டிகர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர், பல்வேறு கருத்துக்களை நக்கீரனிடம் பகிர்ந்துகொண்டார்...

1981-ல் இருந்த வேகம், சுறுசுறுப்பு 40 வருடம் கழித்து சமுத்திரக்கனியை வைத்து இயக்கும் "நான் கடவுள் இல்லை' படத்திலும் காணமுடிவதாக சொல்கிறார்கள். சலிப்பே ஏற்படவில்லையா?

SAC

சமுத்திரக்கனி எனக்கு பழக்கமில்லை. அவரை எனது உதவியாளர் மூலம் அழைத்து கதையை சொல்வதாகச் சொன்னேன். படப்பிடிப்பில் முதல்நாள், நான் சொல்லிக் கொடுப்பதைப் பார்த்து, "சார், இப்பெல்லாம் இந்த மாதிரி சொல்லிக் கொடுக்க டைரக்டர் இல்லை' என்று சொன்னது மட்டுமல்ல... மொத்த படப்பிடிப்பிலும் அவர் என்னை ரசித்திருக் கிறார். இது கடைசி நாளில்தான் தெரியும். கடைசிநாளில், "இந்த எனர்ஜி எப்படி சார்?' என்றார். "யோகாசனம் செய்வது என்னை இப்படி மாற்றியுள்ளது' என்று கூறியதும் ஆச்சரியப்பட்டார்.

Advertisment

இப்போது கோவை ஞாபகம் வருகிறது. கோவை வெள்ளியங் கிரி மலையில் ஒரு சித்தர் இருக்கிறார். அவர் பெயர் ஜக்கி வாசுதேவ், யோகா கற்றுத் தருகிறார் என நண்பர்கள் சொன்னார்கள். நல்ல விசயம்தானே என்று நானும் அங்கு சென்றபோது, அங்கு இரண்டு ஏக்கர் நிலத்தில் மூன்று குடிசைகளை அமைத்து யோகாவை சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். நானும் 14 நாள் கத்துக்கொண்டேன். உண்மையிலேயே நன்றாக இருந்தது. "கடவுள் என்றால் யார்?' என்று கேட்டேன். அதற்கு, "நீதான் கடவுள்' என்று அவர் கூறினார். எனக்கு அவரின் பதில் ஆச்சரியமாக இருந்தது. இதெல்லாம் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இப்போது இருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது.

இப்போதும் அந்தத் தொடர்பு தொடர்கிறதா?

இல்லை. அதனை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது. அன்று நடந்த உண்மைகளைச் சொன்னேன். "அத்தனைக்கும் ஆசைப்படு' என்றார். "அதில் தவறான விசயங்களும் உள்ளதே' என்றேன். அதையும் நியாயப்படுத்துவார். அவரிடம் கேள்வி கேட்டால், நேராக பதில் சொல்ல மாட்டார். எதையோ சுற்றி வளைத்து குழப்பிவிடுவார். என்ன கேள்வி கேட்டோம் என்பதையே மறக்க வைத்துவிடுவார். எந்தக் கேள்வி கேட்டாலும் உங்களை குழப்பிவிடக் கூடிய பயங்கர திறமைசாலி. "ஆசைப்படு தப்பில்லை' என்பார். ஏனென்றால் அவரை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக்கொண்டார். அந்த இரண்டு ஏக்கர் இவ்வளவு பெரியதா வளர்ந்துவிட்டது. ஒரு ஆன்மீகவாதிக்கு இவ்வ ளவு சொத்து எதற்கு என்று நாம் கேள்வி எழுப்புவோம் என்பதால் அவர் அத்தனைக்கும் ஆசைப்படு என முந்திக் கொள்கிறார். அந்த மலைகளை வளைத்துப்போட்டு அவ்வளவு பில்டிங் கட்டியிருக்கிறார். கோவை, சென்னையிலும் பெரிய பெரிய பில்டிங் என சொத்துக்கள். அவர் செய்யாத தொழிலே இல்லை. வேடிக்கையான விபரீதமான சாமியாராக மாறிவிட்டார். "நீ நன்றாக இருக்கணும்' என்று மற்றவர்களுக்கு சொல்லக்கூடிய ஒரு ஆன்மீகவாதிக்கு இவ்வளவு சொத்து, பணம் எதற்கு? யாராவது நேருக்கு நேராக அவரை கண்ணால் பார்த்துவிட்டால் சரண்டர் ஆகிவிடுவார்கள். பெரிய கோடீஸ்வரனெல்லாம் சொத்துக்களை எழுதிக் கொடுத்துவிட்டு மொட்டை அடித்து உட்கார்ந்திருக்கிறார்கள். ஒத்த பிள்ளையா இருக்கிறவனெல்லாம் சொத்துக்களை கொடுத்துவிட்டு மொட்டை அடித்து உட்கார்ந்திருக்கிறான். "ஜக்கி என்று கூப்பிடுங் கள்' என்று சொன்னவர் இன்று சத்குரு. சி.எம்., பி.எம்., ஜனாதிபதி என ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்கிறார். எந்த ஆட்சி வந்தாலும் அவர் அவராகவே இருக்கிறார்.

Advertisment

sac

எம்.ஜி.ஆர். இருந்த காலத்திலேயே கலைஞருடன் நட்பில் இருந்தவர் நீங்கள். தற்போது தி.மு.க. ஆட்சி நடக்கிறது. ஆட்சியாளர்களுடன் நட்பு தொடர்கிறதா?

கலைஞர் எனது 3 படங்களுக்கு டயலாக் எழுதியிருக்கிறார். அரசியல் தொடர்பாக கலைஞரிடம் பழகவில்லை. இறுதிவரை நட்பாகவே பழகினார். சினிமா மீது அவருக்கு காதல் உண்டு. சினிமா சம்பந்தப்பட்ட நெருக்கமானவர்கள் யாராவது அவரை சந்திக்கணும் என்றால் உடனே சந்திக்கலாம். ஆனால் ஜெயலலிதாவை மினிஸ் டர்ஸ்கூட ஒருவாரத்திற்கு முன்பே நேரம், தேதி வாங்கித்தான் பார்க்க முடியும். இப்போது ஸ்டாலின் வந்திருக்கிறார். யாரைக் கேட்டாலும் நன்றாக செயல்படுகிறார் என்கிறார்கள். ஆனால் அவரோட எனக்கு அதிக பழக்கம் கிடையாது. சந்திக்க முயற்சித்தும் இதுவரை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு நெருக்கம் இல்லை. இதுவே கலைஞராக இருந்திருந்தால் இரண்டு, மூன்று நாட்களில் அழைப்பு வந்துவிடும்.

2011-ல் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தீர்கள். அது நீங்கள் எடுத்த முடிவா, விஜய் எடுத்த முடிவா?

இரண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவு. 40 இடங்களில் பிரச்சாரம் செய்யவேண்டும் என்று ஜெயலலிதா சொன்னார். அந்த 40 இடங்களும் தி.மு.க.வுக்கு சாதகமான இடங்கள். 500, 1000, 2000 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. கிட்டதட்ட 30 தொகுதிகளில் தோல்வியை சந்தித்தது. அதனை நான் ஒரு அறிக்கையில் ராமருக்கு அணில் உதவியதுபோல், அந்த அம்மாவுக்கு நாங்கள் உதவி செய்ததாக சொன்னோம். அதையே அந்த அம்மாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அந்த தேர்தலில் உங்கள் மன்றத்தினருக்கு சீட் கேட்டதாக தகவல் வெளியானதே?

15 சீட் கேட்டோம். 3 சீட் தருவதாகச் சொன்னார்கள். கௌரவ மாக 15 சீட் இருந்தால் வாங்கிக் கொள்ளலாம். இல்லையென்றால் வேண்டாம்... ஆதரவு அளிப்பதாக முடிவு எடுத்து ஆதரவளித்தோம்.

விஜயகாந்த் சினிமா பயணத்தில் உங்கள் பங்கு முக்கியமானது. அவரது அரசியல் நுழைவுப் பயணத்திலும் உங்களது ஆலோசனை இருந்ததா? சமீபத்தில் அவரை சந்தித்தீர்களா?

saccவிஜயகாந்த்தை நினைத்தால் மனசு கஷ்டமாக இருக்கிறது. அரசியலில் ஒரு கட்டத்தில் விஜயகாந்த் உயர்ந்தநிலைக்கு வந்தார். அப்போதுகூட என்னை எங்கு பார்த்தாலும் எழுந்து வந்து மரியாதை செய்வார். நன்றி என்றால் விஜயகாந்த்தான். விஜயகாந்த் பத்தி பேசினா அழுதுடுவேன். அப்படிப்பட்ட விஜயகாந்த்தை கடந்த ஒன்றரை வருடங்களாக பார்க்கவில்லை. கேட்டுக் கேட்டுப் பார்த்துவிட்டேன். என்னமோ பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

2011 தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு நான் முதலில் போய் ஆதரவு தெரிவித்தேன். அப்போது விஜயகாந்த் வந்தால் நல்லா இருக்கும் என்று ஜெ. சொன்னார். இதனை விஜயகாந்த்திடம் போய் சொன் னேன். அப்ப, விஜயகாந்த் என்னை திட்டினார். "சார் உங்களுக்கு ஜெயலலிதாவைப் பத்தி தெரியாது. ஜெயிச்ச உடனே நம்மள தூக்கி போட்ரும். நீங்க சப்போர்ட் பண்றது எனக்கு பிடிக்கல'ன்னு சொன்னார். அப்ப நான், "அமைதியா பேசுறாங்க, ஏதோ செய்யணும் என்று நினைக்கிறாங்க அதனாலத்தான் நான் சப்போர்ட் பண்ணுனேன். நீயும் பண்ணுனா நல்லா இருக்கும்'' என்றேன். அது அப்புறம் இப்படி உல்டாவா ஆயிடுச்சி. அப்புறம் ஒருநாள் கேட்டாரு. "அந்த அம்மாவ பத்தி நான் சொன்னேனே கேட்டீங்களா... உங்களவிட எனக்கு நல்லா தெரியும்'னு சொன்னாரு.

விஜய் மக்கள் இயக்கம், "அவர் அரசியலுக்கு வருவது உங்களுக்கும் அவருக்கும் உள்ள பிரச்சினை... இவை யெல்லாம் ஒரு நாடகம். ஏற்கனவே திரையுலகில் இருந்தவர்கள் சிலர் அரசியலுக்கு வந்து வெற்றி பெறவில்லை. சக்சஸ் ஆனா எஸ்.ஏ.சி. சரியான முடிவு எடுத்து பையனை கொண்டு வந்துவிட்டார், ஒருவேளை சக்சஸ் ஆகவில்லை என்றால் விஜய் எவ்வளவோ சொன் னார், இந்த எஸ்.ஏ.சி.தான் அரசியல்ல இழுத்துவிட்டார். படம் மட்டும் நடித்திருந்தால் மென்மேலும் போவார் என்று சொல்லித் தப்பிப்பதற்கான நாடகம்' என சிலர் சொல் கிறார்களே?

விஜய் இன்னும் ஒரு ஐந்து, பத்து வருடங்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பது எனது அழுத்தமான முடிவு. தமிழக மக்கள் அவரை சினிமாவில் உச்சத்தில் வைத்துள்ளனர். அதனை அவர் அனுபவிக்கணும். இந்த நேரத்துல அவரை பிடித்து இழுந்து வந்து இதிலும் அல்லாமல், அதிலும் இல்லாமல் விடுவதற்கு நான் முட்டாப்பய இல்ல. ஆனால் பத்து வருஷம் கழித்து நான் அவரை வலுக் கட்டாயமாக இழுத்து வந்து, தமிழக மக்களால் நீ இந்த நிலைமையில இருக்குற. அவுங் களுக்காக நீ ஏதாவது பண்ணனும் அப்படின்னு பண்ண வைப்பேன். இதை யாரிடமும் சொல்ல வில்லை... உங்களிடம் சொல்கிறேன்.

விஜய்யை அரசியலில் இறக்க வேண்டும் என்பது தானே உங்களது ஆசை?

தமிழ்நாட்டில் அண்ணா வரைக்கும் அரசியல் நன்றாக இருந்தது. அதுபோன்ற அரசியல் வரவேண்டும் என்று ஆசைப்படு கிறேன். அதற்கு என் பிள்ளை காரணமாக இருந்தால் மிகவும் சந்தோஷப்படுவேன்.