டந்த சில மாதங்களாக இந்தியா வின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமான சூழலை எட்டிவருகிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடந்த நான்காண்டுகளாகவே பின் தங்கிய நிலை யில், கடந்த ஐந்து மாதங்களில் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியில் பயணித்துவருகிறது. இந்திய ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை இந்தாண்டில் மட்டும் நான்கு முறை உயர்த்தி விட்டது. இதன் காரணமாக வீட்டுக்கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இது விலைவாசி உயர்வுக்கு காரணமாகின்றது. அதேவேளை, அமெரிக்க பெடரல் ரிசர்வ் பெஞ்ச்மார்க் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்து, ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 82.13 ரூபாயாக உள்ளது. இது மிகமிக மோச மான வீழ்ச்சியாகும், கடந்த ஐந்து மாதங் களுக்கு முன்னர் இதே டாலரின் மதிப்பு 74 ரூபாயாக இருந்தது. தற்போது 82 ரூபாய்க்கு மேலாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து சுமார் 35 பில்லியன் டாலருக்கும் மேலான அந்நிய முதலீடுகள் வெளியேறியிருக்கின்றன.

cc

இதன் காரணமாக இனி, இந்தியாவின் இறக்குமதிப் பொருட்களுக்கான விலை அதிகரிக்கும். இந்தியர்கள் வெளிநாட்டுக்குச் செல்வதற்கு அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கும். வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இது நெருக்கடியாக இருக்கும். ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் விலைவாசி உயர்வுக்கு மறைமுகக் காரணமாக அமையும். இத்தகைய வீழ்ச்சியை தற்போது காங்கிரஸ் கட்சி கையிலெடுத்து கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளது. இதுநாள்வரை, இந்திய பொருளாதாரம் முன்னேற்றப்பாதையில் செல்கிறது என்று பொய்யான பிம்பத்தை ஏற்படுத்திவந்த பா.ஜ.க.வுக்கு இது பலத்த அடியாக உள்ளது.

இன்னொரு பக்கம், ராகுல்காந்தியின் பாரத ஒற்றுமை யாத்திரைக்கு நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே வருவது, மோடி அரசுக்கு எதிரான அலையாகப் பார்க்கப்படுவதோடு, காங்கிரஸ் கட்சிக்கும், அதன் தலைவர்களுக்கும் புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸின் யாத்திரையில் இந்தியாவிலுள்ள பிரச்சனைகள் அனைத்தையும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளார். "ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாகச் சொன்ன உறுதிமொழி என்னாச்சு? 400 ரூபாயிலிருந்த சமையல் கேஸ் சிலிண்டர் விலையை இப்போது ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்த்தியிருப்பதுதான் வளர்ச்சியா? பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் கொள்கையே நாட்டில் மதக் கலவரத்தை உருவாக்குவதுதான். அவர்கள் செய்வது தேச பக்தி இல்லை. தேசிய துரோகம்!'' என்றெல்லாம் விளாசிவருகிறார்.

Advertisment

cc

இதற்கிடையே இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சும், செயல்பாடும் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்துவதாக உள் ளது. உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்ற நிர்மலா சீதாராமன், ஏற்கெனவே வாஷிங்டனில் ப்ரூக்கிங்ஸ் நிறுவனத் தில் "இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு' என்ற தலைப்பில் பேசியபோது, "இந்தியப் பொருளா தாரம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. எரிபொருள், மின்சாரம், உர விலை போன்றவை கடும் உயர்வைச் சந்தித்துள்ளன. நாட்டின் சில பகுதிகளில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது'' என்றெல்லாம் பேசி பீதி கிளப்பியிருந்தார்.

மேலும், அங்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, தர்ம சங்கடப்பட்ட நிர்மலா சீதா ராமன், சற்றும் அசராமல், "இந் திய ரூபாய் மதிப்பு வீழவில்லை, அமெரிக்க டாலர் தொடர்ந்து வலுவடைந்துவரு கிறது. இப்படி வலுவடையும் அமெரிக்க டாலருக்கு நிகராக மற்ற நாடுகளின் நாணயங்களும் பலவீனமடைகின்றன. நான் இதிலுள்ள நுட்பமான விஷயங்கள் குறித்துப் பேசவில்லை. ஆனாலும் இந்திய ரூபாயின் மதிப்பு சீராகவே தாக்குப்பிடித்து நிற்கிறது. மற்ற நாணயங்களோடு ஒப்பிடும்போது இந்திய நாணயம் சிறப்பாகச் செயல்படுவதாகவே நம்புகிறேன்'' என்று மழுப்பலாகக் குறிப்பிட்டார்.

இதுகுறித்து முன்னாள் ஒன்றிய நிதியமைச் சர் ப.சிதம்பரம், "இந்திய ரூபாய் மதிப்பு சரிய வில்லை. அமெரிக்க டாலர் மதிப்புதான் உயர்கிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது முற்றிலும் உண்மை. தேர்தலில் தோல்வி யடைந்த வேட்பாளரோ, கட்சியோ, அதுகுறித்து குறிப்பிடும்போது, நாங்கள் தேர்தலில் தோற்க வில்லை, அவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று தானே எப்போதும் கூறுவார்கள்'' என்று கிண்டலாகக் கூறினார்.

இவர் மட்டுமல்ல, தற்போது வெளிநாட்டுப் பத்திரிகைகளும் இந்திய பொருளாதாரப் பின்னடைவு குறித்து கேலிச்சித்திரங்களை வரையத் தொடங்கிவிட்டார்கள். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 'லா வான்கார்டியா' என்ற பத்திரிகையில் வெளியான இந்தியப் பொருளாதாரம் குறித்த கட்டுரையில், மகுடி ஊதும் ஒரு பாம்பாட்டியின் படம் இடம்பெற்றுள்ளது. அந்த பாம்பாட்டியின் மகுடிக்கு மயங்கி இந்தியப் பொருளாதாரம் உயர்வதுபோல் வரைந்திருந்தார்கள். இப்படி மகுடி ஊதியெல் லாம் பொருளாதாரத்தை உயர்த்த முடியாது என்று மறைமுகமாகக் கிண்டலடித்திருந்தார்கள். இதற்கு பா.ஜ.க. தரப்பில், நம்மை பாம்பாட்டிகள் போல சித்தரிப்பது இனரீதியிலான வெறுப்புணர்வு எனக் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கடந்த எட்டாண்டுகளாக நீடித்த கண்மூடித் தனமான மக்களின் ஆதரவு, கொஞ்சம்கொஞ்சமாக எதிர்ப்பலையாக,… விழிப்புணர்வாக உருவெடுத்து வருவது ஜனநயகத்துக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

Advertisment