காவிரித் தண்ணீர் கடைமடைப் பகுதிவரை செல்வதை உறுதிப்படுத்து வதுபோல், தமிழக அரசின் திட்டங்கள் கடைக்கோடி கிராமம் வரைச் சென்றடை வதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்தோடு இருக்கிறார்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் அனைத்துத் துறைச் செயலர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர், "தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் ஆன்லைன் தகவல் பலகையை ஏற்படுத்தி, அதன்மூலம் அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளையும் தினசரி நான் பார்க்கப் போகிறேன். என் அறையிலிருந்தே பார்க்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதிகள், வெளியிட்ட அறிவிப்புகள், திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் அதில் இடம்பெறும். வாரம் ஒருமுறை இதை வைத்து ஆய்வு செய்யவுள்ளேன்'' என்றார். அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த டிசம்பர் 23-ம் தேதி, முதலமைச்சருக்கான மின்னணுத் தகவல் பலகைத் (CM Dashboard) திட்டம் தொடங்கப்பட்டது.

ஏற்கனவே, முதலமைச்சரின் தனிப்பிரிவின் செயல்பாடும், முதலமைச்சரின் உதவி மையம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டு 'முதல்வரின் முகவரி' என்ற பெயரில் புதிய துறை உருவாக்கப்பட்டது. அதேபோல, தற்போது அனைத்துத் துறை செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து, தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே முதல்வர் கண்காணிக்கும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைச் சிறப்பான முறையில் இயக்குவதற்காக ஐம்பதுக்கும் மேற்பட்ட ஐ.டி.பணியாளர்கள் பணியாற்று கிறார்கள்.

Advertisment

ee

இதன்மூலம், அனைத்துத் துறையின் செயல்பாடுகளும் தமிழக முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் வரும். எனவே எந்தவொரு திட்டத்திலும் ஏதேனும் தொய்வு ஏற்பட்டால், அத்திட்டம், என்ன காரணத்துக்காக, எந்த கட்டத்தில் தொய்வடைந்துள்ளது என்பதைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை முதல்வரே அழைத்து, சிக்கல்களைக் களைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோன்று, முதல்வருக்கான மின்னணுத் தகவல் பலகைத் திட்டத்தை ஏற்கனவே மத்திய பிரதேசம், குஜராத், ஆந்திரா, இமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட், நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்கள் செயல்படுத்திவருகின்றன. அரசின் செயல் பாடுகளை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் டேஷ்போர்டு போர்ட்டல்களும் செயல்படுகின்றன.

இப்போது தமிழ்நாடு இந்த டிஜிட்டல் மயக்கத்திற்குள் வந்துள்ளது. இதில் மாநில முதல்வர் குறித்த விவரம் அளிக்கப்படுகிறது. இந்த மின்னணுத் தகவல் பலகையில், மண்டல வாரியாக, துறை வாரியாக, மாவட்ட வாரியாக, கார்ப்பரேஷன் வாரியாக என்று பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டு தகவல்கள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம், இதுகுறித்த தெளிவான பார்வையைப் பெறுவது எளிது.

ஒவ்வொரு மாவட்ட வாரியாகச் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலவரங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள கிராமங்களின் விவரங்கள், மாநிலத்திலுள்ள தெரு விளக்குகள், நீர்த்தேக்கத் தொட்டிகள், ஏரி, கண்மாய்கள் எண்ணிக்கை, அணைக்கட்டுகளில் நீர் கொள்ளளவு விவரங்கள், தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள், சாகுபடி விவரங்கள், மழைப்பொழிவு விவரங்கள் கொடுக்கப் படுகின்றன. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்த விவரங்கள், மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில், மற்ற மாநிலங்களோடு ஒப்பீடு, திட்டங்களின் செயல்பாடு, பயனாளிகள், நிதி மதிப்பீடு உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்படுகின்றன. இதன்மூலம், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான பிணைப்பு வெளிப்படும்.

துறை வாரியான ஸ்டார் ரேட்டிங்: ஒவ்வொரு துறையிலும் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் தரம், புள்ளி விவரங்கள், ஆழ்ந்த பார்வை, பகிர்ந்துகொள்ளும் தன்மைக்கேற்ப இவற்றுக்கு ஸ்டார் ரேட்டிங் வழங்கப் பட்டுள்ளது. இதன்மூலம் ஸ்டார் ரேட்டிங்கில் குறைந்த துறைகள், தங்கள் தகவல்களை மேம்படுத்தித் தருவதற்கு முயற்சியெடுப்பார்கள். இதுபோல ஒரு மாநில அரசின் செயல் பாடுகளை ஸ்கேனர் கொண்டு பார்ப்பது போன்ற பார்வையை இந்த டேஷ் போர்டு திட்டம் காண்பிக்கிறது. இதனைச் செயல்படுத்துவதன்மூலம், அனைத்துத் துறையினரும் தங்கள் செயல்பாட்டை மேம்படுத்துவதில் முனைப்பு காட்டுவார்கள்.

இத்திட்டம் குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், "முதலமைச்சரின் மின்னணுத் தகவல் பலகை மூலமாக, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் அனைத்தும் திட்ட மிட்டபடி நடக்கிறதா என்பதை முதலமைச்ச ரால் முழுமையாகக் கண்காணிக்க முடியும். தமிழ்நாடு மின் ஆளுமை (E-governance) முகமை, முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இத்திட்டத்தைச் நடைமுறைப்படுத்துகிறார்கள்.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மூன்று முக்கிய இலக்குகள் இருக்கின்றன. முதலாவது, நல்ல ஆளுமை. தமிழகத்தின் எல்லைப்பகுதியில் செயல்படுத்தப்படும் திட்டத்தைக்கூட சென்னையில் இருந்தபடியே நினைத்த நேரத்தில் முதல்வரால் கண்காணிக்க இயலும். அதற்கு உதவும்பொருட்டு இந்த மின்னணுத் தகவல் பலகை உருவாக்கப் பட்டுள்ளது. இரண்டாவது, கணினிமயமாக்கல். தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியால் தற்போது உலகமே ஆன்லைன் மயமாக மாறிவருகிறது. அதற்கேற்ப தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் துறைகளின் செயல்பாட்டையும் கணினிமயமாக்கும் முயற்சியின் ஓர் அங்கமாக இது விளங்குகிறது. மூன்றாவதாக, தரவுகளின் அடிப்படையில் செயல்படுதல். ஓர் அரசாங்கம் நன்முறையில் செயல்பட வேண்டுமென்றால், அனைத்துத் துறைசார்ந்த புள்ளி விவரங்களும், தரவுகளும் சேகரிக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில்தான் ஒவ்வொரு துறையின், ஒவ்வொரு பகுதியின் தேவை குறித்தும் தெளிவாக அறிந்துகொண்டு, அதற்கேற்பத் திட்டங்களைத் தீட்ட முடியும். இந்தத் திட்டத்தில், அனைத்துத் துறையினரும், அவரவர் துறை சார்ந்த புள்ளி விவரங்களையும், தினசரிச் செயல்பாடுகளையும் அப்டேட் செய்துகொண்டே இருப்பார்கள்.

இந்த மின்னணுத் தகவல் பலகையின்மூலம் முதலமைச்சர் மட்டுமல்லாமல், அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள், துறைச் செயலாளர்களும்கூட தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். பெருமழைக் காலங்களில், தமிழ்நாட்டிலுள்ள அணைக்கட்டுகளில் நீரின் அளவு, நீர்வரத்து அளவு, மழையின் அளவு, எங்கேனும் வெள்ளம் வர வாய்ப்புள்ளதா, அதனைத் தடுப்பதற்கு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் தெரிந்துகொள்ள முடியும். அரசின் திட்டங்கள் குறித்த பல்வேறு தகவல்களை அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டறியாமல், முதலமைச்சர் தாமாகவே அறிந்துகொள்ளலாம். இந்த தகவல் பலகைக்கு அடுத்தகட்டமாக, பொதுமக்களும் இத்தகைய விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் தனியாக போர்ட்டல் உருவாக்கப்படும். மற்ற மாநிலங்களைவிட நம்முடைய மின்னணுத் தகவல் தொழில்நுட்பம் கூடுதல் திறன்வாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது''’என்றார் நம்பிக்கையும் பெருமிதமும் கலந்த குரலில்.

தற்போது பொறுப்புக்கு வந்துள்ள தி.மு.க. அரசு, வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சியை நடத்துவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. உதாரணமாக, அறநிலையத் துறை சார்பாக, கோவில் நிலங்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதிலும், நவம்பர் பெருமழைத் தடுப்பு நடவடிக்கைகளிலும் திட்டமிட்ட செயல்பாடுகளைப் பார்க்க முடிகிறது. அதன் தொடர்ச்சியாகத் தற்போது தொடங்கப்பட்டுள்ள முதலமைச்சரின் மின்னணுத் தகவல் பலகைத் திட்டம் சரியாகச் செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டின் வளர்ச்சி மேலும் துரிதப்படும்.

Advertisment