சுமார் 50 லட்சத்திற்கு மேல் ஈரோடு தி.மு.க. சொந்த செலவிலும் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சு.முத்துச்சாமியின் நேரடி உழைப்பிலும் உருவாக்கப்பட்டதுதான் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைக்கப்பட்ட தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா சிலைகளை தாங்கி நிற்கும் கட்டடம். இப்போது அதில் மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் தங்களுக்கான இடத்தை பிடித்துக்கொள்ள கலைஞர் சிலைக்கோ அனுமதி மறுக்கப்பட ஈரோடு தி.மு.க.வில் கலகக்குரல் எழ காரணமாகிவிட்டது.

jaya

ஈரோடு நகர வளர்ச்சியில் பன்னீர்செல்வம் பூங்கா பகுதி போக்குவரத்து நெரிசலான ஐந்து ரோடுகள் சந்திக்கும் முனையாக மிகவும் நெருக்கடியான சாலையாக மாறியது. இதனால் பெரியார், அண்ணா சிலைகளை வேறு பகுதிக்கு மாற்றிவிட்டு அந்த பூங்கா இடத்தை அகற்றி விரிவுபடுத்த ஈரோடு மாநகராட்சி முடிவெடுத்தது. ஈரோட்டின் மையமான இடத்தில் மக்கள் பார்வையில் இருக்கும் பெரியார், அண்ணா சிலைகளின் கம்பீரம் வேறு பகுதிக்கு மாற்றினால் போய்விடும் என முடிவெடுத்தது ஈரோடு தி.மு.க. மற்றும் திராவிடர் கழகம். குறுகிய இடம் கொண்ட அந்தப் பூங்காவை வடிவமைக்கத் திட்டமிட்டது. பூங்காவின் பின்பகுதி நிலத்தை சமமாக்கினால் அங்கு இரு தலைவர்களின் சிலைகளை வைக்கலாம்; அதனால் முன்பகுதி நிலம் போக்குவரத்து நெரிசல் குறைந்த விசாலமான பகுதியாக மாறும் என வரைபடம் போட்டு அதை சொந்தச் செலவில் செய்துகொள்வதாக கூறி மாநகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி பெற்றார் தி.மு.க. மா.செ.வான சு.முத்துச்சாமி.

அனைவரின் கவனத்தையும் ஈர்க்குமளவுக்கு உயரமான இடத்தில் பெரியார், அண்ணா ஆகியோரின் முழுஉருவ வெண்கலச் சிலை கம்பீரமாக அமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் சென்ற 2017 ஆகஸ்ட் மாதத்தில் தற்போதைய தி.மு.க. தலைவரான மு.க.ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்டது.

Advertisment

இந்த இடத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞருக்கு சிலைவைக்க சென்ற வருடம் அனுமதி கிடைக்காததால், ஈரோடு தி.மு.க.வுக்கு சொந்தமான முனிசிபல் காலனி என்ற இடத்தில் கலைஞரின் சிலையை கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போது திறந்துவைத்தார். அந்நிகழ்விலேயே ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் தி.மு.க.வால் அமைக்கப்பட்ட பெரியார், அண்ணா சிலையருகே மற்றொரு கலைஞர் சிலை திறக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

பூங்கா இடத்தில் கலைஞர் சிலைவைக்க தி.மு.க.வும் ஜெ. சிலைவைக்க ஈரோடு அ.தி.மு.க.வும் அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்திருந்தனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் "இருவரின் சிலையையும் வைக்கலாம்' என பரிந்துரை செய்து அரசுக்கு அனுப்பினார். இந்த நிலையில்தான் திடீரென ஜெ. சிலைக்கு மட்டும் முதல்வர் அனுமதிகொடுக்க, சென்ற 13-ஆம் தேதி இரவில் ஜெ. சிலையை கொண்டுவந்து எம்.ஜி.ஆர். சிலையருகே நிறுவினார்கள் ஈரோடு அ.தி.மு.க.வினர்.

"தி.மு.க.வினர் சொந்தச் செலவில் உருவான கட்டடத்தில் கலைஞர் சிலைக்கு அனுமதி மறுப்பு -ஜெ. சிலைக்கு அனுமதியா' என ஈரோடு தி.மு.க. வட்டாரம் கொந்தளிக்கத் தொடங்கியது. ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் சிலையை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் தி.மு.க.வினரும் அந்த இடத்திற்கு செல்ல, போலீசார் "முறைப்படி அனுமதிபெற்று வாருங்கள்' என கலைஞர் சிலையுடன் தி.மு.க.வினரை திருப்பியனுப்பினர்.

Advertisment

jay

""அ.தி.மு.க.வினர் ஜெ. சிலை வைப்பது முன்கூட்டியே முத்துச்சாமிக்கு தெரியும். இவரே நேரில் சென்று ஜெ. சிலையமைக்கும் இடத்தை அளந்து கொடுத்து "சிலை நிறுவும் பீடத்தின் உயரம் இவ்வளவுதான் இருக்கவேண்டும்' என கட்டட மேஸ்திரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தி.மு.க.வின் எதிரியான ஜெயலலிதாவுக்கு தி.மு.க.காரன் செலவு செய்த கட்டடத்தில் சிலை. தலைவர் கலைஞர் சிலைக்கு அனுமதி இல்லை. இதை உண்மையான தி.மு.க.வினர் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? மா.செ. முத்துச்சாமியின் செயல்பாடு எங்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது'' என குமுறுகிறார்கள் மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் ஆதரவாளர்கள்.

மா.செ. சு.முத்துச்சாமியோ, ""நாங்கள் முறைப்படி அனுமதி கேட்டிருந்தோம் அ.தி.மு.க.வினரும் கேட்டார்கள். இருவரின் சிலைகளை வைக்கலாமென மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ள நிலையில் அரசின் உயர்மட்டம் ஜெ. சிலைக்கு மட்டும் அனுமதி கொடுத்திருப்பது கண்டனத்திற்குரியது. "அந்தம்மா சிலை வைக்க எப்படி அரசு அனுமதித்ததோ அதே சட்ட விதி தலைவர் கலைஞர் சிலைக்கும் பொருந்தும். இப்போது அந்த பீடத்தில் சிலையை வைத்துவிடுகிறோம். பிறகு அனுமதி வந்ததும் திறப்புவிழா செய்துகொள்கிறோம்' என அதிகாரிகளிடம் பேசினோம். ஆனால் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நீதிமன்றம் செல்கிறோம். நல்ல தீர்ப்பை பெறுவோம். வன்முறையற்ற நேர்மையான முறையில் சட்டப்படியே எனது செயல்பாடு இருக்கும்'' என்றார்.

இருந்தாலும் கலைஞருக்கு முன்பே, பூங்காவில் ஜெ. சிலை நுழைந்த வருத்தத்தில் இருக்கிறார்கள் தி.மு.க. தொண்டர்கள்.

-ஜீவாதங்கவேல்