"ஹலோ தலை வரே, ஒன்றிய அரசின் ’பாரபட்ச பட்ஜெட்’ பரபரப்புக்கு நடுவிலும், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்திலும் ஒருவித விறுவிறுப்பைப் பார்க்க முடியுது.''”
"ஆமாம்பா, உதயநிதி துணை முதல்வராவது குறித்தும் பரபரப்புச் செய்திகள் உலவுதே?''”
“"உண்மைதாங்க தலைவரே, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட இருக்கும் செய்தி, பல தரப்பிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கு. இந்த நிலையில் அவர் துணை முதல்வராகும் தேதிவரை முடிவு செய்யப்பட்டது. இந்த நேரத்தில். உதயநிதி துணை முதல்வராக ஆவதை தி.மு.க. வில் இருக்கும் சீனியர் அமைச்சர்கள் சிலர் விரும்பலைன்னும், அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தி.மு.க. தரப்பிலேயே ஒரு தகவல் பரவியது. இதைக்கேட்டு இளைஞரணியினரும் திகைச்சுப்போயிட்டாங்க. பிறகுதான் தெரிந்தது, சீனியர்கள் எதிர்ப்புங்கிற தகவலே வதந்திதான் என்பது. உண்மையில் தி.மு.க.வில் இருக்கும் சீனியர்கள் அனைவரின் பேரன்பையும் பெற்றவர் உதயநிதி. அவர்கள் பார்க்க, படிப்படியாக வளர்ந்தவர் அவர். அதனால் சீனியர்கள் யாருக்கும் இதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லைங்கிறது கட்சித் தலைமைக்கே தெரிய வந்திருக்குதாம். உதயநிதியைப் பொறுத்தவரை, அவர் துணை முதல்வர் பொறுப்புக்கு தயாராகி வருகிறார்னு சொல்றாங்க.''”
’"சரிப்பா, தி.மு.க.வைச் சீண்டும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பற்றி, அக்கட்சியின் தேசியத் தலைமைக்குப் புகார்கள் போயிருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, தி.மு.க.வைச் சீண்டுகிற விதமாக, காங்கிரஸில் இருக்கும் கார்த்தி சிதம்பரம் தொடங்கி, செல்வப்பெருந்தகை வரை பலரும் பேசிவருவதாகவும், இவர்கள் தி.மு.க.வுடனான கூட்டணியை சீர்குலைக்க முயல்வதாகவும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தரப்பு தங்கள் டெல்லி தலைமையிடம் புகாராகத் தெரிவித்திருக்கிறது. இப்படிப்பட்டவர்களின் பேச்சு தமிழக காங்கிரஸிலும் சலசலப்பை ஏற்படுத்திவருகிறதாம். இந்தப் புகாரால் எரிச்சலான காங்கிரஸின் தேசியத் தலைமை, வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு செல்வப்பெருந்தகைக்கும், கார்த்தி சிதம்பரத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப இருக்கிறதாம்.''”
’"தன்னைச் சந்திக்க வந்த தமிழக பா.ஜ.க. நிர்வாகியை, பிரதமர் மோடி துரத்தியடிச்சதா சொல்றாங்களேப்பா?''”
"ஆமாங்க தலைவரே, அண்மையில் டெல்லி சென்ற தமிழக பா.ஜ.க. நிர்வாகி, பிரதமர் மோடியை சந்திக்க ஆவலோடு சென்றாராம். தனது செட்டப் பிரச்சார யாத் திரை பற்றியெல்லாம் பிரதமர் பாராட்டுவார்னு அவர் ஆசை யோடு காத்திருந்தாராம். ஆனால் அவர் வந்திருப்பதை அறிந்த மோடியோ, அந்த தமிழக நிர்வாகியை கடுமை யாக ஒருமையில் விமர்சித்து, அவரால்தான் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி இல்லா மல் போனது என்றும், அதைத் தொடர்ந்துதான் அவமானகர மான தோல்வியை பா.ஜ.க. தமிழ்நாட்டில் சந்திக்க நேர்ந் தது என்றும், பலமுறை தமிழ் நாட்டுக்குப் போய், தான் பிரச்சாரம் செய்ததெல்லாம் இவரால்தான் வீணாகிவிட்டது என்றும் திட்டித் தீர்த்ததோடு, அவரைப் பார்க்கவே பிடிக்கவில்லை. வெளியே போகச்சொல்லுங்கள்’ என்று துரத்தியடித்து விட்டாராம். இதுபற்றி கதை கதையாய் சொல்லி, விலா நோகச் சிரிக்கிறது கமலாலயத் தரப்பு.''”
"தமிழக அரசின் டான்சி நிறுவனம், டெண்டர் சர்ச்சையில் சிக்கியிருக்கிறதே?''”
"தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு நூலகங்களில் நாற்காலிகளுக்குத் தட்டுப்பாடு இருக்கிறதாம். இதைத் தொடர்ந்து, புதிதாக நாற்காலிகளை கொள்முதல் செய்ய முடிவெடுத்த பொது நூலகத்துறையின் இயக்குநர் இளம்பகவத் ஐ.ஏ.எஸ், எங்களுக்கு முதற்கட்டமாக, 5,000 தரமான நாற்காலிகளைக் கொள்முதல் செய்து கொடுங்கள் என்று, அதற்கான ஆர்டரை தமிழக அரசின் சிறுதொழில் நிறுவனமான டான்சி நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறார். அதன்படி, ஒரு நாற்காலி 4,300 ரூபாய் வீதம் 5,000 நாற்காலிகளுக்கு டெண் டர் விட்டது டான்சி. இதன் மொத்த மதிப்பு 2 கோடியே 15 லட்சம் ரூபாய். இந்த டெண்டரில் ஈரோட்டைச் சேர்ந்த சூர்யா என்ற கம்பெனியை டான்சி தேர்வு செய்தது. அந்த சூர்யா நிறுவன மும் 5,000 நாற்காலிகளை சப்ளை செய்தது. ஆனால், டெண்டரின்போது காட்டப்பட்ட நாற்காலிக்கும், சப்ளை செய்யப்பட்ட நாற்காலிக்கும் தரத்தில் வித்தியாசம் இருந்திருக்கிறது. அதாவது, சப்ளை செய்யப்பட்ட நாற்காலியின் தரம் மிகக்குறைவாக இருப்பதை பார்த்து, டான்சி ஊழியர்களே தலையில் அடிச்சிக்கிட்டாங்களாம்.''”
"எதனால் இப்படி ஆச்சு?''”
"இதற்கெல்லாம் காரணம் ஊழல்தாங்க தலைவரே, அதாவது, 2,600 ரூபாய் மதிப்பிலான நாற்காலிகளை 4,300 ரூபாய்க்கு விற்பதன் மூலம், ஒரு நாற்காலிக்கு தலா 1,700 ரூபாய் வீதம் கமிஷன் அடித்திருக்கிறார்கள். அதிலும் டான்சி நிறுவன நிர்வாக இயக்குநர் ஸ்வர்ணா ஐ.ஏ.எஸ்.ஸுக்குத் தெரிந்தே இந்த ஊழல் நடந்திருக்கிறது என்கிறார் கள். இதுகுறித்து மேலும் விசாரித்தபோது, டான்சி நிறுவனத்தில் பொது மேலாளராக இருந்து ஓய்வு பெற்ற ஒரு பெண் அதிகாரிதான், இந்த ஸ்வர்ணா ஐ.ஏ.எஸ்.ஸுக்கும், நாற்காலி காண்ட்ராக்ட் எடுத்துள்ள கம்பெனிக்கும் இடையில் பாலமாக இருந்துவருகிறாராம். 2 கோடியே 15 லட்ச ரூபாய் கொடுத்து 5,000 நாற்காலிகளைக் கொள்முதல் செய்த விவகாரத்திலேயே இப்படி மெகா ஊழல் நடந்துள்ள நிலையில்... இப்போது இரண்டாம் கட்டமாக மேலும் 50,000 நாற்காலிகளை கொள் முதல் செய்யும் ஆர்டரை டான்சிக்கு மீண்டும் கொடுத்துள்ளதாம் பொது நூலகத்துறை. டான்சியோ, இந்த டெண்டரை அதே சூர்யா மற்றும் அது சொல்லும் 2 நிறுவனங்களுக்குக் கொடுக்க முடிவெடுத்திருக்கிறதாம். இந்த ஊழல் விவகாரம், பொது நூலகத்துறை இயக்குநருக்குத் தெரியுமா? என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.''”
"போலீஸ் கையில் தமிழகத்தில் உள்ள ரவுடிகளின் ஹிட் லிஸ்ட் இருக்கிறதாமே?''”
"ஆமாங்க தலைவரே, ஆம்ஸ்ட்ராங் படுகொலை போன்ற க்ரைம் சம்பவங்கள் இனி இங்கே அரங்கேறிவிடக்கூடாது என்பதில் தி.மு.க. அரசு தீர்மானமாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் ரவுடிகளை ஒடுக்கும் அதிரடி களில் இறங்கியுள்ளனர். அதனால் ரவுடிகள் அனை வரும் என்கவுன்டர் பீதியில் ஓட்டம் பிடிக்கிறார் களாம். சாதிரீதியாக வலம் வரும் ரவுடிகள் உட்பட பலரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். குறிப்பாக, தென்மண்டலத்தைச் சேர்ந்த திண்டுக் கல் மோகன்ராம், திருநெல்வேலி கண்ணபிரான், குமுளி ராஜ்குமார், ராக்கெட்ராஜா, எஸ்டேட் மணி, சம்பவம் செந்தில், மாரி, எசக்கி இப்படி பலரின் பெயர்கள் போலீசாரின் லிஸ்ட்டில் உள்ள தாம். ரவுடிகளை உஷார்படுத்தும் காவல்துறை கருப்பு ஆடுகளையும் கண்காணிக்கிறார்களாம்.''”
"அந்த காவல்துறையிலும் சலசலப்பு தெரியுதே?''”
“"நாடாளுமன்றத் தேர்தலையொட்டி காவல்துறையில் பல்வேறு இடமாறுதல்கள் நடந்தன. இதில் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் என பலரும் தமிழகத்தின் பல்வேறு இடங் களுக்கு தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்டனர். தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் விலக்கப்பட்ட தால், தேர்தலுக்காக மாற்றப்பட்டவர்களை மீண்டும் பணி மாறு தல் செய்யவேண் டும். இதற்காக டி.எஸ்.பி.க்களும், இன்ஸ்பெக்டர் களும் தங்களுக்கு இந்த மாவட்டத்தில் மாறுதல் வேண்டும் என தமிழக டி.ஜி.பி.யிடம் கோரிக்கை கடிதம் கொடுத் துள்ளனர்.''
"இதற்கு, டி.ஜி.பி., ஏ.டி.ஜி.பி. அட்மின், ஏ.டி.ஜி.பி. சட்டம் ஒழுங்கு ஆகிய மூன்று உயரதிகாரிகள் அடங்கிய போர்டு கூடி அப்ரூவல் வழங்க வேண்டும். அதன்பிறகே ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர் தயாராகும். ஆனால், இந்த போர்டு இன்னும் கூடாததால், தேர்தலுக்காக வெகு தூரங்களுக்கு மாற்றப்பட்டவர்கள் பரிதவித்து வருகிறார்களாம்.''”
"செங்கல்பட்டு ஆட்சியர் மெத்தனமாக இருப்பதாக புகார் சொல்றாங்களேப்பா?''”
“"செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், லட்சுமி நாராயணபுரம் ஊராட்சி தலைவராக சந்திரபாபுவும், துணைத் தலைவராக சத்யாவும் இருக்கின்றனர். இந்த ஊராட்சி மன்றத்தில் 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். நிர்வாக ரீதியாக சத்யா ஒத்துழைப்பு தராததால் கடந்த 11 மாதங்களாக மக்களுக்கான அடிப்படைப் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் தேங்கிக் கிடக்கிறதாம். இந்த நிலையில் சத்யா மீது ஏகப்பட்ட வில்லங்கப் புகார்கள் எழ, அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளனர். கூடவே, புதிய துணைத் தலைவராக சரிதா என்பவரைத் தேர்வு செய்வதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்றி இருக்கிறார்கள். இவற்றை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு ஊராட்சி நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது. ஆனால், ஆட்சியரோ அதை இன்னும் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருக்கிறார் என்று ஊராட்சி நிர்வாகத்தினர் ஆதங்கப்படுகிறார்கள்.''”
"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணி, சென்னையில் கீதம் என்ற பெயரில் புதிதாக ஓட்டல் பிசினஸைத் தொடங்கியிருக் கிறார். பல கிளைகளுடன் இயங்க ஆரம்பித்திருக் கும் இந்த ஓட்டல்களை அவரது சகோதரர் அன்பரசன் மேற்பார்வை செய்துவருகிறாராம். ஏற்கனவே இருந்த சங்கீதா ஓட்டல் குழுமத்தை உடைத்துதான் இந்த கீதம் ஓட்டலை வேலுமணி தரப்பு நடத்துகிறதாம்.''”
_________
இறுதிச் சுற்று!
தமிழகத்தில் மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளதால், தற்போது மணலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆங்காங்கே சட்டவிரோதமாக மணல் கடத்தல்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே தான் இருக்கிறது. அரசு புறம்போக்கு ஏரி, குளங்களில் படிந்துள்ள வண்டல் மண், சவுடு மண், கரம்பை மண், சரளை மற்றும் களிமண் போன்ற சிறு கனிமங்களை, வீட்டு உபயோகம் மற்றும் விவசாயப் பயன்பாட்டுக்கு உரிய அனுமதி பெற்று, அனுமதிக்கப்பட்ட அளவு மண்ணை மட்டும் இலவசமாக எடுத்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையைக் கொண்டு, மணல் மாஃபியா எஸ்.ராமச்சந்திரனுடன் இருக்கும் பரணி கார்த்திக், சித்திரவேல், வீரப்பன், கரிகாலன் ஆகிய நான்கு பேரும், ஒவ்வொருவருக்கும் 6 மாவட்டங்களாகப் பிரித்துக்கொண்டு, அந்தந்த மாவட்டங்களில் கிராவல் மண் அள்ளுவதற்கான லைசன்ஸ் வைத்திருக்கும் நபர்களிடமிருந்து ஒரு லோடு கிராவல் மண்ணுக்கு ராயல்டி பெறப்படுகிறது. பின்னர், இந்த நால்வர் அணி ஒரு ஆளை நியமித்து பணத்தை வசூல் செய்து வருகின்றனர். அதில், பல மாவட்டங்களிலுள்ள ஏ.டி. மைன்ஸ் அதிகாரிகளை பார்ட்னர்களாக இணைத்துக்கொண்டு, இந்த கிராவல் மண்ணை அள்ளுவதோடு, மாதந் தவறாமல் அந்தந்த அதிகாரிகளுக்கு உரிய தொகையை வழங்கிவிடுவதால், பிரச்சனையில்லாமல் அதிக வருமானம் பார்க்க ஆரம்பித்துள்ளனர். இந்த கிராவல் மண் லைசன்ஸ், அதிகமாக அ.தி.மு.க.வினருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-கீரன்