தீவிரவாதிகள், வில்லன்கள் என்றாலே அது இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் என்பதுபோல் திரைப்படம் எடுத்து இஸ்லாமியர்களை தீவிரவாதியாகவே பார்க்கும் நிலையை மக்கள் மத்தியில் உருவாக்கிவிட்டனர். இஸ்லாமியர்களை பாய், பாய் என அழைத்து பொது இடத்தில் அவர்களை ஒதுக்கிவைக்கும் நிலையும் உருவாகிறது என நொந்துபோய் பேசுகிறார்கள் இஸ்லாமிய சமூகத்தினர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய திருவண்ணாமலை தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் காதர்ஷா, “"தமிழ்நாட்டில் சாதி, மதம் பார்க்காமல் உடன் படிப்பவர்கள், பழகியவர்கள் அண்ணா, தம்பி, மாமா, மச்சான், சகோதரா, நண்பா, தோழா என்றே அழைத்துவந்தார்கள். சிலர் மட்டுமே பாய் என அழைத்தனர். இப்போது பெரும்பாலும் "ஏய் பாய், யோ பாய்'' என்றே அழைக்கின்றனர். எளிமையான, சாதாரண விவரமறியாத மக்கள் அழைக்கிறார்கள் என்றால் தப்பில்லை. விவரமறிந்த, இலக்கியம், முற்போக்கு, மதவாத அரசியல் அறிந்தவர்கள் அழைக்கும்போது உடலெல்லாம் கூசுகிறது.

ddபாய் என்பது பழக்கவழக்கத்தில் முஸ்லிம்களைக் குறிப்பதாகவே புழக்கத்தில் உள்ளது. பொது இடத்தில் யாரையாவது முதலியாரே, ரெட்டியாரே, செட்டியாரே, கவுண்டரே என இக்காலத்தில் அழைக்கமுடியுமா? அழைக்கமுடி யாத அளவுக்கு தமிழ்நாட்டு மக்களை பெரியார் பக்குவப் படுத்தியுள்ளார். மீறி யாராவது அழைத்தால் தீயில் குதித்ததுபோல பதறுவார்கள். அதற்குக் காரணம் இங்கு நாம் சாதி, மதத்தை இரண்டாம்பட்சமாக வைத்துள்ளோம். மனிதனை மனிதனாக மதிக்கும் பக்குவம் நம்மிடையே உள்ளது. ஆனால் சமீபகாலமாக சிலர் பாய் என அழைக்கும் முறையை தீவிரமாக்கி வருகின்றனர். பாய் என சாதாரணமாக அழைத்தால்கூட பரவாயில்லை, அழைப்பவர்களின் குரல் தொனி அருவருப்பாக இருக்கிறது. அந்தச் சொல் என்னை மற்றவர்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறது. என்னைப் பொறுத்த வரை பாய் என்பதை தீண்டாமைச் சொல்லாகவே பார்க்கிறேன்.

தமிழ்நாட்டில் வசிக்கும் முஸ்லிம்கள் தமிழ் பேசுகிறார்கள், கேரள இஸ்லாமியர் மலையாளம் பேசுவர், ஹைதராபாத் தொடங்கி காஷ்மீர் வரையுள்ள இஸ்லாமியர்கள் உருது பேசுகிறார்கள். வடஇந்தியாவில் பாய் என உருதுமொழியில் அழைக்கிறார்கள். தமிழ் நாட்டில் ஏன் உருது மொழியில் பாய் என அழைக்கவேண்டும்? மக்கள் மனதில் அவனை இஸ்லாமியன் என அடையாளப்படுத்தி அவன் தீண்டத்தகாதவன் என அடை யாளப்படுத்த வடமாநிலங்களில் உச்ச ரிக்கப்பட்ட சொல் பாய். அது சகோதரத் துவத்துடன் அழைக்கப்பட்டதல்ல. சமூகத் தில் தங்களை அந்தஸ்துமிக்கவர்களாக காட்டிக்கொள்வதற்காக அரசியல் இலாபம் அடைவதற்கான நுணுக்கமான உடல் மொழியின் உச்சரிப்பே "ஏய் பாய்' என்பது. சமத்துவம், சமூகநீதி, சமய நல்லிணக்கம் பேசும் சகோதரர்களே இனி எங்களை பாய் என அழைக்காதீர்கள்''’என்றார்.

Advertisment

எழுத்தாளரும், மார்க்சிய சிந்தனை யாளருமான பீர்முகமதுவிடம் பேசியபோது, "பாய் என்கிற உருதுச் சொல்லின் தமிழ் அர்த்தம் சகோதரர் என்பதாகும். பூமா என அழைக்கப்படும் உருதுச் சொல்லின் தமிழ் அர்த்தம் சகோதரி. வடமாநிலத்திலிருந்து அந்த சொற்கள் தமிழ்நாட்டில் புகுத்தப் பட்டது. பொது இடத்தில் பல மதத்தைச் சேர்ந்த பத்துப் பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். அங்கே யாராவது வந்து "என்ன பாய் எப்படி இருக்கீங்க?' எனக் கேட்டால், அந்த இடத்தில் நாம் தனி நபர்போல் உணரவேண்டியதாக இருக்கிறது. இப்படி அழைப்பது சகோதரத்துவத்துடன் என்றால் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் பொதுசமூகத்திலிருந்து இஸ்லாமியரை ஒதுக்கிவைப்பதுபோல் உள்ளது.

மற்றவர்களை பொது இடத்தில் அவர்களின் சாதிப் பெயரைச் சொல்லி அழைத்தால் எப்படி எடுத்துக்கொள்வார்கள்? பிற மத சகோதரர் களைவிட தமிழ் மொழி பேசும் இஸ்லாமியர்களே தொடர்ந்து தங்களுக்குள் பாய், பாய் என்றே அழைத்துக்கொள்கிறார் கள். இவர்கள்தான் முதலில் தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும். இஸ்லாம் அந்தந்த பகுதி வாழ்வியலோடு கலந்து வாழச்சொல்கிறது. இங்கு அரபிகள் பயன்படுத்தும் உடைகள் பெண்களுக்கு அணியச் செய்து அடை யாளப்படுத்துகிறார்கள். பாய் என்கிற உருதுச் சொல்லோடு பாயம்மா என உருதும், தமிழும் கலந்து அழைக்கிறார்கள். அப்படி அழைப்பதற்குப் பதில் தமிழில் அண்ணா, அக்கா அல்லது சகோதரா, சகோதரி என்றே அழைக்கலாம் அல்லது பெயர் சொல்லி அழைக்கலாம்'' என்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் பாசித்திடம் கேட்டபோது, "திராவிட இயக்கம், இஸ்லாமிய மேடைகளில் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே எனச் சொல்லியே பேசுவார்கள். டெல்லி பக்கம் சென்றால் ஜனாப், சாயுப் எனச்சொல்லி அழைக்கிறார்கள், எழுதுகிறார்கள். அது தமிழில் உயர்திரு, மரியாதைக்குரிய என பொருள் கொண்டது. அதுபோன்றதுதான் பாய் என்பதும். அங்கிருந்துதான் இங்கு வந்தது, பாய் என அழைப்பது ஒன்றும் தவறில்லை. சிலர் அப்படி அழைக்காதீர்கள் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அது தவறானதல்ல, மரியாதைக்குரிய சொல்தான்''’என்றார்.

Advertisment