இனி கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. இல்லை. அந்த இடத்தை நாம் கைப்பற்றுவோம் என்கின்ற கனவில் நரேந்திரமோடி தலைமையில் "என் மண் என் மக்கள்' நடைபயணத்தின் நிறைவு விழாவினை பல்லடத்தில் நடத்துவதென முடிவினை செய்தது தமிழக பா.ஜ.க. ஆனால் நேருக்கு மாறாக நிறைவு விழா சொதப்பலில் முடிந்தது தான் வேதனையே.!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதாப்பூரில் 1000 ஏக்கர் பிரம்மாண்ட திடலில் இந்திய பிரதமர் மோடியின் தலைமையில் "என் மண் என் மக்கள்' யாத்திரையின் நிறைவு விழா நடைபெறவிருக்கின் றது. சுமார் 15 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கு பொறுப்பாளர்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகா னந்தமும், அமர்பிரசாத் ரெட்டியும் என்றது தலைமை. மாணாக்கர்களுக்கு தேர்வு நேரம், கடுமையான வெயில் மற்றும் செவ்வாய்க்கிழமை வேறு, கூட்டம் கூட்ட முடியாது என்றாலும் விடாப்பிடியாக தேதியை அறிவித்தது தலைமை.
"இந்த மாநாடு நடைபெறும் மாதாப்பூர் மைதானம் வெறும் 416 ஏக்கர் மட்டுமே. இது கட்சிக்காரர்களின் இடம் என்றாலும், இன்னொரு பங்கு அப்பல்லோ டயர் கம்பெனிக்கு சொந்த மானது. இதனின் அனுமதி வாங்கவே பலநாள் போராட்டமாக இருந்துச்சு. அதனையும் தாண்டி மாநாட்டிற்கான பட்ஜெட் ரூ8.5 கோடி என திட்டமிடப்பட்டது. உள்ளூரிலுள்ள மாவட்டத் தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொதுச்செய லாளர் சீனிவாசன் இருக்கும்பொழுது என்ன பயம்? என்ற ரீதியில் 60 ஷ் 80 அடி நீள மேடை, மைதானத்தை சுத்தப்படுத்துதல், ஹெலிபேட் அமைக்கும் பணிக்கு ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் தங்கம் சவுண்ட் சர்வீஸிற்கும், ஒலி, ஒளி அமைப்பிற்கான ரூ.1 கோடி கான்ட்ராக்டை நநந நிறுவனத்திற்கும் வழங்கினர் மாநாட்டுப் பொறுப் பாளர்கள். கான்ட்ராக்ட் வழங்கிய கையோடு அந்தப்பக்கம் தலை வைத்துப் படுக்கவில்லை பா.ஜ.க. நிர்வாகிகள். மைதானம் பக்கம் போனால் காண்ட் ராக்டர்கள் பணம் கேட் பார்களே? என்கின்ற பயம் அவர்களுக்கு. இதில் மாவட்ட பொறுப்பிலுள்ள வர்கள் போனைக்கூட எடுக்கவில்லை'' என்றார் பல்லடத்தை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவர்.
முன்னதாக இதே வேளையில், திருப்பூர் வடக்கு ஒன்றியத்திற்குட் பட்ட தொரவலூர் ஊராட்சி யில் பா.ஜ.க. கொடி கட்டப்பட்டிருந்த வாகனத் தில் சென்று, கடை கடையாக இறங்கி மாநாட்டிற்கான வசூலில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் வருகின்ற மாநாட் டிற்கு பணம் வேண்டும் என ஒரு சிறிய ஜவுளிக்கடையில் கேட்க, அங்கிருந்த பெண்ணோ, ரூ.20ஐ கொடுத்திருக்கின்றார். அதிர்ச்சி யில் உறைந்த பா.ஜ.க.வினர், "ஏம்மா.. 20 ரூபாய் கொடுக்கிற. பிஜேபி காரங்க என்ன பிச்சக்காரங்களா?' எனக் கேட்டு கொந்தளித்தது வீடியோக்களாக சமூக வலைத்தளத்தில் பரவியது. இது இப்படியிருக்க, ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு பூத்துக்கும் வசூல் செய்ய ரூ.500 மதிப்பிடப்பட்ட 10 சிலிப் கொண்ட நன்கொடை புக் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பூத்துக்கும் ரூ.5 ஆயிரம் வசூல் செய்து அந்த பணத்தின் மூலம் ஆட்களை அழைத்துச் செல்ல வாகனத்திற்கும், சாப்பாடு வழங்கவும் செலவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள் ளது. சுமார் 9 ஆயிரம் பூத்கள் இருக்கும், இதன்மூலம் ரூ.50 லட்சம் வரை வசூல் செய்யத் திட்டமிட்டு வசூல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கோவையை சேர்ந்த மற்றொரு பா.ஜ.க. நிர்வாகியோ, "மாநாட்டுப் பொறுப்பாளர்களாக முருகானந்தத்தையும், அமர்பிரசாத் ரெட்டியையும் அறிவித்ததிலிருந்து வானதி சீனிவாசன், நந்தகுமார், கேசவ விநாயகம் மற்றும் கோவையின் பழைய கட்சிக்காரர்கள் பலருக்கும் கோபம். வேண்டாவெறுப்பாகவே வேலை செய்தனர். இத்தனை நாள் வேலை நடந்திருக்கு. என்ன ஆச்சுன்னு எத்தனை தடவை வந்து பார்த்தாங்கன்னு சொல்லச் சொல்லுங்க. இப்ப உள்ள தலைவரை பிடிக்கலைன்னா கட்சி மீது கோபத்தைக் காட்டுவதா? சரி... பணத்தைக் கொடுங்க, வேலை பார்க்கின்றோம் என்றால், அதுதான் நடைபயணத்திற்காக ரூ.145 கோடி வசூல் செய்திருக்கிறீர்களே? அந்த பணத்தை வாங்கி செலவு செய்யுங்க என்கிறார்கள்'' என்றார்.
மாநாட்டுப் பந்தல், இன்னபிற வேலைகளுக்கு அங்கீகாரம் பெற்ற பொறியாளரிடமிருந்து கடிதம் வாங்கி அதனை உள்ளூர் வருவாய்த் துறையினரிடமும், காவல்துறையினரிடமும் கொடுத்து அனுமதி வாங்க வேண்டும். அந்த கடிதத்திற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு வரை அலைந்திருக்கின்றனர் மாநாட்டுத் திடல் பொறுப்பாளர்கள். இறுதியாக ஒலி, ஒளி கான்ட்ராக்ட் எடுத்த நநந நிறுவனம் கடிதம் கொடுத்து பா.ஜ.க.வினரை ஆசுவாசப்படுத்தியிருக்கின்றனர். இதே வேளையில் 150 கட் அவுட்டிற்கு அனுமதி வாங்கிவிட்டு காண்கின்ற இடத்திலெல்லாம் கட்அவுட் வைக்க, அதனை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளது காவல்துறை.
மாநாடு தொடங்குவதற்கு முன், அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்புச் செயலாளருமான வேலுமணி பா.ஜ.க.வில் இணையவுள்ளார் என்கின்ற புரளியை திட்டமிட்டு பரப்பினார் பா.ஜ.க. மாநிலத் தலைவர். ஆனால் அவருக்கு பதில் சொல்லும் விதமாக, "இங்கேதாம்பா... அ.தி.மு.கவில்தான் இரண்டு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இணையவுள்ளனர்'' என்றார் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், மாநகர் மாவட்ட செயலாளருமான அம்மன் அர்ச்சுனன். அதுபோல், பா.ஜ.க. ஐ.டி. விங் தகவல்களுக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம் எனவும், டோன்ட் கேர் என விட்டுவிடுங்கள் எனவும் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி கூற அமைதியானது பா.ஜ.க.
கூட்டம் நடைபெற்ற மாதாப்பூர் மைதானத்திற்கு வந்தடைந்த மோடி, சுமார் 800 மீட்டர் நீளத்திற்கு போடப்பட்ட சாலையின் வழியாக மேடையை வந்தடைந்தார். இரு பக்கமும் மலர்களைத் தூவி மோடியை வரவேற்ற நிலையில் மலர்களோடு மலர்களாக செல்போனையும் வீசி எறிந்தார் பா.ஜ.க. தொண்டர் ஒருவர். கூட்டத்தில் உரையாற்றிய மோடியோ, "‘என் மண் என் மக்கள்’ யாத்திரை தமிழ்நாட்டை புதிய பாதையில் எடுத்துச் செல்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லாத போதும், தமிழ்நாட்டை தன் இதயத்தில் வைத்துள்ளது பா.ஜ.க. தமிழ்நாடு மக்கள் இதயத்தால் சுத்தமானவர்கள், புத்திசாலிகள். தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு நிதியை பா.ஜ.க. அரசு வழங்கியுள்ளது'' என தி.மு.க.விற்கு எதிராக வார்த்தை வீசியவர் தொடர்ந்து, "இன்று தமிழ்நாடு வந்துள்ள நான் எம்.ஜி.ஆரை நினைத்துப் பார்க்கிறேன். எம்.ஜி.ஆர் ஏழைகளுக்கு செய்த உதவியால் இன்னும் நினைவில் இருக்கிறார். எம்.ஜி.ஆர். குடும்ப ஆட்சி செய்யவில்லை, அவருக்குப் பிறகு தமிழ்நாட்டில் நல்ல ஆட்சியை கொடுத்தது ஜெயலலிதா மட்டுமே. தமிழ்நாட்டை ஆளுகின்ற கட்சி, இளைஞர்களின் வேலை வாய்ப்பைத் தடுக்கிறது. 2024ல் ஊழல் கட்சிகளின் ஆட்சிக்கு பூட்டுப் போடவேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்'' என்றார்.
ஈரோட்டை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவரோ, "மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வரும் பிரதமர் மோடி நேரடியாக மேடைக்கு வராமல், மக்கள் வெள்ளத்தின் ஊடாக வரவேண்டும். அதற்காக எப்படியாகிலும் 5 லட்சம் நபர்களாவது வரவேண்டும். மாவட்டத்திற்கு பத்தாயிரம் நபர்கள் என்றாலும் 5 லட்சம் தொண்டர்கள் வந்துவிடுவார்கள். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றனர் நிகழ்ச்சி அமைப்பாளர்கள். தொண்டர்கள் அமர 5 லட்சம் நாற்காலிக்கு எங்கு போவது? கடைசிவரை தொண்டர்களும் கிடைக்கவில்லை. நாற்காலிகளும் கிடைக்கவில்லை. பனியன் கம்பெனிகளில் வேலை செய்யும் வடக்கர்களை கூட்டி வந்துதான் நாற்காலிகளை நிரப்பினோம். வடக்கர்களோடு கலந்துகொண்ட தொண்டர்கள் மொத்தம் 80 ஆயிரம் நபர்களே! நாற்காலியும் அவ்வளவுதான் இருந்தது. அதுபோக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை புகழவேண்டும் என்பது என்ன நிர்பந்தம்..? இந்த மாநாடு பெரும் சொதப்பலே!'' என்றார் வேதனையுடன்.
புதனன்று காலையில் தூத்துக்குடி சென்ற பிரதமர் மோடியோ, "தூத்துக்குடி வ.உ.சிதம்பர னார் துறைமுக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் குலசேகரப்பட்டனம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் நெல்லை பாளையங்கோட்டைக்கு சென்றவர் மீண்டும் தி.மு.க. எதிர்ப்பையே பதிவு செய்தார்.
படங்கள்: விவேக்