அரசாங்கம் ஒரு மாவட்டத்தைப் புதிதாக உருவாக்கினால், ஆளுங் கட்சி-எதிர்க்கட்சி இரண்டிலும் மல்லுக்கட்டு ஆரம்பித்து விடுகிறது. தென்காசி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் குழப்பம் பற்றி நக்கீரன் கடந்த ஆகஸ்ட் 15 இதழில் வெளியிட்டிருந்தது. தி.மு.கவிலும் போட்டா போட்டிதான்.
பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் தற்போது நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க.வின் மா.செ.வாக நீடிக்கும் சிவபத்மநாபன் மாவட்டத்தின் தென்பகுதியைச் சார்ந்த நாடார் சமூகத்தவர். அ.தி.மு.க. போன்று மாவட்டம் வடக்கு, தெற்கு, எனப் பிரிக்கப்பட்டால் தெற்குப் பகுதியான ஆலங்குளம் தென்காசிக்கு அவரே மா.செ.வாக நீடிக்க லாம்.
முஸ்லிம் மக்களைக் கொண்ட கடையநல்லூர், தாழ்த்தப்பட்ட மக்களை மெஜாரிட்டியாகக் கொண்ட தனித்தொகுதிகளான வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய மூன்று தொகுதிகளடங்கிய வடக்கு மா.செ. பொறுப் பிற்கு பட்டியலினத்தவர் களின் கட்சிப் புள்ளிகள் நியமிக்கப்படலாம். அதற்கான கோரிக்கையும் வலுப்பெற்று கட்சித் தலைமை வரை சென்றிருப்பதையும் சுட்டிக்காட்டு கிறார்கள் ஏரியாவின் உ.பி.க்கள்.
தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை ஒ.செ. பொறுப்பிலிருக்கும் ரவிசங்கர் நீண்டகால தி.மு.க.காரர். அவரது தந்தை ஆரம்பகாலங்களில் தி.மு.க.வின் புதூர் பேரூர் செயலாளராக இருந்து மறைந்தவர். ரவிசங்கர், பட்டியல் இன மா.செ. பிரதிநிதித்துவம் என்ற வகையில் தனக்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலிருக்கிறாராம்.
அதேபோன்ற நிலையிலிருப்பவர் மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளரான சங்கரன் கோவிலின் ராஜதுரை. கடந்த வருடம் தி.மு.க.வின் தலைமை, கட்சியின் நகரச் செயலாளர்களை மாற்றியபோது சங்கரன்கோவிலின் ந.செ. பொறுப்பு அவருக்குத் தரப்பட்டு சலசலப்பைக் கிளப்பியது. அது தி.மு.க.வின் தலைமை வரை சென்றதில் பழைய படி பதவி பறிக்கப்பட்ட ந.செ.வுக்கே திரும்பவும் பொறுப்பைக் கொடுத்தது தி.மு.க.
கட்சிப் பதவி தரப்பட்டு பின்பு எடுக்கப்பட்ட சம்பவத்தில் எந்தவித ரியாக் சனையும் வெளிப்படுத்தாத பட்டியலினப் பிரிவைச் சேர்ந்த ராஜதுரை, தற்போதைய மாவட்டப் பிரிவினையில் புதிய மா.செ. பதவி வாய்ப்புக்கான முயற்சியிலிருக்கிறாராம். சங்கரன்கோவிலின் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும் எக்ஸ் எம்.பியுமான தங்கவேலும் அதே எண்ணத்திலிருக்கிறா ராம்.
நிலவரங்கள் இப்படி யிருக்க இதனிடையே அண் மையில் தி.மு.க.வின் பக்கம் வந்த சங்கரன்கோவிலின் தொழிலதிபர் அய்யாத் துரைபாண்டியனுக்கு கட்சித் தலைமை, மாநில வர்த்தகர் அணி து.தலைவர் பொறுப்பு தந்தது. மா.செ. பதவிக்காக அவர் கட்சித் தலைமைக்கு மூவ் செய்தபோது, மா.செ. பொறுப்பில் பிரஷர் வேண்டாம். எம்.எல்.ஏ. சீட் வரும் போது பேசிக்கொள்ளலாம் என்று அவருக்குத் தெரிவித்த தாக சொல்லுகிறார்கள் உ.பி.க்கள்.
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்