வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில், மாநில அரசின் பொதுத்துறை நிறுவனமான டெல் ( Tamil Nadu Industrial Explosives Limited -TEL) என்கிற தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவனம், 1986 பிப்ரவரி 9-ம் தேதி தொடங்கப்பட்டது. வனத்துறைக்குச் சொந்தமான 600 ஏக்கரை, 99 வருடக் குத்தகைக்கு வாங்கி, வெடிமருந்து தயாரிக்க, வெடி மருந்துகளைப் பாதுகாக்க கட்டடங்கள் கட்டியது. அலுவலகம், நிறுவன அதிகாரிகள், ஊழியர்களுக்களுக்கான வீடுகள், ஓய்வு விடுதிகள் கட்டுவதற்கு எனத் தனியாக 100 ஏக்கர் இடத்தைச் சொந்தமாக வாங்கியது. கட்டடங்கள், இயந்திரங்கள், வாகனங்கள் என மொத்த திட்ட மதிப்பு 120 கோடி ரூபாய். இதற்கென மத்திய, மாநில அரசுகள் 62 கோடி ரூபாயை ஒதுக்கின. பொதுமக்களிடம் ஒரு ஷேர் 10 ரூபாய் என்ற வீதத்தில் பங்குகளை விற்பனை செய்து, அதன்மூலம் 8 கோடி ரூபாய் திரட்டப்பட்டது, மீதி 50 கோடி ரூபாய்க்கு வங்கிகளில் கடன் வாங்கியது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tel.jpg)
மொத்தம் சுமார் 1,500 நேரடித் தொழிலாளர்கள், 500 மறைமுகத் தொழிலாளர்களுடன் உற்பத்தியைத் தொடங்கியது. இந்தியாவில் அரசு நடத்திய தொழில்முறை வெடிமருந்து நிறுவனம் இது ஒன்று மட்டுமே என்பது தனிச்சிறப்பாகும். தரமான வெடி மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்ததால் டெல் வெடி பொருட் களுக்கு உலகளாவிய மார்க்கெட் இருந்தது. வெடி மருந்துகள் தயாரிப்பதற்கு தினமும் 3 ஷிப்ட் முறையில் பணிகள் நடந்தன. ஐ.டி.பி.ஐ. வங்கியில் நிறுவனம் வாங்கியிருந்த 38 கோடி ரூபாய் கடனை, 1998-ல் ஒரே தவணையில் செட்டில் செய்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பிற வங்கி களில் வாங்கிய கடனையும் அடைத்து, வெற்றி கரமாகச் செயல்பட்ட இந்நிறுவனத்துக்கு, 2004-ம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சம்பவம் மண்ணள்ளிப் போட்டது.
2004-ல் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி டூ திருமலை சென்றபோது மலையில் வெடி விபத்தில் சிக்கினார். அந்த வெடிகுண்டுகள் நெட்ரோ கிளிசரன் வெடி மருந்து மூலம் தயாரிக்கப்பட்டது. அப்போது ஒன்றிய அமைச்சரவையில் தெலுங்கு தேசம் பங்குபெற்றிருந்தது. பிரதமராக இருந்த வாஜ்பாய், தேசியப் பாதுகாப்பு எனக் காரணம்கூறி நெட்ரோகிளிசரின் வெடி மருந்தை இந்தியா முழுவதும் தடை செய்தார். நைட்ரோகிளிசரினை அதிகளவில் தயாரித்தது டெல் நிறுவனம். இந்த தடையால் அதன் விற்பனை சரிவுகண்டது. அதன்பின்னர், பல்வேறு அரசியலால் திட்ட மிட்டே இந்த தொழிற்சாலை நட்டத்துக்கு தள்ளப்பட்டது.
இதுகுறித்து டெல் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் சங்க நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, "டெல் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது எனச்சொல்லி 2008-லேயே தொழிலாளர்களை வி.ஆர்.எஸ்.ஸில் போகச்சொல்லி நெருக்கடி தந்தார்கள். சம்பளம் தராமல் நிறுத்தியதால் நெருக்கடி தாங்காமல் நூற்றுக்கணக்கானவர்கள் வி.ஆர்.எஸ். வாங்கினார்கள். நிறுவனத்தின் செயலைக் கண்டித்து தொழிலாளர் அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தினோம். 2015-ஆம் ஆண்டு இறுதியில் உற்பத்தியை நிறுத்தினார்கள். மீண்டும் திறக்கவேண்டுமெனப் போராடினோம். 2017 அக்டோபர் 13-ம் தேதியோடு நிரந்தரமாக நிறுவனத்தை மூடியது அப்போதைய அ.தி.மு.க. எடப்பாடி அரசு.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/minister_57.jpg)
பணியிலிருந்த 332 பேரில் 100 பேர் மாற்றுப்பணியாக அரசின் காகித ஆலை, அரியலூர் சிமெண்ட் ஆலை, சிப்காட் எனச் சில நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டனர். மீதியிருந்த 228 பேரிடம் கட்டாயப்படுத்தி வி.ஆர்.எஸ். வாங்கச் சொன்னார்கள். இதைக் கண்டித்து பல போராட்டங்கள் நடத்தினோம். என் தொகுதிப் பிரச்சனையெனச் சொல்லி, அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.விடம் போராடி 47 கோடி ரூபாய் நிதி வாங்கித் தந்தார் இப்போது அமைச்சராக உள்ள தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன். அந்த பணத்தைக்கொண்டு ஊழியர்களுக்கு செட்டில்மெண்ட் செய்து அனுப்பியது நிறுவனம். வி.ஆர்.எஸ். தந்து அனுப்பிய தொழிலாளர்களுக்கு மருத்துவ ஈட்டுத்தொகை, அகவிலைப்படி என ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் சில லட்சங்கள் தர வேண்டும். முதலில் வி.ஆர்.எஸ். செட்டில்மெண்ட், பிறகு மற்றதை தருகிறோம் எனச்சொன்னார்கள். எங்களுக்கு செட்டில்மெண்ட் செய்தது போக, இன்னமும் 20 கோடி ரூபாய் அளவுக்கு நிதி உள்ளது. சுமார் நான்கரை ஆண்டுகளான பின்னும்கூட இப்போதுவரை அந்த தொகைகளைத் தரவில்லை.
டெல் நிறுவனத்துக்கு சொந்தமான 100 ஏக்கரை சிப்காட் அமைக்கத் தந்துவிட்டார்கள், வனத்துறையிடமிருந்து 99 ஆண்டுகால குத்தகைக்கு வாங்கப்பட்ட 700 ஏக்கரை ஒன்றிய அரசின் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு தந்துள்ளார்கள். அதன்மூலம் மாதம் 4.5 லட்சம் ரூபாய் வாடகையாக வருகிறது. தொழிலாளர்கள் 100 பேர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு போட்டுள்ளோம். தொழிலாளர்களுக்குத் தரப்படவேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்க தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்'' எனக் கோரிக்கை வைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-04/tel-t.jpg)