அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளருக்கு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இருவரில் யாரை முன்னிறுத்துவது என்பதில் உட்கட்சி பிரச்சினை உச்சம் தொட்டிருக்கும் நிலையில், புனித ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் எனஅ.தி.முக கூட்டணியில் இருக்கும் பாஜக தலைவர் முருகன் நாகர்கோவிலில் ஓப்பனாக பேசியது அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியடைய வைத்தியிருக்கிறது.
பாஜக தலைவராகி முதல் முறையாக 21-ம் தேதி குமரி மாவட்டத்துக்கு வந்த முருகனை பா.ஜ.க.வினர் குமரி எல்லையான காவல்கிணறு முப்பந்தலில் இருந்து உற்சாகத்துடன் அழைத்து வந்தனர். பின்னர் பருத்திக்காட்டுவிளையில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய குமரி மாவட்ட தலைவர் தர்மராஜ், முருகனை வர வேற்று, முதல்வரை அழைத்து வரும் தோரணையில் அழைத்து வந்தார்.
வரவேற்பைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் பேசும் போது... ""சட்டமன்றத்தில் முதல்வர் நாற்காலியை அலங் கரிக்கும் தலைவராக முருகன் உள்ளார்'' என்றார். கடைசியில் பேசிய முருகன் ""2021-ல் புனித ஜார்ஜ் கோட் டையில் காவி கொடி பறக்கும்'' என்றார்.
இந்த நிலையில் டெல்லி தலைமை யோடு நெருக்கமாக இருக்கும் குமரி மாவட்ட பாஜக முக்கிய சோர்ஸ் ஒருவரிடம் நாம் பேசும் போது... அவர், ""அரசியலில் எப்பவும் எதுவும் நடக்கலாம். அ.தி.மு.க.வின் குடுமி மோடி கையில் இருப்பது எல்லாருக்கும் தெரியும். வரும் தேர்தல் என்பது தி.மு.க. Vs அ.தி.மு.க. அல்ல. தி.மு.க. Vsபா.ஜ.க. தான். இதுதான் மோடியின் திட்டம்.
அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யுத்தத்தில் கண்டிப்பாக ஓபிஎஸ் கட்சியிலிருந்து வெளியே வந்து விடுவார். அவர் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பதால் இரட்டை இலை பிரச்சினை வரும். அப்போது அது முடக்கப்படுவது உறுதி. ஓ.பி.எஸ்.க்கு வேறு வழியில்லாமல் பா.ஜ.க.வை தேடி வருவார். அதேபோல் ரஜினியையும் பா.ஜ.க. எதிர்பார்க்கிறது.
கடைசியில் பாஜக தலைமையில் ஸ்ட்ராங்காக ஒரு அணி உருவாகி தி.மு.க.வை நேரடியாக எதிர்க்கும். அ.தி.மு.க. உடையணும் அல்லது அ.தி.மு.க.வை உடைச்சாதான் தமிழகத்தில் பா.ஜ.க. இரண்டாம் இடத்துக்கு வர முடியும். இதற் கேற்பத்தான் பா.ஜ.க. மேலிடம் செயல் படுகிறது'' என்றார்.
ஏற்கனவே 1989-ல் ஜானகி- ஜெயலலிதா பிரச்சினையில் இரட்டை இலை முடக்கப் பட்டது. அதன்பிறகு ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை முடக்கப்பட்டது. இந்த நிலையில் மோடியால் மூன்றாவது முறையாக இரட்டை இலை முடக்கப்படும் நிலையில் உள்ளது.
-மணிகண்டன்