ஒரு காலத்தில் தமிழகத்தையே அதிரவைத்த உசிலம்பட்டி பெண் சிசுக்கொலை விவகாரத்தை அவ்வ ளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது.
பெண் குழந்தைகள் கூடாது என்கிற வெறுப்புணர்வில், பெண் சிசுக்கள் பிறந்தால் உடனே கள்ளிப்பாலை ஊற்றியோ, சுனையுள்ள நெல்லைத் தொண்டைக் குழியில் திணித்தோ, அல்லது கருவில் இருக்கும் குழந்தையை ஆயுதங்கள் மூலம் துண்டு துண்டாக வெட்டி எடுத்தோ கொன்றுவிடுகிற கொடுமை அப்போது அதிகம் அரங்கேறியது. இதை ஒழிக்க அரசும் சமூக தன்னார்வல அமைப்பு களும் படாதபாடு படவேண்டி இருந்தது.
அதேபோன்ற கருவறைக் கொலைகள் மீண்டும் தமிழகத்தின் சில பகுதிகளில் அரங்கேறி வருகின்றன என்பதுதான் இப்போது நம்மை அதிரவைக்கின்றன. கடலூர் மாவட்டத்திலேயே இதற்கான சம்பவங்களைப் பார்க்கலாம்.
மங்களுர் அருகிலுள்ளது கச்சிமயிலூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயது முருகன். இவர் சில ஆண்டுகளாக ராமநத்தம் பகுதியில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். அவரிடம் வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன், மருந்து மாத் திரைகள் வாங்குவதற்காக அடிக்கடி வந்துசென் றுள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் வேல்முருகன் மனைவி அனிதா மீண்டும் கர்ப்பமாகி இருக்கிறார். அதனால் மூன்றாவதாக உருவான குழந்தையும் பெண்ணாகத்தான் இருக்கும் என்று எண்ணி, அந்தத் தம்பதிகள், இது குறித்து மெடிக்கல்ஷாப் முருகனிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார்கள். முருகனோ, தானே அனிதா விற்கு கருக்கலைப்பு செய்வதாக கூறி, சில மாத்திரை களைக் கொடுத்து, கருக்கலைப்பில் ஈடுபட்டிருக் கிறார். இதில் மயக்கமடைந்த அனிதா, உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் செல்ல... பயந்துபோன மெடிக்கல் முருகன், ஒரு காரில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு வேல்முருகனுடன் அனிதாவைக் கொண்டு சென்று, அட்மிட் பண்ணிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். அனிதாவோ, சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
இதில் அதிர்ந்துபோன வேல்முருகன், ராமநத்தம் போலீசில் புகார் செய்ய... வழக்குப் பதிவு செய்து மெடிக்கல் முருகனைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மெடிக்கல் முருகன், பார்மசிஸ்ட்டுக்குப் படிக்காதவர் என் பதோடு உரிமம் இன்றி மெடிக்கல் ஷாப் வைத்திருந் ததும் தெரிய வந்திருக்கிறது.
இந்த விவகாரம் சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனத்துக்குப் போக, மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் ஒரு குழுவாக சென்று வேப்பூர், திட்டக்குடி, ராமநத்தம் பகுதிகளில் உள்ள மெடிக்கல் ஷாப்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மங்களூர் என்னும் கிராமத்தில் ஒரு வீட்டில், தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்துவருவது தெரியவர... அந்த வீட்டை முற்றுகையிட்டனர். அது குமார் என்பவ ரது வீடு. அங்குள்ள மாடி அறையில் சோதனை மேற்கொண்டபோது, அங்கு குமார், அவரது மனைவி சித்ரா ஆகிய இருவரும் இருபத்தி மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணிற்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து அமர வைத்திருந்தனர்.
உடனே அவரை மீட்டு, மேல் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே குமாரும் அவருடைய மனைவி சித்ராவும் எஸ்கேப் ஆகிவிட்டனர். இதுபோன்ற சட்டவிரோத கருக்கலைப்பு மையங்கள், பல இடங்களிலும் நடப்பதாக மாவட்ட மக்கள் வேதனையோடு தெரிவித்தனர். ஸ்கேன் சென்டர்களில் பெண் குழந்தைகளை அடையாளம் காண்கிறவர்கள், தாயின் வயிற்றையே பலி பீடமாய் ஆக்குகிறார்களாம்.
நாம் ஏற்கனவே "பெண் சிசுக்கொலை! அதிர்ச்சி ரிப்போர்ட்!'' என்ற தலைப்பில் அக்டோ பர் 2012 தேதியிட்ட நக்கீரன் இதழில், மூன்று பக்கக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில் கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கருவிலேயே ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறிந்து பெண் சிசுக்களை கருவிலேயே அழிக்கும் சம்பவங்கள் நடப்பதைப் புள்ளி விபரங்களுடன் விவரித்திருந்தோம்.
மார்ச் 2011 வரை தமிழகத்தில் 560 மருத்துவ மனைகளில் ஸ்கேன் சென்டர்களும், 8 மரபணு ஆய்வுக்கூடங்களும், 3943 அல்ட்ரா சவுண்ட் சோதனைக்கூடங்களும், முப்பத்தி எட்டு கருத்தரிப்பு மையங்களும் இயங்கி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தோம். இதைத் தொடர்ந்து அரசு அப்போது சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
குறிப்பாக, அப்போதைய பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அகமது, சுகாதாரத் துறையினர் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கருவுற்ற பெண்களை வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்து பதிவு செய்யவேண்டும் என்றும், அவர்களுக்கு குழந்தை பிறக்கும் வரை, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். அதேபோல் மருத்துவமனைகளில் அதிரடி ஆய்வு செய்து, ஸ்கேன் சென்டர் களை மூடினார். இப்படி கர்ப் பிணிப் பெண்கள் கருச்சிதைவு செய்வதைத் தடுக்கும் வகையில், பல்வேறு அதிரடி நடவடிக்கை களை எடுத்ததால் அங்கே பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. மத்திய அரசு இதற் காகவே பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அகமதுவை டெல்லிக்கு அழைத்து, பரிசும் பதக்கமும் அளித்தது. ஆனால் இப்போது மீண்டும் பெண் சிசுக் கொலைகள் தொடர்கதையாகி விட்டது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பொன். பெரியசாமி, "நான் 2011-16 வரை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த போது, பெண் சிசுக்கொலை குறித்து அப்போது நக்கீரன் இதழில் வெளியான கட்டுரையைப் படித்துவிட்டு, பெண் சிசுக் கொலைகளைத் தடுக்கவேண்டும் என்று களம் இறங்கினேன். பெண் குழந்தைகள் பிறப்பதை ஊக்கப்படுத்த, எங்கள் ஊராட்சியில் யார் வீட்டில் பெண் குழந்தை பிறந்தாலும் அந்த குழந்தைக்கு தேவையான உடை, பவுடர், சோப்பு, பூ பழம் இவைகளுடன் ஒரு கிராம் தங்க மோதிரத்தையும் தாம்பூலத் தட்டில் வைத்து சீர்வரிசையாக பெண் குழந்தை பெற்ற தாயிடம் கொடுத்தோம். அதனால் பெண்சிசுக் கொலை நின்றது. ஆனால் இப்போது நிலைமை மோசமாகி வருவதை அறியும்போது வேதனையாக இருக்கிறது''’என்றார்.
அனைத்து மக்கள் அரசியல் இயக்கத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி பிரியா, "இப்போது பெண்கள் ராணுவம் உட்பட அனைத்து துறைகளிலும் திறமையுடன் பணிசெய்து வருகிறார்கள். பல சாதனைகளையும் படைத்து வருகிறார்கள். அப்படி இருந்தும் சிலர் பெண் குழந்தை என்றால் அதை பெரும் சுமையாகக் கருதுகின்ற போக்கு இருக்கிறது. பெண் சிசுக் கொலையைத் தடுக்க கருத்தடை மாத்திரைகளைத் தடை செய்ய வேண்டும். அதற்குத் துணை போகும் மருத்துவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' ’என்கிறார் அழுத்தமாக.
தேசிய குற்றப் புலனாய்வுத்துறை இணை இயக்குனரான ஹேமா கார்த்திக்கோ "பல தாய்மார்களுக்கு குடும்பங்களில் பல்வேறு சிரமங்கள் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளும் வருங் காலத்தில் தங்களைப் போல கஷ்டப்படுவார்களோ என்ற எண்ணத்தில் பெண் குழந்தையை பெற்றுக் கொள்ளத் தயங்குகிறார்கள். அது தவறு. பெண்கள் வாழ்க்கை ஒரு போராட்டம்தான். அதில் போராடித்தான் வெற்றி பெற வேண்டும். அப்படி சாதித்தவர்கள் இங்கே ஏராளம். அப்படிப்பட்டவர் களை ரோல் மாடலாகக் காட்டி பெண் பிள்ளைகளுக்கு தைரியம் கொடுக்க பெற்றோர்கள் முன்வரவேண்டும். பெண் பிள்ளைகள் பிறப்பு விகிதம் குறைந்தால், பெண்களுக்கு எதிரான சம்ப வங்கள் அதிகரிக்கும் என்பதை உணரவேண்டும். எனவே, பெண் பிள்ளைகள் குறித்த விழிப்புணர்வை ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஏற்படுத்தவேண்டும். பெண் குழந்தை பிறப்பதை சந்தோஷமாகப் பார்க்கும் மனநிலையை ஏற்படுத்த வேண்டும்''’என்கிறார் அக்கறையோடு.
சமூக ஆர்வலரும் திரிணாமுல் காங்கிரஸ் தமிழக தலைவருமான சபிதா நம்மிடம், "கருவறை முதல் கல்லறை வரை பெண் பிள்ளைகளுக்கு இங்கே பாதுகாப்பில்லை. பள்ளி, கல்லூரி, பணிபுரியும் இடம், இப்படி அனைத்து இடங்களிலும் அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கள் அதிகரிக்கின்றன. இதனால் பயந்துபோகும் பெற்றோர்கள், பெண் குழந்தையே வேண்டாம் என்று முடிவு செய்கிறார்கள். அதன் விளைவுதான் இப்படிப்பட்ட பெண் சிசுக்கொலைகள். பெண் பிள்ளைகளுக்கு உரிய பாதுகாப்பு கிடைத்தால் எந்தப் பெற்றோரும் பெண் பிள்ளைகளை வெறுக்கமாட்டார்கள். தற்போது இந்தியாவில் பல மாநிலங்களில் பெண் பிள்ளைகள் குறைவாக உள்ளனர். பலரும் உ.பி., ஒரிசா, ஜார்கண்ட், பீகார், கொல்கத்தா போன்ற மாநிலங்களுக்குச் சென்று, 7 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய்வரை பெண் பிள்ளைகளை விலை கொடுத்து வாங்கி வந்து திருமணம் செய்துகொள்கிறார்கள். பெண் பிள்ளைகள் சந்தைப் பொருளாக ஆக்கப்படுகின்றனர். இந்தக் கொடுமை கள் குறித்த தகவல்கள் சமூக வலைத் தளங்களில் வெளிவந்துள்ளன. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில், அப்பகுதியில் இளைஞர்களுக்கு திருமணம் செய்ய பெண் பிள்ளைகள் கிடைக்காத காரணத்தால். அவர்களது பெற்றோர்களே கேரள மாநிலத்திற்குச் சென்று, பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்து அழைத்து வருகிறார்கள். இந்தநிலை பரவாமல் இருக்க பெண் சிசுக் கொலைகளைத் தடுக்க வேண்டும்''’என்று திகைப்பூட்டுகிறார்.
தமிழகத்தில் பெண் சிசுக் கொலைகள் இனியும் அரங்கேறாமல் தடுக்கவேண்டிய பொறுப்பு, தமிழக அரசுக்கு உண்டு. எனவே உடனடி நடவடிக்கைகளில் இறங்கவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோள்.