சுற்றிச்சூழ அரபு நாடுகளை வைத்துக்கொண்டுள்ள லெபனானில் பெட்ரோலுக்குத் தட்டுப்பாடு வர என்ன காரணம்?

மத்திய கிழக்கு நாடுகளான பாலஸ்தீனம், சிரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் நடுவே அமைந்துள்ளது லெபனான். இந்நாடுகளின் போர்களுக்கிடையே லெபனானின் தலையும் உருட்டப்படுவதால், கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுப் போர் லெபனானின் பொருளாதாரத்தை ஒட்டச் சுரண்டியிருக்கிறது. மிச்சம் மீதி இருந்ததை அரசியல்வாதிகள் ஊழலில் வழித்தெடுத்துவிட ஒட்டு மொத்த பொருளாதாரச் சீர்குலைவில் சிக்கித்தவிக்கிறது லெபனான்.

லெபனான் நாணய மதிப்பு சரிந்துகிடக்கிறது. 14,800 லெபனான் பவுண்டுகளைத் தந்தால்தான் ஒரு டாலர் கிடைக்கும். ஒரு லிட்டர் பெட்ரோல் கிட்டத்தட்ட 2,150 லெபனான் பவுண்டுகளுக்கு விற்கிறது. தவிரவும் பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதியை அந்நாட்டு அரசாங்கம் குறைத்து விட்டதால், கடந்த சில வாரங்களாகவே நாடெங்கும் பெரும் பான்மையான பெட்ரோல் பங்குகள் அடைத்தே கிடக்கின்றன.

vv

Advertisment

இதனால் பெட்ரோல் கிடைக்கும் பங்குகளில் கிலோமீட்டர் நீளத்துக்கு வரிசைகள் நீளவும், அடிதடிகள் நடக்கவும் ஆரம்பித்தன. லெபனானில் மின்சாரத்துக்கும் ஜெனரேட்டர்களையே பலரும் நம்பியிருப்பதால் அதற்கும் பெட்ரோலோ, டீசலோ தேவை. அரசாங்கம் ஒருநாளுக்கு ஒருமணி நேரத்துக்கே மின்சாரம் விநியோகிக்கிறது. பலரும் தொழிலையே நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. மருத்துவமனைகள்கூட மின்வெட்டுக்குத் தப்பவில்லை.

முந்தைய அரசின் பிரதமரான ஹஸன் டியாப் இந்தப் பொருளாதார இக்கட்டைச் சமாளிக்க முடியாமல்தான் ராஜினாமா செய்தார். புதிய அரசாலும் எதுவும் செய்ய இயலவில்லை. அரசுக்கு எதிரான முணுமுணுப்புகளும் போராட்டங்களும் வெடித்த நிலையில் ஆபத்பாந்தவனாய் கொரோனா வந்தது. கொரோனாவைக் காரணம் காட்டி போராட்டக்காரர்களை துரத்தியடித்தது அரசு.

நாட்டின் உள்நாட்டு உற்பத்தியைவிட கடன் அதிகமாக இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடு கிறது. மொத்த மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கு மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ்தான் வசிக்கின்றனர்.

ஏற்கெனவே பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியத்தைக் குறைத்திருக்கும் லெபனான் அரசு, செப்டம்பருக்குமேல் சந்தை விலையில்தான் பெட்ரோல், டீசல், கேஸை வாங்கவேண்டியிருக்குமென அறிவித்துவிட்டது. தற்காலிகமாக ஈரானின் துணையுடன் பெட்ரோல், டீசல் பிரச்சனையை சமாளித்திருக்கும் லெபனான், இனிவரும் மாதங்களில் என்ன செய்யப் போகிறதோ?…

கலீல் ஜிப்ரானின் வார்த்தையில் சொல்வதென்றால், லெபனானின் சிறகுகள் முறிந்து வீழ்ந்துகொண்டிருக்கிறது.

-சூர்யா