சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியை கூலிப்படை கும்பல் ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே வைத்து, பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தது தமிழகத்தை உலுக்கிப் போட்டுள்ளது.

சேலம் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியைச் சேர்ந்தவர் ஜான் என்கிற சாணக்யா. இவர் மீது கிச்சிப்பாளையம், அன்னதானப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை ஆகிய காவல்நிலையங்களில் 2 கொலை, கொலைமுயற்சி, ஆள் கடத்தல், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

ss

கஞ்சா வழக்கில் நிபந்தனை ஜாமீனில் விடுதலையான ஜான், சேலம் அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக மார்ச் 19-ஆம் தேதி, சேலம்வந்து விட்டு திருப்பூருக்குக் கிளம்பிச்சென்றார். அவருடைய மனைவி காரை ஓட்டிச்சென்றார்.

ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே சாமிகவுண்டம் பாளையம் பிரிவு, கோவை & சேலம் தேசிய நெடுஞ்சாலை யில் பகல் 12.15 மணியளவில் கார் சென்றுகொண்டிருந்த போது, பின்னால் வந்த கார் ஒன்று ஜானின் கார்மீது மோதியது. இதுகுறித்து விசாரிப்பதற்காக காரை நிறுத்திய ஜான், கீழே இறங்கி வர முயன்றார். அதற்குள் பின்னால் வந்த காரிலிருந்து 'திபுதிபு'வென இறங்கிய 5 மர்ம நபர்கள், ஜானை காருக்குள் வைத்தே அரிவாளால் சரமாரியாக வெட்டினர். தடுக்க முயற்சித்த அவருடைய மனைவி ஆதிராவையும் வெட்டினர். ஜானின் முகம், தலை, கழுத்து, மார்பு பகுதியில் மர்ம நபர்கள் வெட்டியதில், சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார். கொலையை அரங்கேற்றிய அந்தக் கும்பல், அங்கிருந்து காரில் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றது.

Advertisment

தகவலறிந்த பவானி டி.எஸ்.பி. ரத்தினகுமார், சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சடலத்தை மீட்ட போலீசார், உடற்கூராய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். கொலைக் கும்பல், பச்சப்பாளி என்ற இடத்தில் பதுங்கியிருந்தபோது அவர்களை சித்தோடு காவல் ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீசார் சுற்றிவளைத்தனர். அப்போது அவர்கள் போலீசாரை தாக்கமுயன்றனர். சுதாரித்துக் கொண்ட ஆய்வாளர் ரவி, தன்னிடமிருந்த துப்பாக்கியால் அவர்களை நோக்கிச் சுட்டார். இதில் மூன்று பேருக்கு காலில் குண்டுபாய்ந்ததில் ஓடமுடியாமல் சுருண்டு விழுந்தனர்.

துப்பாக்கி குண்டு பாய்ந்தவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் சதீஸ், சரவணன், பூபாலன் என்பது தெரியவந்தது. இவர்களின் கூட்டாளி கார்த்திகேயன் என்பவனையும் மடக்கிப்பிடித்தனர். இவர்கள் அனைவருமே சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள்.

ssசேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட 20 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி செல்லத் துரையை, ஒரு கும்பல் கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்தது. அன்றிரவு செல்லத்துரை காரில், தனது இரண்டாவது மனைவியின் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஒரு கார் செல்லத்துரையின் கார்மீது மோதியது. அந்த காருக்குள்ளிருந்து இறங்கிய மர்ம கும்பல், செல்லத்துரையை காருக்குள் வைத்தே வெட்டிக்கொன்றது. செல்லத்துரை கொலைக்கு மூளையாகச் செயல் பட்டவர்களுள் ஒருவர்தான் ரவுடி ஜான்.

Advertisment

ஒரு காலத்தில் செல்லத்துரையின் தளபதியாக வலம்வந்த ஜான், அவருக்கு எதிர் கோஷ்டியான டெனிபா கோஷ்டியுடன் கைகோர்த்துக் கொண்டு, திட்டம்போட்டு செல்லத்துரையை காலி செய்தார்.

இந்தக் கொலைக்கு பழிதீர்க்கும்வித மாகத்தான் தற்போது ஜான் கொல்லப்பட்டி ருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதில் இன்னொரு ட்விஸ்ட்டும் இருக்கிறது. ரவுடி ஜான், செல்லத்துரையுடன் இருந்தபோது, டெனிபாவின் தம்பி நெப்போலியனைத் தீர்த்துக் கட்டிய வழக்கிலும் முக்கிய குற்றவாளியாக கைதுசெய்யப்பட்டிருந்தார். பின்னாளில், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் டெனிபாவும், ஜானும் நண்பர்களாகிவிட்டனர்.

டி.ஐ.ஜி. சசிமோகன் கூறுகையில், “"இந்த வழக்கு விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள். விசா ரணைக்கென 5 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

பட்டப்பகலில் நடந்த இந்த கொலை, சட்டமன்றத்திலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.