கொரோனா தாக்கத்தின் இரண்டாவது அலை தீவிரமாக இந்தியாவை உலுக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் ஒரே நாளில் ஏப்ரல் 22-அன்று 3.14 லட்சம் தொற்று ஏற்பட்டு புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அதன் கெடுபிடிக்கு தமிழகமும் தப்பவில்லை. நாளொன்றுக்கு ஏறக்குறைய 13000 பேர் வரை தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகிவருகின்றனர். மருத்துவமனைகளில் படுக்கைக்குத் தட்டுப்பாடு, ரெம்டெசிவிர் மருந்துத் தட்டுப்பாடு, கொரோனா தடுப்பூசி விலை உயர்வு, மூச்சுத் திணறல் நோயாளிகளுக்கான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எனப் பல்வேறு பிரச்சினைகள் பிடித் தாட்டுகின்றன.
கொரோனா பயம் மக்களைப் பிடித்தாட்டினாலும், நடுத்தட்டு மற்றும் அடித்தட்டு மக்களின் கவலையோ, கடந்தமுறை போன்று முழுமையான ஊரடங்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்றிருக்கிறது. வைரஸ் மட்டுமல்ல, பசியும்கூட உயிரைக் குடிக்கும் வைரஸ்தான் என்பது அவர்களது பயம்.
கடந்த வருடத்தில் ஏற்பட்டதுபோல் மீண்டும் வாழ்வாதாரத்திற்கான போராட்டம் தொடங்கிவிட்டது, என விசைத்தறி தொழிலாளர்களிடமிருந்து பரிதாபக்குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. கொரோனோ வைரஸ் தொற்று பரவுவதைவிட தொழில் முடக்கம், அதனால் வருவாய் இழப்பு, அன்றாட உணவுத் தேவைக்கே பரிதவிப்பு போன்றவற்றை எண்ணிக் கண்ணீர்விடத் தொடங்கிவிட்டனர் பலரும்.
ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம், சோலார், அசோகபுரம் என பல பகுதிகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டுவரு கின்றன. நாளொன்றுக்கு 30 லட்சம் மீட்டர் ரயான் துணி இங்கு உற்பத்திசெய்யப்படுகிறது. இவை மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா உட்பட பல மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
இந்தியா முழுக்க கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால் வெளிமாநிலங்களி லிருந்து ஈரோடு பகுதிக்கு ஆர்டர் கிடைப்பது பாதிப்படைந்துள் ளது என விசைத்தறியாளர்கள் கவலையுடன் தெரிவிக்கிறார்கள். சென்ற 15 நாட்களாக உற்பத்தியான ஜவுளிகளை வெளிமாநி லங்களுக்கு அனுப்பமுடியாமல் ரூபாய் 200 கோடி மதிப்பிலான துணிகள் இங்கேயே தேக்கமடைந்துள்ளன. இந்த சூழ் நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப் படுத்துவதாகக் கூறி, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுவிட்டது. 20-ஆம் தேதி இரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்டது.
ஈரோடு மாவட்டத்தில் நாளொன்றுக்கு இரண்டு ஷிப்டுகள் அடிப்படையில் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு ஷிப்டு, அடுத்து இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை ஒரு ஷிப்டு என்ற அடிப்படை யில்தான் விசைத்தறிகள் இயங்குகின்றன. இதன்மூலம் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுவருகின்றனர்.
தற்போது இரவுநேர ஊரடங்கு பிறப்பித்துள்ள காரணத்தால், ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறி உற்பத்தியை 50 சதவீதமாக குறைக்க விசைத்தறி உரிமை யாளர்கள் முடிவுசெய்து, அதன்படி 20-ஆம் தேதி இரவு முதல், காலைநேர ஷிப்டு மட்டுமே விசைத்தறிகள் இயக்கப் பட்டன. இரவுநேர ஷிப்ட் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் நாளொன்றுக்கு 30 லட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தியாகும் இடத்தில் இனி 15 லட்சம் மீட்டர் துணிகள் மட்டுமே உற்பத்தியாகும். இதன் காரணமாக, சுமார் 25 ஆயிரத் துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை இழக்கக்கூடும்.
ஒருபக்கம் வேலைவாய்ப்பு இழப்பென்றால், இன்னொரு பக்கம் முழு ஊரடங்கு குறித்த பயம் பிடித்தாட்டுகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் சென்ற வருடம் தொடங்கிய போது, அதைக் கட்டுப்படுத்து வதாக கூறி மத்திய-மாநில அரசுகள் அறிவித்த பொது முடக் கத்தால் ஒட்டுமொத்தமாக உழைக்கும் மக்களின் வாழ்க்கை முடங்கிப்போனது.
தொழிற்சாலைகள் மூடப்பட்டன. பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. உழைப்பு இல்லை, ஊதியம் இல்லை, அதனால் உணவு உட்பட அத்தியாவசியப் பொருட் கள் வாங்கமுடியாமல் இந்தியா முழுக்க பல கோடி பேர் பரிதவித் தனர். இதில் புலம்பெயர் தொழி லாளர்களின் நிலை வேதனை நிறைந்ததாக இருந்தது. இந்தியா வின் பல மாநிலங்களிலிருந்தும் புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பம், குடும்பமாக அவர் களின் சொந்த மாநிலத்திற்கு நடந்தே சென்ற அவலத்தை மத்திய அரசும் அதன் நிர்வாக மும் வேடிக்கை பார்த்தது.
இப்போது அதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
சென்ற வருடம் தமிழகம் முழுவதும் தங்கியிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள், அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக அவர்களின் குடும்பத்துடன் சொந்த மாநிலத்துக்கு திரும்பிச் சென்றனர்.
போக்குவரத்துத் தடையால் இங்கிருந்தும் பலர் கால்நடையாகவே சென்றனர்.
சில மாதங்கள் கடந்து, கொரோனா வைரஸ் தாக்கம் குறையத் தொடங்கியதாக அரசு அறிவித்து கட்டுப்பாடுகளை தளர்த்தி ரயில், பேருந்து என பொதுப்போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
சொந்த மாநிலத்திற்குச் சென்ற தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் வந்து வேலை செய்துவந்தனர்.
ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஆயிரக்கணக் கான வடமாநிலத்தவர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலைசெய்து வருகின்ற னர். பலரும் அவர்களின் குடும்பத்துடன் வந்து இங்கேயே தங்கி வேலைபார்த்து வரு கின்றனர். குறிப்பாக, திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் பல ஆயிரக்கணக்கானோர் இருக் கிறார்கள். சென்னிமலை, பெருந்துறை, பவானி, கோபி, மொடக்குறிச்சி மற்றும் மாவட்டம் முழுக்க பல பகுதிகளில் தீவன ஆலைகள், கட்டட வேலை, ஹோட்டல்கள், சாலைப் பணிகள், சாயத்தோல் தொழிற்சாலை, செங்கல் சூளை, கட்டுமானத் தொழில் என பல்வேறு வேலைகளைச் செய்துவருகிறார்கள். கொரோனா வைரஸ் இரண் டாவது அலை வேகமாகப் பரவிவருவதாக மத்திய- மாநில அரசுகள் அறிவித்ததோடு, இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் என கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துவிட்டது. ஈரோடு மாவட்டத்திலும் சென்ற ஒரு வாரமாக தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது நூறு பேர், இருநூறு பேர் என எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டுள்ளதன் தொடர்ச்சியாக, மீண்டும் முழு பொதுமுடக்கம் வரப்போகிறது என்ற அச்சம் வடமாநில தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அதற்கேற்ப ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளியைச் சேர்ந்த தனியார் தொழிற்சாலை யொன்றில், தமிழக மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் 700-க்கும் மேற்பட்டோர் பணியாற்றிவருகின்றனர். இவர்களில் சிலருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 70 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி யானது. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தொழிற்சாலை மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஈரோடு மட்டுமல்லாமல், கூடன்குளம் அணுநிலையத்தில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 70 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை புரசைவாக்கத்தில் சரவணா ஸ்டோர் மற்றும் மதார்ஷா துணிக்கடையில் பணிபுரியும் 40 பேருக்கும் மேற்பட்டோருக்கு கொரோ னா தொற்று உறுதியான நிலையில், இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன் சரவணா ஸ்டோ ரையும் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தபோதும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு, திருவள்ளூர் மற்றும் கோவை மாநிலத்தி லேயே பெருமளவிலான பாதிப்புகள் காணப்படு கின்றன. வடமாநிலத் தொழிலாளர்கள் சென்னை, கோவை வட்டாரங்களிலேயே அதிகளவில் காணப் படுவதால், அச்சம் காரணமாக கணிசமான பேர் ஊருக்குத் திரும்புவதில் ஆர்வம்காட்டி வருகின்றனர்.
ஈரோடு, சென்னை ரெயில் நிலையத்திலிருந்து ஓரிரு நாட்களாக நூற்றுக்கணக்கான வட மாநிலத் தவர்கள் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊருக் குப் பயணமாகின்றனர். இதனால் ஈரோடு ரெயில் நிலையம் பரபரப்பாகக் காணப்படுகிறது. தொடர்ந்து வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்குச் செல்வதால் ஈரோட்டில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்ற தொழிலாளர்கள் இல்லாமல் முழுமையாக முடங்கி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்கும் அரசுகள், உழைக்கும் மக்களின் வாழ்வியலைக் கணக்கில்கொண்டு அவர்களுக்கு உதவும் செயல்பாடுகளையும் அறி விக்கவேண்டும். அல்லாமல், தறி நாடாவைப்போல் சொந்த ஊருக்கும் பிழைக்கவந்த ஊருக்கும் மாறி மாறி அலைக்கழியட்டும் என விட்டுவிடக்கூடாது.