மிழ் சினிமாவில் காமெடிக் கென்று தனி ரசிகர்கள் எப்போதுமே இருப்பார்கள். இவர்களுக்கென்றே முழு நீள படத்தைத் தாண்டி நகைச்சுவை காட்சிகளை மட்டுமே முழு நேரமும் பிரத்தியேகமாக பார்ப்பதற்கென்றே ஒளிபரப்புகிற தொலைக்காட்சிகளும் இருக்கின்றன. அந்த அளவிற்கு காமெடி காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்க்கிற ரசிகர்கள் இருக்கிறார்கள். காமெடி நடிகர்களைக் கொண்டாடுகிற பெரும் ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

soori

கதாநாயகன் அல்ல கதையின் நாயகன் என்று மேடைதோறும் தன்னடக்கத்துடன் பேசி வருகிற சூரி, கடந்து வந்த பாதை கடினமானதுதான். எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் 1996-ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற கனவோடு மதுரையிலிருந்து வந்த சூரி, தன்னுடைய கடின உழைப்பால் கதையின் நாயகனாக முன்னேறி தன்னுடைய ’கொட்டுக்காளி’ படத்தின் திரையிடலுக்காக பெர்லின் சர்வதேச திரைப்பட விழா வரை சென்று வந்துள்ளார்.

சினிமாவைச் சுற்றியுள்ள வேலைகளான அரங்கம் அமைப்பது, லைட் செட்டிங் வேலைகளைப் பார்த்து வந்த சூரி, சின்னத்திரையில் சில சீரியல்களிலும், சில திரைப் படங்களில் ஒரு சில காட்சிகளில் தலையைக் காட்டியுள் ளார். 2009ஆம் ஆண்டு இயக்குநர் சுசீந்திரனின் வெண் ணிலா கபடிக்குழு மூலம் முழுப் படத்திலும் நகைச்சுவை நாயகனாக வந்தவர், அதன் பிறகு பல படங்களில் நகைச்சுவை நாயகனாக வெற்றிகரமாக வலம் வந்தார்.

Advertisment

கதாநாயகன்கள் தங்களது உடலை மேம்படுத்தி சிக்ஸ் பேக் வைத்திருப்பதைப் போன்று "சீமராஜா' படத்தில் ஒரு காட்சியில் சிக்ஸ் பேக் உடலோடு தோன்றுவார். ஃபிட்நெஸ் குறித்து சூரி கூறுகையில் "ஒரு நடிகருக்கு உடம்பு மிகவும் முக்கியம். உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் மட்டுமே 10 ஆண்டுகளுக்கு நாயகனுக்கு நண்பனாக நடிக்க முடியும். அதனால் தான் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்து உடம்பை பராமரித்து வருகிறேன்''’என்றிருக்கிறார். "விடுதலை' படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்தார். இந்த படத்தில் ‘கட்டுக்கோப்பான உடல் பராமரிப்பு காரணமாகத்தான் சூரிக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக’ பல பேட்டிகளில் படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான "விடுதலை' படத்தின் எந்தவொரு இடத்திலும் இதற்கு முன்பு காமெடியனாக நடித்த சூரியை நமக்கு நினைவுபடுத்தி விடாமல் கடைநிலை காவல்துறை அதிகாரியாக, பெரும் வலிகளை, வேதனைகளை சுமக்கிற ஆளாக, நேர்மையாக இருப்பவராக, பல இடங்களில் அதிகார தோரணை முன்பு இயலாமையாக இருப்பவராக, காதலியை காப்பாற்றத் துடிப்பவராக கதையின் நாயகனாக நடித்து வெற்றிப்பட நாயகன் ஆனார்.

இரண்டாவதாக இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான "கருடன்' திரைப்படத்தின் கதையில் பிரபலமான இரு நாயகர்கள் இருந்தபோதிலும் சூரியைச் சுற்றி கதை பின்னப்பட்டிருப்ப தால் கதையின் நாயகனாக சூரியின் நடிப்பு பேசப்பட்டது. விசுவாசத்திற்காக கொலை செய்கிற அளவு துணிகிற, வெள்ளந்தியாக கொலை செய்ததை விவரிக்கிற, காதலை வெளிப்படுத்த மெனக்கிடுகிறவராக நடித்து வெற்றியும் பெற்றார்.

Advertisment

"கூழாங்கல்' என்ற திரைப்படத்தின் மூலம் பல சர்வதேச விருதுகளை வென்ற இயக்குநரான வினோத்ராஜ் இயக்கத்தில் "கொட்டுக்காளி' திரைப்படம் வெளிவர இருக்கிறது. இதில் சூரி மூன்றாவது முறையாக கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படமும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளது. திரையரங்குகளிலும் வெளியாகி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நக்கீரனுக்கு சூரி அளித்த பேட்டியில், ‘"தான் தேர்ந்தெடுத்து நடிக்கும் படத்தின் கதை மக்களுக்கு எந்த அளவுக்கு போய்ச் சேரும் என்பதன் அடிப்படையிலேயே கதைகளை தேர்வு செய்வதாகவும், "கொட்டுக்காளி' படத்தில் வரும் கதாபாத்திரமான பாண்டியாக நான் மாற முடியும் என்ற என்னுடைய நம்பிக்கையே இந்த படத்தில் நடிக்க வைத்தது, அது சர்வதேச விருதுவரை கொண்டுபோய் சேர்த்துள்ளது என்றார்.

மேலும், "கொட்டுக்காளி' மாதிரியான திரைப்படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்கள் சினிமா பற்றி தெரியாத கிராமப்புற பின்னணியிலிருப்பவர்கள். பழகுவதற்கு இனிமையாகவும், அன்பாகவும் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்பு இருந்த சூரியையே பார்ப்பது போன்று இருக்கிறது. அந்த கிராம மக்கள்தான் இந்த படத்தில் பாண்டி கதாபாத்திரமாக நடிப்பதற்கு எனக்கு வாத்தியாராக இருந்தார்கள்''’என்றார்.

தொடர்ச்சியான விடாமுயற்சி, காலத்திற்கு ஏற்றாற்போல் தன்னை தகுதிப்படுத்திக் கொள்ளும் தன்மை, தன் உடலை மெனக் கிட்டு பார்த்துக் கொள்கிற விதம், பொது இடங்களில் வெள்ளந்தியாக பேசும் நபராக வெற்றிகரமாக வலம்வரும் சூரி, எந்த சூழ் நிலையிலும் தான் கடந்து வந்த பாதையையும், தனது சொந்தங்களையும் மறவாத நபராகவும் பக்குவமானவராகவும் இளைஞர்களின் உந்து சக்தியாகவும் திகழ்கிறார்.

-தாஸ்