சர்வதேச மருந்துக் கம்பெனிகளும், விஞ்ஞானிகளும் கொரோனா நோய்த் தொற்றுக்கு மருந்தும் தடுப்பூசியும் கண்டுபிடிக்க தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துக்கொண்டிருக்க, மேஜிக் காட்டுபவர் தொப்பியிலிருந்து முயலை எடுத்துக் காட்டுவதுபோல் பதஞ்சலி நிறுவனம் ஜூன் 23-ல் அசால்ட்டாக இரண்டு மருந்துகளை அறிமுகப்படுத்தியது.
இந்த நாடே கொரோனா மருந்துக்காகக் காத்திருக்க, ஆய்வகத்தில் பரிசோதனை முறையில் தயாரித்துச் சோதிக்கப்பட்ட முதல் ஆயுர்வேதா மருந்தை கொரோனா சிகிச்சைக்காக அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இது பதஞ்சலி ஆய்வு மையம் மற்றும் நிம்ஸ் பல்கலைக்கழகத்தின் கூட்டுத் தயாரிப்பாகும்’ என ஹரித்துவாரில் நடைபெற்ற மருந்து அறிமுகக் கூட்டத்தில் ஊடகத்துறையினரிடம் பெருமிதமாக அறிவித்தார் ராம்தேவ்.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சி, கொரோனா மருந்தைக் கண்டுபிடித்த நிறுவனத் தலைவரான ராம்தேவைப் பேட்டிகாணும் போது, இந்த மருந் தில் என்னென்ன ஆயுர்வேதப் பொருட்கள் பயன் படுத்தப்பட்டிருக் கின்றன… அவை எப்படி செயல்படும்’ என கேட்டபோது, ராம்தேவிடமிருந்து சற்றுநேரத்துக்கு மௌனமே வெளிப்பட்டது. பிறகு சுதாரித்துக்கொண்டு பட்டையின் (Cinnamon)பெயரைச் சொன்னார். ""இந்த மருந்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களெல்லாம் இதோ என் முன்னால் இருக்கின் றன. (பேட்டியின்போது காட்சிக்காக மருந்துகள் அடுக்கிவைக்கப்பட்டி ருந்தன.) இவையெல்லாம் சுவாச மண்டலத்தை சுத்தம்செய்து வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்'' என்றார்.
இந்த மருந்து அலோபதி மருந்துகளைவிட பலனளிக்கக்கூடியது’ என்றவரிடம், பரிசோதனைகள் நடத்தாமலே இந்த மருந்து எப்படி கொரோனாவைக் குணப்படுத்தும் என்கிறீர்கள் என ஒரு தூண்டிலைப் போட்டார் நேர்காணல் செய்தவர். உஷாரானா ராம்தேவ், ""நாங்கள் இந்த மருந்தைத் தயாரிக்க, ஆய்வகப் பரிசோதனை நடத்த தேவையான அனுமதிகளைப் பெற்றிருக்கிறோம். ஆயுஷ் அமைச்சகம் எழுப்பக்கூடிய அனைத்துக் கேள்விகளுக்கும் நாங்கள் முன்பே பதிலளித்திருக்கிறோம்'' என்றார்.
ராம்தேவின் கொரோனா மருந்துகள் குறித்து சரமாரியாக விமர்சனங்கள் பல தரப்பிலிருந்தும் எழுப்பப்பட்டன. இதனால், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக விளம்பரம் செய்வதை நிறுத்திவிட்டு, மருந்தின் உள்ளடக்கம், ஆய்வு எவ்விதம் நடத்தப்பட்டது போன்ற விவரங்களைச் சமர்ப்பிக்கும்படி பதஞ்சலி நிறுவனத்துக்கும் ஆய்வுக்கு உரிமம் வழங்கிய உத்தர காண்ட் அரசுக்கும் அவசர அவசரமாக உத்தரவிட்டுள்ளது.
கொரோனா மருந்து என்று சொல்லப்பட்ட அறிமுகக் கூட்டத்தில் பதஞ்சலி நிறுவனத்தின் கரோனில், ஸ்வாசரி என இரு மருந்துகளை அறிமுகம் செய்து பேசினார் ராம்தேவ். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே நடத்திய பரிசோதனையில் இந்த மருந்து நூறு சதவிகிதம் சாதகமான முடிவுகளை அளித்துள்ளதாக ராம்தேவ் பெருமை பேசினார். டெல்லி, அகமதாபாத் மற்றும் பல நகரங்களில் 280 கொரோனா நோய்த்தொற்றாளர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டதாகவும் இதில் நோயாளிகள் நூறு சதவிகிதம் குணமாகியதாகவும் தெரிவித்தார்.
பதஞ்சலி நிறுவனத்துடன் இணைந்து இந்த மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்ட நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் டாக்டர் அபிஷேக் சர்மா, இந்த ஆய்வை மேற்பார்வை யிட்டவர்களில் ஒருவராவார். ""நாங்கள் இந்த ஆய்வுக்காக கொரோனா நோய்த்தொற்றுள்ள நூறுபேரைப் பயன்படுத்தினோம். இவர்களில் 50 பேருக்கு மருந்தை தொடர்ந்து அளித்தோம். இன்னும் பாதிப்பேருக்கு மருந்தை பாதியில் நிறுத்திவிட்டோம். மருந்து நிறுத்தப்பட்ட அந்த 50 பேருக்கு பிளாஸிபோ எனும் டம்மி மருந்துகள் அளிக்கப்பட்டன'' என்கிறார்.
ஏற்கெனவே பதஞ்சலியின் ஆயுர்வேதா பொருட்களின் தரம்குறித்த சந்தேகங்கள் எழுந்த நிலையில், பதஞ்சலியின் ஆய்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகம் இப்போது எழுந்திருக்கிறது. விதிகளை வளைத்து, செல்வாக்கைப் பயன்படுத்தி சந்தைக்கு வர முயன்றதாலேயே இந்தத் தடை என்கிறார்கள் மருத்துவத் துறையினர்.
கொரோனாவைக் குணப்படுத்தும் மருந்தும், தடுப்பு மருந்தும் இன்னும் உறுதியாகாத நிலையில், நோய் எதிர்ப்புத் திறனுக்கான மருந்துகளே வழங்கப்படுகின்றன. தமிழக அரசு பரிந்துரைத்த கபசுர குடிநீரை, முறையான சான்றிதழ் இன்றி பரிந்துரைத்த சித்த மருத்துவர் தணிகாசலம் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், உலகமறிய டி.வி.யில் பேட்டி அளித்த பாபா ராம்தேவ்வின் பதஞ்சலிக்கு விளம்பரத் தடை மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் அவர், மோடிக்கு வேண்டியவர்.
-க.சுப்பிரமணியன்
______________
அவருக்குப் பதில் இவர்!
கோவையில் கொலையான இளைஞர் தொடர்பாக ஜூன் 17 இதழில் வெளியான செய்தியில் மஞ்சு என்பவரின் படத்திற்குப் பதிலாக தனன்யா என்பவரின் படம் இடம்பெற்றி ருந்தது குறித்து நக்கீரன் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தது. அதன்பிறகு, சம்பந்தப் பட்டவர்களே தொடர்புகொண்டு இருவரது படங்களையும் அனுப்பினர். படத்தை மாற்றி வெளியிட்டதால் தனது கலைச்சேவை நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட்டிருப்பதை தனன்யா சுட்டிக்காட்டினார். அதுபோல, மஞ்சுவும் தொடர்பு கொண்டு, இளைஞர் விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றார். நக்கீரனிடம் பேசிய மற்ற திருநங்கையர், “எங்களில் பலரை காவல்துறை விசாரித் தது. இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால் விடுவித்துவிட்டது. எங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நக்கீரன் இதனைப் பதிவு செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டனர்.