டெல்லியில் போதைப்பொருள் மாட்டிய விசயத்தில் அரசியலைத் தாண்டி பல புது விசயங்கள் வந்து கொண்டிருக்கின்றன. போதைப்பொருள்களின் தாயகம் ஆப்கானிஸ்தான். அங்கு உற்பத்தியாகும் போதைப்பொருள்கள் பாகிஸ்தான் மூலம் பஞ்சாப் வழியாக இந்தியா வந்து சர்வதேச நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றன. சமீப காலமாக அந்த ரூட் மாற்றப்பட்டு போதைப்பொருள்கள் நேரடியாக குஜராத் வந்து அங்கிருந்து விசாகப்பட்டினம், தமிழ்நாடு, கேரளா ஆகிய பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. விசாகப்பட்டினம் வரும் போதைப்பொருள்கள் சாலை மார்க்கமாகவே சென்னைக்கு கொண்டுவந்து, சென்னையிலிருந்து தஞ்சை மற்றும் ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கொண்டு செல்வது ஒரு ரூட். குஜராத்திலிருந்து கேரளாவுக்கு கொண்டு சென்று அங்கிருந்து இலங்கைக்கு கொண்டு செல்வது இன்னொரு ரூட். குஜராத்திலிருந்து நேரடியாக படகுகள் மூலம் அரபு நாடுகளுக்கு கொண்டு செல்வது ஒரு ரூட்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்குப் பக்கத்தில் போதைப்பொருள் கள் அடங்கிய ஒரு படகை ஆஸ்திரேலிய போலீசார் பிடித்தனர். தமிழகத்தில் கீழக்கரையில் கிலோகணக்கில் போதைப்பொருள்கள் பிடிபட்டது. இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை. ஆஸ்திரேலியாவில் பிடிபட்ட போதைப்பொருள்கள் பற்றி புலனாய்வு செய்த ஆஸ்திரேலியா போலீசார், ஜாபர்சாதிக் என்பவரைப் பற்றி இந்திய போலீசுக்கு துப்புக் கொடுத்தனர்.
இந்த ஜாபர்சாதிக்கின் ஜாதகத்தை இந்திய போதைப்பொருள் தடுப்புத் துறையின் தலைவர் ஞானேஷ்வர் சிங் விசாரித்தபோது, “ஜாபர் 2013ஆம் ஆண்டே போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டவர். 2018 ஆம் ஆண்டு மும்பை ஏர்போர்ட்டில் ஏர் கார்கோவை ஒரு சிறப்புத் தகவல் மூலம் ஏர் இன்டலிஜென்ஸ் விசாரித்தது. துபாய் மற்றும் மலேசியாவுக்கு கொண்டு செல்லப்படவிருந்த 37 கிலோ பெட்டமைனை பிடிக்கிறார்கள்.
அந்த போதைப்பொருளை ‘கியூப் இம் பெக்ட்ஸ்’ என்கிற நிறுவனம் கண்ணாடி வளையல்களுக்கு இடையே வைத்து கடத்தியது.
அதில் ஜாபர்சாதிக் அவரது தம்பி முகமது சலீம் ஆகியோர் குற்றவாளிகள். இது தொடர்பான வழக்கில் ஒரு வருடம் தலைமறைவாக இருந்த ஜாபர்சாதிக், அதன்பிறகு முன்ஜாமீன் பெற்றிருக்கிறார்’எனவும் ஞானேஷ்வர் சிங் கண்டுபிடித்தார்.
ஜாபர்சாதிக், ஜே.எஸ்.எம்.பார்மா என்கிற நிறுவனத்தை குஜராத்தில் நடத்துகிறார். அந்த நிறுவனத்திற்கு டெல்லியில் ஒரு குடவுன் உள்ளது என கண்டுபிடிக்கிறார்கள். டெல்லி குடவுனை ஆய்வு செய்யும்போதுதான் மெத்த பெட்டமைன் என்கிற போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள் கிலோகணக்கில் சிக்குகிறது. இந்த தொழிற்சாலையிலும் ஜாபர்சாதிக், முகமது சலீம் ஆகியோர் உரிமையாளர்களாக இருக்கிறார்கள். சுமார் 3500 கோடி ரூபாய்க்கு போதைப்பொருள் இங்கிருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கு விமானம் வழியாகவும், கப்பல் வழியாகவும், சிறு படகுகள் மூலமாகவும் இலங்கை மற்றும் கேரளா, தமிழ்நாடு வழியாக அனுப்பப்பட்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டது.
அதிர்ச்சியளிக்கும் இந்தத் தகவல்களின் தொடர்ச்சியாக ஜாபர்சாதிக்கின் நண்பர்களின் வட்டாரத்தை ஆராய்ந்தபோது, அதில் தமி ழகத்தைச் சேர்ந்த முக்கியமான அரசியல்வாதி களும், போலீஸ் அதிகாரிகளும் இருப்பதை கண்டுபிடித்த மத்திய அரசு அதிகாரிகள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள். அதில் ரோஸா என்கிற அதிகாரி முக்கியமானவர். அதேபோல் கனஸ், போரஸ் ஆகிய அதிகாரிகளும் முக்கிய மானவர்கள்.
இந்த டீம் ஜாபர்சாதிக்குடன் கிளப்பு களில் இரவுநேரக் கொண்டாட்டங்களில் இணைந்து உல்லாசம் அனுபவித்துள்ளார்கள். இவையெல்லாம் டெலிபோன் ரெக்கார்டு களாகவே ஒன்றிய போதைப்பொருள் தடுப்புத் துறைக்கு கிடைத்திருக்கிறது. ஜாபர்சாதிக்குடன் தமிழகத்தைச் சேர்ந்த போதைப்பொருள் தடுப்புத்துறையின் அதிகாரிகளே தொடர்பில் இருந்திருக்கிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும் ஜாபர் ஒரு போதைப்பொருள் கடத்தல் மன்னன் என்று தெரியும். ஜாபர் மீது 2013, 2019ஆம் ஆண்டுகளில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளது என்பதும் தெரியும். இவ்வள வையும் தெரிந்துகொண்டே, அந்த அதிகாரிகள் அவர்களுக்கு நெருக்கமான அரசியல் வி.வி. ஐ.பி.க்களுடன் ஜாபர்சாதிக்கை பழக வைத்திருக்கிறார்கள் என்பது ஒரு திட்டமிட்ட அரசியல் சதி.
சினிமாத்துறையில் ஃபைனான்சியராக கால்பதித்த ஜாபர், முக்கிய நபர் ஒருவர் மூலம் வி.வி.ஐ.பி.க்களுக்கு அறிமுகம் ஆகியிருக்கிறான். அவனைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ள மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறையினர் இப்பொழுது ஜாபர் தலைமறைவாக வெளிநாடு ஒன்றில் தங்கியிருப்பதாகக் கண்டுபிடித்துள்ளார்கள். விரைவில் அவனைக் கைது செய்யும் வேலை கள் தீவிரமடையும் என்கிறார்கள் மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள்.
ஆக, போதைப்பொருள் இந்தியாவுக்குள் ஊடுருவ ஒன்றிய மோடி அரசு காரணமாக இருந்துகொண்டு, தமிழ்நாட்டில் ஸ்டாலின் அரசு மீது பழி சுமத்தப் பார்ப்பதாகத் தெரிகிறது.