ் ஓன்றை மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிடித்து அபராதம் விதித்ததால்... அந்த போக்குவரத்து ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தார் ஸ்டீபன். இது சம்பந்தமாக தக்கலை போலீசார், ஸ்டீபன் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்தனர்.
அதன்பிறகு "அருமனையில் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் விழாக்களை, சாலைகளை மறித்து பொதுமக்களுக்கு இடையூறாக நடத்த அனுமதிக்கக்கூடாது' என்று நான் 2017-ல் ஜகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். இதன் காரணமாக ஸ்டீபன் எனக்கு கொலை மிரட்டல் விடுக்க... அதை சமூக வலைத்தளத்தில் பரவவிட்டனர். இது சம்பந்தமாக தக்கலை போலீசார் ஸ்டீபன் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் 2020-ல் மத வழிபாடு சம்பந்தமாக மஞ்சாலுமூடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்சந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, அருமனை போலீசார் ஸ்டீபன் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்தனர். இப்படி ஸ்டீபன் மீது 20-க்கு மேற்பட்ட வழக்குகள் 10 ஆண்டுகளில் பதிவாகியுள்ளன. இதில் பல வழக்குகள் கொலை மிரட்டல், கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து ஆகும். இந்த வழக்குகளில் ஸ்டீபனை போலீசர் கைது செய்யவும் இல்லை, ஸ்டீபன் ஓரு வழக்கில்கூட முன்ஜாமீனும் வாங்கவில்லை. இதனால் கோர்ட், ஸ்டீபனுக்கு பிடிவாரண்ட் போட்ட நிலையில்... ஸ்டீபன் தலைமறைவாக இருப்ப தாக கோர்ட்டுக்கு போலீசார் அறிக்கையும் அளித்துள்ளனர்.
தலைமறைவு என கூறப்பட்ட ஸ்டீபன், எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒரே மேடையில் அடுத்தடுத்து இருக்கிறார். எடப்பாடி பழனி சாமி அருமனை வருகைக்காக நடத்தப்பட்ட காவல் உயர்அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டங்களிலும் ஸ்டீபன் கலந்திருக்கிறார். மேலும் எடப்பாடி நிகழ்ச்சிக்காக ஸ்டீபனைப் பற்றி முதல்வர் அலுவலகம் விசாரித்தபோதும், மாவட்ட உளவுத்துறையும் காவல் கண் காணிப்பாளரும் ஸ்டீபன் மீதுள்ள குற்ற வழக்குகளை மறைத்து அவர் பற்றி நல்ல நபர் என்ற ரிப்போர்ட்டையும் கொடுத்துள்ளனர்.
இப்படி கடந்த 10 ஆண்டுகளாக ஸ்டீபனை, காவல்துறையினர் காப்பாற்றிவந்த நிலையில்... தற்போதைய அரசு அவர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்து தூத்துக்குடி சிறையில் அடைத்துள்ளது. ஏற்கனவே ஸ்டீபன் மீது நிலுவையில் இருந்த மேற்கண்ட 3 வழக்குகளிலும் கைது செய்து கடந்த 30-ம் தேதி பத்மநாபபுரம் மற்றும் குழித்துறை நீதி மன்றங்களில் ஆஜர்படுத்தி அந்த வழக்குகளை போலீசார் தூசு தட்டியுள்ளனர்'' என்றார்.
ஸ்டீபன் தொடர்பான வழக்குகள் குறித்து அருமனை கிறிஸ்தவ இயக்கத்தினரிடம் நாம் பேசிய போது..... "ஸ்டீபன் மீது, எங்களுக்கு எதிரான அரசியல் கட்சியினர் தூண்டிவிட்டு பிரச்சினை ஏற்பட்டு, அவர்களின் நெருக்கடி யால்தான் ஸ்டீபன் மீது திட்டமிட்டே வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் எந்த குற்ற சம்பவத்திலும் ஈடுபட்டதற்கு எந்த முகாந்திர மும் போலீசார் கையில் இல்லாததால்தான் போலீசாராலும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இப்போதும் அவர்மீது சம்பந்தமில்லாத தவறான குற்றச்சாட்டுகளைக் கூறிவருகின்றனர்'' என்றார்கள்.
ஸ்டீபன் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையால் அவருக்கு இதுவரை ஆதரவாக செயல்பட்ட காவல்துறையினர் கதிகலங்கியிருக்கிறார்கள். ஆனால், இது அரசியல் நடவடிக்கை என்ற விமர்சனமும் பரவலாக உள்ளது.