காங்கிரஸ் பொதுக்குழுவில் செல்வப்பெருந்தகை வீசிய குண்டு தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணிக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை காமராஜர் அரங்கத்தில் 11-ந் தேதி நடந்த பொதுக்குழுவில் கட்சியின் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கிருஷ்ணசாமி, தங்கபாலு, கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட மூத்த மற்றும் முன்னாள் தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அணித் தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
தனது தலைமையில் நடந்த அந்த பொதுக்குழுவில் துவக்க உரையாற்றிய செல்வப்பெருந்தகை, ""நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல்காந்தியைப் போல உழைத்த ஒரு தலைவரை பார்க்க முடியாது. அவரை பின்பற்றி காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை தமிழகத்தில் வலிமையாக்க நாமும் உழைக்க வேண்டும். அதற்கான செயல் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். எத்தனை காலம்தான் தமிழகத்தில் பிறரை நாம் சார்ந்திருக்கப் போகிறோம்? சுயமாக காங்கிரஸ் வளர வேண்டாமா? தோழமை என்பது வேறு! கூட்டணி என்பது வேறு. அதற்காக எத்தனை காலத்துக்கு இப்படியே இருக்கப்போகிறோம்?
காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவது குற்றம் கிடையாது. ஆனால், நம் கட்சிக்கு இப்போது தேவை உழைப்பும் ஒற்றுமையும்தான். காமராஜர் காலத்தில் தனித்துப் போட்டியிட்டு 20 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு வங்கியை காங்கிரஸ் வைத்திருந்தது. அதெல்லாம் எங்கே போனது? அதனால், காமராஜர் ஆட்சியை கொண்டுவர கட்சியின் கட்டமைப்பை வலிமைப் படுத்த வேண்டும். தமிழகத்தில் காங்கிரசின் கால் தடம் பதியாத கிராமங்களே இல்லாத அளவுக்கு பாத யாத்திரை நடத்துவோம்''’என்று ஆவேசமாகப் பேசினார்.
இந்த சமயத்தில் மைக் பிடித்த காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் ரஞ்சன்குமார், ""தொண்டர்களின் விருப்பம் காமராஜர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதாக இருக்கிறது. ஆனால், நம்முடைய தலைவர்களுக்குத்தான் அது தெரிவதில்லை. தொண்டர்களின் உணர்வுளுக்கு மாறாக பேசுகிறார்கள்'' என்கிற ரீதியில் பேசினார்.
இவருடைய பேச்சு, நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் தி.மு.க.வுக்கு ஆதரவாகப் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் கருத்துக்களைத் தாக்குவதாக இருந்தது. இதனால் இளங்கோவனின் முகம் இறுகியது. ரஞ்சன்குமார் பேசியதற்கு பிறகு சிலர் பேசினர்.
அதனையடுத்து, தனக்கு அவசர வேலை இருப்பதாகவும் உடனே கிளம்ப வேண்டும் என்பதாகவும் தெரிவித்துவிட்டு உடனே மைக் பிடித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ""தேர்தலில் பாஜக தோற்றுப்போனதற்கு காரணம் பா.ஜ.க.வில் கிரிமினல்களை அதிகம் சேர்த்ததுதான் என தமிழிசை சௌந்திரராஜன் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியிலும் அப்படிப்பட்ட கிரிமினல்கள் இருக்கிறார்கள்'' என ரஞ்சன்குமாரை தாக்கினார். ""காமராஜர் ஆட்சி வேண்டும் என சொல்கிறீர்கள். இப்போது தமிழகத்தில் நடைபெறுவதே காமராஜர் ஆட்சிதான். இந்த தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்றிருக்கிறோம். இதற்கு காரணம் தி.மு.க.வும் மு.க.ஸ்டாலினும்தான். காங்கிரஸ் தனியாக தேர்தலில் நின்றபோது கன்னியாகுமர், சிவகங்கை ஆகிய 2 தொகுதிகளில்தான் 1 லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்றது. மற்ற தொகுதிகளிலெல்லாம் டெபாசிட் தொகையை நாம் இழந்திருக்கிறோம். தனித்து நிற்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கலாம்; அது பேராசையாக இருக்கக்கூடாது. அதன் பிறகு உங்கள் இஷ்டம்''’என்று சொல்லிவிட்டு, கூட்டத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார் இளங்கோவன். இவரது பேச்சுக்கு கூட்டத்தில் எதிர்ப்புகள் வந்தன.
இளங்கோவனின் கருத்தையே பிரதிபலிக்கும் வகையில் பீட்டர் அல்ஃபோன்ஸ், விஸ்வநாதன் போன்ற பலரும் பேசியபோது, அவர்களின் கருத்துக்கும் எதிர்ப்புகள் வந்தன. இரண்டு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் வகையில் பொத்தம்பொதுவாகப் பேசினார் கே.எஸ்.அழகிரி.
இதனையடுத்து கூட்டத்தின் இறுதியில் பேசிய செல்வப்பெருந்தகை, ""ஸ்டாலின் மீது எனக்கு எப்போதும் பற்றுதல் உண்டு. அதற்காக காமராஜர் ஆட்சி குறித்து பேசக்கூடாது எனச் சொல்வது தவறு. கூட்டணி வேறு; கட்சியை வலைமைப்படுத்துவது வேறு''’என்று சொல்ல, தொண்டர்கள் ஆர்பரித்தனர்.
பிற கட்சிகளை சார்ந்துதான் இருக்கப்போகிறோமா? என்று செல்வப்பெருந்தகை பற்ற வைத்த நெருப்பும், கூட்டணிக்காக காமராஜர் ஆட்சியை பற்றி பேசாமல் இருக்க முடியாது என்கிற கருத்தும் தி.மு.க. தலைமைக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது.
பொதுக்குழுவில் நடந்தவைகளை கட்சியின் மேலிடத்துக்கு அனுப்பிவைத்துள்ளனர் கட்சியின் கோஷ்டி தலைவர்கள்.
அவர்களில் சிலரிடம் நாம் பேசியபோது, ""தேர்தல்னு வந்துட்டா தி.மு.க.விடம் பம்முவதும், தேர்தல் முடிந்ததும் காமராஜர் ஆட்சின்னு சொல்லி தி.மு.க.வை கோபப்பட வைப்பதும் காங்கிரசின் கலாச்சாரமாக இருக்கிறது. தேர்தல் முடிந்ததும், மாநிலத்தில் கட்சியை வலிமைப்படுத்தும் முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள் என எல்லா மாநில தலைமைக்கும் ராகுல்காந்தி சொல்லி யிருக்கிறார். இதனை தமிழக காங்கிரஸ் தலைவர் தவறாக புரிந்துகொண்டாரோ என்னவோ, கூட்டணிக்குள் சிக்கலை உருவாக்க முயற்சிக்கிறார். காமராஜர் ஆட்சி வேணும்னா, நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டிருக் கலாமே? ஏன், அப்போது பேசவில்லை? தி.மு.க. கூட்டணியை விட்டு விலகிவிட்டால் ஒரு தொகுதியில்கூட காங்கிரஸ் டெபாசிட் வாங்க முடியாதுங்கிற எதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்க சிலர் விரும்புகின்றனர். அதற்காக இப்போதே பல்ஸ் பார்க்கிறார்கள். விஜய்யுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் விரும்பலாம்; விஜய் விரும்புவாரா?'' என்று செல்வப்பெருந்தகைக்கு எதிராக குற்றம்சாட்டுகிறார்கள் காங்கிரஸ் பெருந்தலைகள்!