மோடியின் ஆசியுடன், ஆசியாவின் நம்பர் ஒன் தொழிலதிபராக வலம்வரும் கௌதம் அதானியின் அதானி குழுமம், தனது நிறுவனத்துக்கு கூடுதலாக 20,000 கோடி ரூபாயை பங்குச்சந்தையில் திரட்டுவதற்காகத் திட்டமிட்டுள்ள நிலையில், அந்நிறுவனத்தின் அதிரிபுதிரி வளர்ச்சிக்குப் பின்னணியில் அரசியல் அதிகார பலம் மட்டுமல்லாது, வரி ஏய்ப்பு, ஹவாலா மோசடி, பங்குச்சந்தை பித்தலாட்டம் போன்ற பல்வேறு குற்றச்செயல்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது ஹிண்டன்பர்க் ரிசர்ச் எனும் நிறுவனம்.

ff

ஏற்கெனவே, கார்ப்பரேட் வரிச்சலுகை, தாராளமான வங்கிக் கடன்கள், வங்கிக் கடன் தள்ளுபடிகள், வெளிநாடுகளில் தொழில் தொடங்க முழு ஒத்துழைப்பு என மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, அதானி குழுமத்தின் வளர்ச்சிக்காகத் தனது அதிகார வரம்பை தவறாகப் பயன்படுத்துவது குறித்து நமது நக்கீரனில் சுட்டிக்காட்டி கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம். அதேபோல் அதானி துறை முகங்களின் வழியாக நடக்கும் போதைப்பொருள் கடத்தல் குறித்த விவரங்களையும் கட்டுரையாக்கி யிருக்கிறோம். தற்போது, ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த இரண்டாண்டுகளாக அதானி குழுமத்தின் வளர்ச்சிக்கான பின்னணிகள் குறித்து ஆய்வு செய்ததில், பல்வேறு முறைகேடுகளைக் கண்ட றிந்து அவற்றை அம்பலப்படுத்தி யுள்ளது. இந்த நிறுவனம், அதானி குழுமத்தின் முறைகேடான வளர்ச்சி குறித்து விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டதோடு, இந்த முறைகேடுகள் தொடர்பாக 88 கேள்விகளை முன் வைத்துள்ளது.

Advertisment

இதில், பங்குச்சந்தை மோசடி களைக் கண்காணித்து விசாரிக்கும் செபியின் செயல்பாடுகளையும் விமர் சனம் செய்துள்ளது. அதையடுத்து, பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்ட அதிர்ச்சியால் அதானி நிறுவனங்களின் பங்குகளில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டது. அறிக்கை வெளியான இரண்டே நாட்களில் இந்நிறுவனத்தின் பங்குகள் சராசரியாக 22% சரிவடைந்து சுமார் 4.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 பெருநிறுவனங்களின் பங்கு விலை, கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் சராசரியாக 819% உயர்ந்துள்ளது. குறிப்பாக, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலை மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 2,500% வளர்ச்சியடைந்ததன் பின்னணியில் மிகப்பெரிய பங்குச்சந்தை மோசடி நடந்திருப்ப தாகக் குற்றம்சாட்டுகிறது.

Advertisment

adani

அதானி குழுமம், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருந்தபோதிலும், இதிலுள்ள முக்கிய பொறுப்பாளர்கள் 22 பேரில் 8 பேர் அதானி குடும்ப உறுப்பினர்களாகவே இருக்கிறார்கள். அதானி குழுமத்தில் அவரது குடும்பத்தினர் இருப்பதிலென்ன ஆச்சர்யம்? என்று கேட்கலாம்... ஆனால் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் மீதும் மிகப்பெரிய நிதி மோசடிப் புகார்கள் இருந்தபோதும் அவர்களுக்கு சட்டத்துக்குப் புறம்பாக பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருப்பதைக் கேள்வியெழுப்புகிறது.

கௌதம் அதானியின் இளைய சகோதரர் ராஜேஷ் அதானி, 2004-2005 ஆண்டுகளில் வைர ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் மோசடி செய்ததாக, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டி.ஆர்.ஐ.) குற்றம்சாட்டி யிருந்தது. போலியாக வருவாயைக் காட்டுவதற்காக, எவ்வித அலுவலகமும், வணிகச்செயல்பாடும் இல்லாத லெட்டர்பேட் நிறுவனங்களைக் கணக்குக் காகக் காட்டி நிதி மோசடி செய்திருக்கிறார். இதன்மூலம் நிதி மோசடி, வரி ஏய்ப்பு செய்ததற்காக இருமுறை கைது செய்யப்பட்டிருக்கிறார். இத்தனைக்கும் பிறகு அதானி குழுமத்தின் நிர்வாக இயக்குனராக்கப்பட்டார்.

கௌதம் அதானியின் மச்சினர் சமீர் வோரா. இவரும் ராஜேஷ் அதானியைப் போலவே வைர வணிகத்தில் ஈடுபட்டதோடு, அதேபோல், டிட் டோவாக லெட்டர்பேட் நிறுவனங்களைக் காட்டி வரி ஏய்ப்பு, ஹவாலா மோசடிகளைச் செய்து டி.ஆர்.ஐ. அமைப்பால் குற்றம்சாட்டப்பட்டவர். இவர் தற்போது, அதானி குழுமம் ஆஸ்திரேலியா வில் செய்துவரும் நிலக்கரிச் சுரங்க வர்த்தகப் பிரிவின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

ஹவாலா மோசடியின் அங்கமாக, மொரீ ஷியஸ், கேமன் தீவுகள் போன்ற குட்டிக் குட்டி நாடுகளில் லெட்டர்பேட் நிறுவனங்களை உருவாக்குவார்கள். அந்த நிறுவனங்களில் முதலீடு செய்வது போலவும், வர்த்தகத்தில் ஈடுபடுவது போலவும் கணக்குக்காட்டி, தங்கள் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவார்கள். இதுபோன்ற மோசடிகளைத்தான் கௌதம் அதானியின் உறவினர்கள் செய்துவருவதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

adani

இதில், கௌதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி, வெளிநாட்டு லெட் டர்பேட் நிறுவனங்களைச் செயல்படுத்துவதிலும், ஹவாலா நெட்வொர்க்குகளைக் கையாளுவதிலும் கைதேர்ந்தவரென்று அதானி குழும விசாரணை களில் தெரியவந்திருக்கிறது. வினோத் அதானி மற்றும் அவரது தொழில் நண்பர்களின் மூலம், சுமார் 38 லெட்டர்பேட் நிறுவனங்கள் மொரீ ஷியஸ் மட்டுமல்லாது சைப்ரஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் மற்றும் கரீபியன் தீவுகளில் இயங்கிவருவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்! அந்நிறுவனங்கள் குறித்த மொத்த விவரங்களையும் திரட்டியிருக்கிறார்கள். இந்த 38 நிறுவனங்களும் கணக்கில் மட்டுமே காட்டப்படுமே ஒழிய, இந்நிறுவனங்களுக்கென உண்மையான அலுவல கமோ, தொடர்பு எண்களோ எதுவுமே இருப்ப தில்லை! இந்த போலி நிறுவனங்களுக்கென 13 இணைய தளங்களை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த இணைய தளங்களும் டம்மியாக ஒரே நாளில், ஊரை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டவை யாகவே இருந்திருக்கின்றன. இந்த இணையதளங் களில் காட்டப்படும் முகவரிகள் அனைத்தும் ஒன் றாகவே இருக்கின்றன. அவற்றிலிருக்கும் கன்டென்ட் களும் ஒரேபோல இருப்பது தெரியவருகிறது.

வினோத் அதானியின் போலி நிறுவனங்கள் அனைத்தையும், பங்குச்சந்தையில் செய்யும் மோசடி களுக்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல் மொரீஷியஸை தலைமையகமாகக் கொண்ட நிறுவனங்கள், அதானி குழுமத்தில் பெருமளவு முதலீடு செய்திருப்பதாகக் காட்டப் பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. குறிப்பாக, அதானி குழுமத்தின் வெளிநாட்டு முதலீட்டுத் தொடர்புகளுக்கும், பங்குச்சந்தை மோசடிக்குற்றச்சாட்டுகளுக்கும் அச்சாணியாக விளங்கும் வினோத் அதானி குறித்துதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு, வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கான விதிமுறைகளை சரியாகப் பின்பற்றாததால், அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களில் 4 நிறுவனங்கள், பங்குச்சந்தை வர்த்தகத்திலிருந்தே வெளியேற்றப்படக்கூடிய கண்டிஷனில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதிலென்ன கொடுமையெனில், இப்படியான அதானி குழும நிறுவனங்களில் தான் இந்திய அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. வங்கிகளின் பணம் முதலீடாக அளிக்கப் பட்டுள்ளது. அதாவது, நம் இந்திய மக்களின் சேமிப்பை... வருமானத்தை... அதானியின் மோசடி நிறுவனங்களில் முதலீடாக ஒன்றிய அரசு செலுத்தியுள்ளது.

அதானி குழுமத்தில் கடந்த 8 ஆண்டுகளில், 5 தலைமை ஆடிட்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். எந்தவொரு பெருநிறுவனத் திலும் தலைமை ஆடிட்டர்களின் பணி நீண்ட காலத்துக்கானதாகவே இருக்கும். இப்படி அடிக்கடி மாற்றப்பட்டிருப்பதே அங்குள்ள கணக்கு வழக்குகளில் நிறைய குற்றங்கள் நடைபெறுவதன் வெளிப்பாடு தான் என்கிறது இந்த ஆய்வு. அதேபோல் அதானி குழுமத்துக்கு தனிப்பட்ட முறையில் ஆடிட்டிங் செய்யும் நிறுவனம் குறித்தும், அதில், 22, 23 வயதான இளைஞர்கள் ஆடிட்டர்களாகச் செயல்படுவது குறித்தும் கேள்வியெழுப்பியிருக்கிறது.

ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தைப் போலவே முந்தைய காலங்களில் பல்வேறு அமைப்புகள் அதானி குழுமத்தின் வளர்ச்சி குறித்து ஆய்வுகள் நடத்தி மோசடிகளைக் கோடிட்டுக் காட்டியிருக்கின்றன. கடந்த 2021ஆம் ஆண்டில் இதேபோல் அதானி நிறுவனத்தின் முதலீட்டு மோசடிகள் குறித்து ஒரு ஆங்கிலப் பத்திரிகை வெளிப்படுத்தியபோது, அதானி குழுமத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. தற்போது அதானி குழுமம் பங்குச்சந்தை மூலமாகக் கூடுதல் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியிருப்பதோடு, அடுத்த 5 ஆண்டுகளில், 5 புதிய நிறுவனங்களைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவது குறித்தும் திட்டமிட்டுவருகிறது. இப்படியான சூழலில் மிகப் பெரிய அளவில் அதானி குழுமம் குறித்த குற்றச் சாட்டுகள் வந்துள்ளது அந்நிறுவனத்துக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

பங்குச்சந்தையில் மிகப்பெரிய மோசடிகளைச் செய்து அம்பலப்பட்டிருக்கும் அதானி குழுமத்துக்கான மோடி அரசின் ஆதரவு, ஊழலுக்கான அப்பட்டமான ஆதரவின்றி வேறில்லை. அதானிக்கு மட்டுமல்லாது, அம்பானிக்கும் மோடி அரசின் சலுகைகள் கேள்விக்குறியானவையே. நாட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கான தொழில் நிறுவனங்களை முடக்கிவிட்டு, மோசடியாக முன்னேறிய அதானி குழுமத்தின்மீது மோடி அரசு என்னமாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதே ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்பார்ப்பு!

-தெ.சு.கவுதமன்