""நான் நன்றாகத் தூங்கிக்கொண்டு இருந்த போது, நள்ளிரவில் என்னை எழுப்பி வலுக் கட்டாயமாக என் கழுத்தில் அந்த ஆள் தாலி கட்டிவிட்டார். அப்போது என் குடும்பத்தினர் எல்லோரும் இருந்தனர்''’’
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/childmarriage_0.jpg)
-வேலூர் மாவட்ட கழிஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த அந்த 15 வயது சிறுமி, விருதம்பட்டு காவல்நிலையத்தில் சொன்ன இந்த வார்தைகளைக் கேட்டு அங்கிருந்த காக்கிகள் அதிர்ந்துபோனார்கள். உடனடியாக சமூகநலத்துறை அதிகாரிகள் மூலம் அந்த சிறுமியைக் காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுமியின் குடும்பம் விசாரணை வளையத்தில் சிக்கியது.
இந்த ஒரு சம்பவத்தோடு இது போன்ற ஏடாகூடங்கள் முடிய வில்லை. அடுத்தடுத்தும் இதேபோல் அரங்கேறின. வேலூர் மாநகரம் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயதேயான சிறுமியை 27 வயது இளைஞருக்கு ஜூலை 12-ந் தேதி திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடக்க, இந்தத் தகவல் தெரிந்ததால் சமூக நலத்துறை அதிகாரிகள், அங்கு சென்று திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர். பெற்றோர்கள் மீது வழக் கையும் தொடுத்தனர். இதேபோல் அணைக்கட்டு தாலுக்கா முத்துக்குமரன் மலையை சேர்ந்த 33 வயது இளைஞருக்கு 13 வயது சிறுமியை திருமணம் செய்துவைக்க முயல, அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கலெக்டருக் குத் தகவல் கொடுத்தனர். அந்தத் திருமணமும் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதேபாணியில் இராணிப்பேட்டை மாவட்ட ஆற்காடு மாசாப் பேட்டையைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் ஆந்திரா மாநில சித்தூர் இளைஞருக்கும் ஜூன் 10-ந் தேதி நடக்க இருந்த திருமணமும் தாசில்தார் இளஞ்செழியன் மூலம் நிறுத்தப்பட்டது. இந்த வரிசையில், இராணிப்பேட்டை மாவட்ட கீழ் விளாப்பக்கத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியும், மண்காட்டுச் சேரியைச் சேர்ந்த 16 வயது சிறுமியும், திருப்பத்தூர் திருமால்நகரைச் சேர்ந்த 16 வயதேயான பள்ளி மாணவியும், கும்மிடிகான்பட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமியும், கவுண்டப்பனூரை சேர்ந்த 16 வயது சிறுமியும், சிறார்த் திருமணம் என்ற விபத்திலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/childmarriage1.jpg)
இப்படி கடந்த ஓரு வாரத்தில் மட்டும் 12 பால்ய திருமணங்களை வேலூர் மாவட்ட சமூக நலத்துறை தடுத்து நிறுத்தியுள்ளது. திருப்பத்தூர், அரக்கோணம் மாவட்டங்களில் 10 திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை வேலூர் மாவட்டத்தில் மட்டும் இப்படி ஏறத்தாழ 32 திருமணங்களையும், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏறத்தாழ 40 திருமணங்களையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். இவ்வளவு கண்காணிப்புக்கு மத்தியிலும் 17 சிறுமிகளுக்கு திருமணக் கொடுமைகள் அரங்கேறிவிட்டன. இது தொடர்பான வழக்குகளும் அவர்களின் குடும்பத்தினரை நெருக்கிக் கொண்டிருக்கின்றன.
சிறார் திருமணங்கள் திடீரென அதிகரிக்கக் காரணம் என்ன? ஆம்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் பாபு மணிசெல்வம் சொல்கிறார்...’""வறுமையால் மைனராக இருக்கும்போதே சிறுமிகளுக்கு திருமணம் செய்துவைக்கும் அவலத்தைத் தடுப்பதற்காகவே, மூவலூர் ராமாமிர்தம்மாள் பெயரில் திருமண நிதிஉதவித் திட்டத்தைத் தொடங்கினார் கலைஞர். அதைப்பெற திருமணத்தின் போது 18 வயது பூர்த்தியாகி யிருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் 10 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் வைக்கப்பட்டது. இதனால் சிறார் திருமணங்கள் நின்றது. இப்போது, கொரோனாவால் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி யுள்ளது. அதனால் ஒருவ னுக்கு வேலை இருக்கும் போதே திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்ற மனோபாவம் பலருக்கும் வந்துவிட்டது. அதேபோல் தொழிற்சாலைகளில் வயது பார்க்காமல் முளைக்கும் காதல் காரணமாகவும் இதுபோன்ற திருமணங்கள் நடக்கிறது'' என்றார் கவலையாய்.
ஓய்வுபெற்ற ஆசிரியரும், மனிதவளப் பயிற்சியாளருமான மங்கையர்கரசியோ கொரோனா மக்களிடம் வேகமாக முடிவுகளை எடுக்கவைக்கிறது. பள்ளிகள், கல்லூரிகள் மூடியிருக்கிறது, பிள்ளைகள் வீட்டில் உள்ளனர். பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள், இதனை அசௌகரியமாக உணர்கிறார்கள். பெண் குழந்தைகளை உடனடியாக திருமணம் செய்து வைத்து அனுப்பிவிட வேண்டும் எனத் துடிக்கிறார்கள். காரணம் பெண்களுக்கு சமூகப் பாதுகாப்பு இல்லாததுதான். அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி 30 வயது கடந்த இளைஞர்கள், மனைவியை இழந்து இரண்டாம் திருமணத்துக்கு ஆசைப்படும் நடுத்தர வயதுடையவர்கள் சிறுமிகளை மணக்கத் தயாராகிறார்கள். இதேபோல் வசதியான குடும்பங்களிலும் சாதி மாறி பிள்ளைகள் வழிதவறிவிடக் கூடாது என்ற உணர்வோடும் அவசர அவசரமாகச் சிறார் திருமணங்களை நடத்துகின்றனர். இதன் பாதிப்பை அவர்கள் உணர்வ தில்லை'' என்றார் வருத்தமாய்.
""பெரியவர்கள் எப்படி இருந்தாலும் இளைஞர்களிடம் உள்ள விழிப்புணர்வே, சிறார் திருமணங்களைத் தடுத்து நிறுத்த உதவியாக இருக்கிறது'' என்கிறார் சமூக நலத்துறையைச் சேர்ந்த அந்த அதிகாரி. அரும்புகள் கசக்கப்படும் அவலத்துக்கு நிரந்தர முட்டுக்கட்டை போட வேண்டியது அவசர அவசியம்.
-து.ராஜா
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-07/childmarriage-t.jpg)