கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலானோர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்தனர். இப்படி வந்த இலங்கைத் தமிழர்களை திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி உள்பட சில மாவட்டங்களில் முகாம்கள் அமைத்து தங்க வைத்துள்ளார்கள். பல வருடங்களாக தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து கொடுத்த போதிலும், இவர்களுக்கென நிரந்தர வீடுகள் கிடையாது. இந்த நிலையில் தான் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற வுடன் அகதிகள் முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.
அதைத் தொடர்ந்து, கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு, இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கான கட்டுமானப் பணிகள் அந்தந்த மாவட்டங்களில் தொடங்கப்பட்டன. அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அடியத்து, தோட்டனூத்து, கோபால் பட்டி ஆகிய அகதிகள் முகாம்களில் வசிக்கக் கூடிய இலங்கைத் தமிழர் களுக்கு ரூ.17.17 கோடி செல வில், அனைத்து அடிப்படை வசதி களுடன் 321 கான்கிரீட் வீடுகளின் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடந்தது. இதை கூட்டு றவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் மேற்பார்வையிட்டு ஆய்வு செய்து வந்ததால், விரைவில் முழுக் கட்டுமானமும் முடிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் கடந்த 14-ம் தேதி திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் திடீரென வேலைப்பளுவின் காரணமாக முதல்வர் நேரடியாக வர முடியாததால், காணொலிக் காட்சி வாயிலாக இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம் வீடுகளை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, பயனாளிகளுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் வழங்கிய வீட்டுச் சாவிகளை ஈழத்தமிழர்கள் உற்சாகமாக வாங்கிச் சென்றனர்.
"இலங்கையிலிருந்து நிறைமாத கர்ப்பிணி யாகத்தான் எங்க அம்மா தமிழ்நாட்டுக்கு அகதி யாக வந்து திண்டுக்கல்லில் உள்ள அடியனூத்து முகாமில் தங்கியிருந் தார். அங்குதான் நான் பிறந்தேன். நான் பிறந்ததிலிருந்து கான்கிரீட் வீட்டில் இருந்ததே இல்லை. இரும்புத் தகரத்தையும், கிடுகையும் வைத்து அமைக்கப்பட்ட வீட்டில்தான் இருந்தேன். மழை பெய்தால் அங்கங்கே ஒழுகும். வெயிலடித்தாலும் வீட்டுக்குள் வரும். அதைப் பொறுத்துக்கொண்டு, ஃபேன் வசதிகூட இல்லாமல், அம்மா -அப்பாவுடன், கணவன் -பிள்ளைகளோடு ஒரே ரூமில் கூனிகுறுகிப் படுத்துவந்தோம். இப்போது எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஐயா மூலம் ஒரு விடிவு காலம் பிறந்திருக்கிறது'' என்று சந்தோசத்தோடு கூறினார் அடியனூத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழச்சியான சுலோச்சனா.
இது சம்பந்தமாக இலங்கைத் தமிழர் கர்ணாவிடம் கேட்டபோது, "ஓட்டுரிமை தவிர மற்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்து வருகிறது. அதுலயும் தற்போது நிரந்தரமாக வசிக்க எங்களுக்கு கான்கிரீட் வீடுகளைக் கட்டிக் கொடுத்த தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலினை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம். இதுலயும், தற்போது புதிதாக திருமண மான பலருக்கு வீடு கிடைக்கவில்லை. இதையும் கூடிய விரைவில் கட்டித் தருவதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இங்குள்ள ஒட்டுமொத்த ஆம்பளைகளும் கூலி வேலைக்குப் போய்தான் குடும்பத்தை நடத்தி வருகிறோம். இதில் வீட்டுக்கு வர காலதாமதம் ஆனாலும்கூட எங்களுக்கு போலீசார் மத்தியிலும் எந்த தொந்தரவும் இல்லை. தமிழர்கள் போலவே நாங்களும் சுதந்திரமாக வாழ்ந்துவருகிறோம்'' என்று கூறினார்.
தோட்டனூத்தைச் சேர்ந்த நதியாவிடம் கேட்டபோது, "கிடுகு, பேனர்களைத் தடுத்து வைத்து குடியிருந்து வந்தாலும்கூட... பாத்ரூம் வசதி இல்லாமல் பக்கத்தில் உள்ள காட்டுப் பக்கம் தான் ஒதுங்கி வருவோம். அது போல் குடிதண் ணீர் கூட இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்று அக்கம்பக்கத்தில் உள்ள கேணிகளில்தான் பிடித்துவருவோம். ஆனால் இப்ப முதல்வர் ஐயா கட்டிக் கொடுத்த கான்கிரீட் வீட்டில் பாத்ரூம் வசதியோடு, குடி தண்ணீர் குழாயும் வீட்டுக்கு வெளியே இருக்கிறது. இலவச மின்சார வசதியும் கொடுத்திருக்கிறார். அதுபோல் நூலகம், பொதுக் குளியலறை, இப்படி அனைத்து அடிப்படை வசதிகளோடு கட்டிக் கொடுத்திருக்கிறார்'' என்று கூறினார்.
இந்த இலங்கைத் தமிழர்களுக்காக கடந்த பல வருடங்களாக தமிழக அரசு எவ்வளவோ சலுகைகள் செய்திருந்தாலும்கூட, நிரந்தரமான வசிப்பிடமாக கான்கிரீட் வீடுகளைத் தற்போதைய முதல்வர் கட்டிக் கொடுத்திருப்பதை தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய விஷயமாகக் கருதி, இங்குள்ள இலங்கைத் தமிழர்கள் அனைவரும் உற்சாகத்தில் மிதக்கிறார்கள்.
அதே நேரத்தில், கோவை உள்ளிட்ட முகாம் களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களை புது வீடு கட்டுவதற்காக அரசு வேறு இடங்களுக்கு மாறச் சொல்லியிருப்பதால், வீடுகள் கிடைக்காமலும், வாடகை கட்டுப்படியாகாததால் பலரும் தடு மாறுகிறார்கள். ஆகவே, இவர்களுக்குத் தற்காலிக மாற்று இடத்தை மறுவாழ்வுத் துறையே ஏற்பாடு செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என முகாம் மக்கள் அரசுக்கு வேண்டுகோள் வைக்கின்றனர்.
-வேல்