"அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்' என்கிற தீர்மானத்துடன் தமிழகத்தில் 16 ஆயிரம் ஊராட்சிகளில் கூட்டம் நடத்த வேண்டும்' என அறிவித்த தி.முக. தலைவர் மு.க.ஸ்டாலின், அதனைத் தொடங்குவதற்கு முதல் நாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து முதலமைச்சர்- துணை முதலமைச்சர் உள்ளிட்ட 8 அமைச்சர்கள் மீதான 96 பக்க ஊழல் புகாரை அளித்தார். அந்த ஊழல் புகார்களை முன்னிறுத்தியே ஊராட்சிக் கூட்டங்களைத் தொடங்கியது தி.மு.க.
டிசம்பர் 23ந்தேதி முதல் நாள் நடந்த ஊராட்சிக் கூட்டத்தில் ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டம் குன்னம் கிராமத்தில் கலந்து கொண்டார். ""அண்ணா பிறந்த காஞ்சி மாவட்டத்தில் உள்ள குன்னம் என்பது நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத ஊராட்சி. இங்கு கலைஞர் காலத்தில் பல விதமான தொழிற் சாலைகள் கொண்டு வரப்பட்டன. விவசாயமும் நடைபெறுகிறது. இங்குள்ள தொழிற்சாலைகள் அ.தி.மு.க. ஆட்சியில் மூடப்பட்டு வருகின்றன. ஊழல் ஆட்சியின் நிர்வாக சீர்கேடுதான் இதற்கு காரணம் என்பதை எடுததுக்காட்ட, குன்னம் கிராமம் தேர்வு செய்யப்பட்டது'' என்றனர் லோக்கல் தி.மு.க.வினர்.
கிராமசபா கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ""ஜெயலலிதா அரசியல் ரீதியாக நமக்கு எதிரிதான், அதேநேரத்தில் அவரது மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது, அந்த மர்ம மரணத்துக்கான விடையைத்தான் மக்கள் சார்பாக நாம் கேட்கிறோம். நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் என்பதுபோல் நானும் விவசாயிதான் என்கிறார் முதல்வர். பச்சை துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயியாக முடியாது. கட்சி தொடங்கிய 24 மணி நேரத்தில் முதல்வராகிவிடத் துடிக்கிறார்கள். அண்ணா கட்சி தொடங்கியபோது, பதவி வரும் என கட்சி ஆரம்பிக்கவில்லை. மக்களுக்காக உழைக்க வேண்டும் என கட்சி தொடங்கினார். அதனால் தான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக போராடுகிறோம்.
இந்த ஊருக்கு வந்தபோது, விளையாட்டு மைதானத்துக்கு ஒரு கல்வெட்டு வைத்திருப்பதை கண்டேன். சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு 2018 டிசம்பர் மாதம் நிதி ஒதுக்கி விளையாட்டு திடல் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளார்கள். இந்த இடத்தில் விளையாட்டு திடல் இல்லை, ஆனால் நிதியை எடுத்துள்ளார்கள். இதுதான் இந்த ஆட்சியின் லட்சணம். இப்போது ஆட்சியில் உள்ள அ.தி.மு.க.வை சேர்ந்த முதலமைச்சர், துணை முதல்வர், அமைச்சர்கள் மக்கள் நலத்திட்டத்தில் 6133 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார்கள். இதுபற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தபோது, இதனை சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இந்த அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவில்லை. இதுபற்றி ஆதாரப்பூர்வமாக கவர்னரிடம் 96 பக்கங்கள் கொண்ட புகார் பட்டியலை தந்துவிட்டு வந்துள்ளோம். கவர்னர் நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்'' என்றார்.
கூட்டத்தில் பெண்கள் நிறைந்திருந்தனர். ஆண்-பெண் இரு தரப்பினரும் சமமான அளவில் கூட்டத்தில் கருத்துகளைத் தெரிவித்தனர். விவசாயி கஜேந்திரன், ""ஏரி தூர் வாருகிறேன் எனச்சொல்லி சும்மா மண்ணை கிளறிவிட்டு விட்டு பணத்தை எடுத்துவிட்டார்கள் அமைச்சரின் உறவினர்கள். அதேபோல் ஏரி கரைகளை பலப்படுத்தவில்லை. மழை வந்தும் நீர் சேமிக்க முடியாமல், ஏரி தண்ணீரை நம்பி விவசாயம் செய்யும் நாங்கள் பாதிக்கப் பட்டுள்ளோம்'' என்றார். ஞானசேகரன் என்ற விவசாயியும் வேதனையை வெளிப் படுத்தினார்.
மகாலட்சுமி என்பவர், ""ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன், டெட் எக்ஸாம் எழுதினால்தான் வேலை என்கிறார்கள். இதற்காக 1 முதல் 10-ஆம் வகுப்புவரை பாடம் படித்து தேர்வு எழுது என்கிறார்கள். நாங்கள் ஏற்கனவே அதையெல்லாம் படித்துவிட்டு, ஆசிரியர் பயிற்சியில் குழந்தைகளுக்கு பாடம் நடத்துவது எப்படி என படித்து தேர்வு எழுதிவிட்டு வந்தவர்களை மீண்டும் தேர்வு எழுது என்பதை என்னவென சொல்வது. கலைஞர் ஆட்சி போல் நேரடி நியமனம் வேண்டும்'' என்றார்.
பாரதிவரதன் என்பவர், ""எங்க கிராம மக்கள் பலருக்கும் வேலைவாய்ப்பில்லை, தொழிற் சாலைகளில் வேலை குறைப்பு செய்கிறார்கள், வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்'' என்றார். பல் மருத்துவம் படித்துள்ள சாந்தி, நீட் தேர்வு ரத்து குறித்து வலியுறுத்தியதுடன், "எடப்பாடி அரசு தொடங்கியுள்ள மினி கிளினிக்கில் டாக்டர், நர்ஸ் என யாருமில்லை' எனப் போட்டு உடைத்தார். தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுப்புற பாதிப்பு, நிலத்தடி நீர் மட்டம் குறைவு, உடல் உபாதைகள் குறித்து பேசினார் விக்னேஷ்.
தலித் மக்களின் பிரச்சினையை முன்வைத்த ராஜேந்திரன், ""ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் காலனி பகுதிக்கான சுடுகாடு, இடுகாடு இரண்டும் ஒன்றாக உள்ளது. ஒரு பிணத்தை தோண்டிவிட்டு மற்றொரு பிணத்தை புதைக் கும் நிலையில் உள்ளது, அதனை சரிசெய்ய வேண்டும்'' என்றார். ரேவதியோ, ""வீடு தோறும் கழிப்பறை திட்டத்துக்கான பணம் மூலம் எங்கள் வீட்டில் கழிவறை கட்டச் சொன்னார்கள் கட்டினேன். இப்போது வரை பணம் வரவில்லை. என்னைப் போல பலரும் பாதிக் கப்பட்டுள்ளோம்'' என்றார்.
அவர்கள் பேசியதை கேட்டுக்கொண்ட மு.க. ஸ்டாலின், ""நீங்கள் குறிப்பிட்ட குறைகளை குறித்துக் கொண்டேன், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மானிய கடன் வழங்குவது, ஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்வது, ஏரிகளை தூர்வாரி, கரைகள் பலப்படுத்துவது போன்றவற்றை தி.மு.க. ஆட்சி அமைந்ததும் செய்து தருவோம். ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என வாக்குறுதி அளித்தார். நிறைவாக, "விவசாயிகளை வஞ்சிக்க வந்த அ.தி.மு.க. அரசை நிராகரிப்போம்' என தீர்மானம் இயற்றியபின் கூட்டத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.
வேலூரில் துரைமுருகன், திருவள்ளூரில் டி.ஆர்.பாலு, திருச்சியில் கே.என்.நேரு எனக் கட்சியின் தலைமை நிர்வாகிகளும், மாவட்டச் செயலாளர்களும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராம ஊராட்சி, நகரம் மற்றும் பேரூராட்சி வார்டுகள் என 16030 கிராம சபா கூட்டங்களை நடத்தும் வகையில் நிகழ்ச்சிநிரல் வடிவமைக்கப் பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நல்லவன் பாளையம் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் தொகுதி எம்.எல்.ஏ. என்கிற முறையில் முன்னால் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டார். தமிழகத்தில் ஆட்சியில் உள்ள அ.தி.மு.க. அரசை ஏன் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதற்கான பிட் நோட்டீஸ்களை அந்த கிராமத்தில் வழங்கினார். "டிசம்பர் 23 முதல் 2021 ஜனவரி 10-ஆம் தேதிவரை பஞ்சாயத்து ஊராட்சி தீர்மான புத்தகத்தில் இது குறித்து எந்த தீர்மானமும் இயற்றக்கூடாது, கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் (கிளர்க்) யாரும் அந்தப் பக்கமே போகக்கூடாது' என ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு தலைமை செயலகத்தில் இருந்து உத்தரவிட... அதன்படி, அதிகாரிகள் யாரும் வரவில்லை என்பது குறிப்பிடதக்கது. தி.மு.க.வின் முதல் அடி வலுவாக உள்ளதை ஆளுந்தரப்பு கவனிக்கத் தவறவில்லை.
-து.ராஜா
_________________
யார்? எவ்வளவு?
ஆளுநரிடம் தி.மு.க அளித்துள்ள ஊழல் பட்டியல், முதலமைச்சர் பழனிச்சாமி தனது நெருங்கிய உறவினர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை வழஙகியதன் மூலம் 220.21 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமான சொத்துகளை பினாமி பெயர்களில் குவித்துள்ளார் என்கிறது. துணை முதல்வர் ஓ.பி.எஸ். மீதும் காக்னிசன்ட் கம்பெனி கட்டுமான ஊழல் உள்ளிட்டவை மூலம் வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு புகார் தெரிவிக்கிறது. உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி 9 பினாமி கம்பெனிகள் மூலம் ரூ.875 கோடி ஊழல் செய்தார் என்கிறது. மின்துறை அமைச்சர் தங்கமணி நிலக்கரி-போலி மின்சாரக் கணக்கில் 950.26 கோடி ஊழல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு அமைச்சர் காமராஜ், சுகாதாரம் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை உதயகுமார் மீன்வளத்துளை ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் மீதான இந்த ஊழல் புகார்கள் முதல் பாகம்தான் என்றும் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.