(98) கலைஞரின் கருணையே...!
பதினைந்து ஏக்கர் நிலத்தில் சுமார் இருபது கோடி மதிப்பில், தொழிலாளர்களுக்கு சொந்தமான ஸ்டுடியோ பையனூரில் இன்று கம்பீரமாக நடந்துவருவதற்குக் காரணம் கலைஞர் அவர்களே! கலையுலகுக்கு அளப்பரிய வளர்ச்சி திட்டங்களை வழங்கியவர் கலைஞர். ஆனாலும் பையனூர் கலைஞர் திரைப்பட நகரமே அவரின் கலைப்பயணத்தை... வரப்போகும் பல ஆண்டுகளுக்கு, அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்செல்லும் அடையாளச் சின்னமாகும்.
பெப்சி அறக்கட்டளையின் சார்பாக, தொழிலாளர் ஸ்டுடியோ வளாகத்திற்குள் கலைஞர் மணிமண்டபம் ஒன்று கட்டப் பட்டு, அதற் குள் அவரின் கலையுலக சாதனைகள், படங்கள் அனைத் தும் பொதுமக்கள் பார்வைக்கு வைக் கப்படும். ஏற்கனவே கலைஞருக்கான நுழைவாயில் வளைவுகள் "பெப்சி' தலைவர் செல்வமணியால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த நுழைவாயி லில் வைப்பதற்காக கலைஞர் சிலையையும் செய்து வைத்துள்ளனர்.
மாண்புமிகு முதல்வரின் தேதி கிடைத்ததும் அது திறந்து வைக்கப்படும். மணிமண்டபத்துக்கான அடிக்கல்லும் நாட்டப்படும். இதில் நானும் பங்கேற்றேன் என்பதில் பெரும் உவகை ஏற்படுகிறது.
எம்.ஜி.ஆர்., ஏவி.எம்., ராமாநாயுடு -இந்த மூன்று பேரால் கலையுலகில் 30 வயதுக் குள்ளேயே பல உச்சங்களைத் தொட்டேன். அவர்களின் பொற்கரங்களால் ஆசிர்வதிக்கப் பட்ட நான்... பலபேரை திரையுலகில் அறிமுகப் படுத்தும் வாய்ப்பையும் பெற்றேன். பஞ்சு அருணாசலம், எஸ்.ஏ.சந்திரசேகர், செல்வபாரதி, எஸ்.பி.முத்துராமன், கே.பி.அஹமத், சந்திரபோஸ், இசைவாணன், ஆர்.டி.அண்ணாதுரை, ஜெயா, ஜெயசுதா, சுமித்ரா, ஹம்சவிருத்தன், ராஜலட்சுமி... இப்படி பட்டியலில் பலர் உண்டு.
"கலைமாமணி', "கலைச்செல்வம்', "இனமான இயக்குநர்', "எழுச்சி இயக்குநர்', "குணக்கலைக்குன்று' "வாழ்நாள் சாதனையாளர்' விருது, சிறந்த கதாசிரியர், வசனகர்த்தா என ஏராளமான விருதுகள்.
"ராஜபார்ட் ரங்கதுரை', "மாங்குடி மைனர்', "பெத்த மனம் பித்து', "மைக்கேல்ராஜ்', "கனிமுத்து பாப்பா', "அட்ரா சக்கை... அட்ரா சக்கை', "காசி யாத்திரை', "முதலாளியம்மா', "மைனர் மாப்பிள்ளை' என நான் நல்ல படங்களையே தயாரித்தேன். பல மொழிகளில் கதைகள் கொடுத்திருக்கிறேன். பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளேன். இன்று பல பிரபலங்கள் என்னை தவிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறுக்கு வழியில் உச்சங்களைத் தொட்ட எச்சங்கள்... தங்களது பழைய வரலாறுகள் வெளியே தெரிந்துவிடும் என்கிற பயத்தில், என்னை ஓரங்கட்டுவதை நான் அறிவேன். இனியும் வேலை செய்துதான் நான் வாழவேண்டும் என்ற நிலை எனக்கில்லை. இருப்பினும் இந்த வளம்கெட்ட சிலருக்காக, நான் எழுதுவதையோ... திரையுலகப் பணிகளையோ விட்டு விலகுவதாகவோ இல்லை. புதியவர்களை அறிமுகப்படுத்துவதையும் நான் விடப்போவதில்லை.
சுரேஷ் புரொடக்ஷன்ஸ் முழுமையாக சென்னையில் இயங்கிக்கொண்டிருந்தபோது அந்த அலுவலகத்தில் பணியாற்றிய சாமிநாதனை எனக்குப் பிடிக்கும். சில ஆண்டுகள் கழித்து சாமிநாதன் வேலையில் நீடிக்க முடியவில்லை. வெளியே வந்ததும் என்னை பார்க்க வந்தார். என் அலுவலகத்தில் அவரை தங்க வைத்து, பின்னர் அவரை ஒரு படத்தின் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்ற வைத்தேன். அதன்பின் தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தில் செயலாளர் பதவிக்கு வந்தார். பின்னர் பெப்சி செயலாளர் ஆனார். தற்போது நடந்த தயாரிப்பு நிர்வாகிகள் தேர்தலில் ஏழாவது முறையாக நிறைய வாக்குகள் பெற்று செயலாளர் ஆகியுள்ளார். அதேபோல் என்னோடு பணியாற்றிய பழனியப்பன், சென்னை பல்கலைக் கழகத்தில் "டாக்டர்' பட்டம் பெற்றதோடு எடிட்டர்கள் யூனியன் செயலாளராகப் பணியாற்றுகிறார்.
ஒரு தெலுங்குப் பட ஷூட்டிங். மைசூர் தாண்டி மங்களூர் போகும் வழியில் மலைப் பிரதேசம். சிங்மங்களூரில் ஓட்டலில் தங்கி யிருந்தோம். பகலெல்லாம் சரியான வேலை... ஹோட்டலுக்கு திரும்பியதும் வெந்நீர் போட்டு குளித்து, சாப்பிட்டுவிட்டு அறைக்குள் வந்து கதவைப் பூட்டிவிட்டு படுத்துவிட்டேன். ஏதோ சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. திடுக்கிட்டு எழுந்து கவனித்தேன். ஒரு பெண் பேசுவதுபோல் இருந்தது. கதவு உள்ளே பூட்டியிருக்கு. குரல் உள்ளே கேட்கிறது. சந்தேகத்துடன் கட்டிலின் கீழே குனிந்து பார்த்தேன். என் படத்தில் தங்கையாக நடிக்கும் புதுமுகம்... தூக்கத்தில் பேசும் பழக்கமாம். எழுப்பி "இங்கே வந்து ஏன் படுத்திருக்கே''ன்னு கேட்டேன். "போதையில் இவரின் அறைக்கதவை சிலர் வந்து தட்டிய தாகவும், அதனால் பயந்துபோய் என் அறைக்குள் வந்து ஒளிந்துகொண்டதாகவும், களைப்பாக இருந்ததால் தூங்கிவிட்டதாகவும் சொன்னார். நான் அவரை, அவரது அறைக்கு அழைத்துப் போய், குடித்துவிட்டு உணர்வேயில்லாமல் தூங்கிக்கொண்டிருந்த அவள் அண்ணனை எழுப்பி "தங்கைக்கு துணைக்கு வந்த நீங்க இப்படி நடந்தா... தங்கச்சிக்கு யார் பாது காப்பு?'' என திட்டிவிட்டு வந்தேன்.
என் முதல் படத்தி லிருந்து இன்றுவரை என்னோடு ஏற்றத்தாழ்வு கள் காட்டாமல், பாராமல் பழகிவருபவர் கவிஞர் பூவை.செங்குட்டுவன். இவர் என்னோடு அன்பாக பழக ஆரம்பித்தது 1966ல். அதன்பின்னால் எனக்கு ஒரு எண்ணம் உதயமானது. "எழுது' என்று சொல்லி எனக்கு காஞ்சியில் பேனா பரிசளித்தவர் பேரறிஞர் அண்ணா. ஒருவேளை நான் காஞ்சியில் படிக்க விரும்பாமல், சென்னையிலே படித்து எம்.ஜி.ஆரை சந்தித்திருந்தால், அவரிடம் "எனக்கு நடிக்க வாய்ப்பு வாங்கித் தாருங்கள்' என்றுதான் கேட்டிருப்பேன். அப்படி நடந்திருந்தால் நான் இந்த வளர்ச்சியைக் கண்டிருக்க முடியாது. இவ்வளவு காலம் திரையுலகில் நீடித்திருக்க முடியாது. ஆகவே நான் அண்ணாவை மறக்கவும் முடி யாது... ஏதோ ஒருவிதத்தில் நன்றி சொல்லியே ஆக வேண்டும். அதே போல் என் இதய தெய்வம் எம்.ஜி. ஆரை உயிருள்ள வரை போற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். அத னால் மக்கள் விரும்புகின்றவித மாக நீண்டகாலம் நிலைத்திருக்கும் ஒரு பாடலை, என் முதல் படத்தி லேயே வைக்க வேண்டும் என முடிவெடுத்தேன் அதை கண்ணதாசனிடம் சொல்லி, எழுதி வாங்கும் அளவு நான் பிரபலமானவன் அல்ல. ஆகவே இந்தக் கருத்தை பூவையாரிடம் சொன்னேன், அவர் சம்மதித்தார். அப்பவே தேடலை ஆரம்பித்தோம்... பிறந்தது பாடல். இன்றுவரை பிரபலமாகயிருக்கும் எம்ஜிஆரின் "நான் உங்கள் வீட்டுப் பிள்ளை, இது ஊரறிந்த உண்மை... நான் செல்லுகின்ற பாதை, பேரறிஞர் காட்டும் பாதை'.
பாடல் பிறந்ததும் கவிஞர் செங்குட்டுவனுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்தேன். நான் ஒரு தயாரிப்பாளர் ஆனால் என் படத்தின் எல்லா பாடல்களையும் உங்களை வைத்து எழுதுவேன். என்று. "கனிமுத்து பாப்பா', "பெத்த மனம் பித்து' போன்ற என் பல படங்களுக்கு முழுப் பாடல்களையும் அவரே எழுதினார். இன்றும் அவரது எந்த விழாவானாலும் நான் இல்லாமல் நடத்தமாட்டார். அதேபோல் எம்.ஜி.ஆருக்கு என் நன்றிக்கடனைக் காட்டும் நோக்குடன், "மாங்குடி மைனர்' படத்தை எழுதி, இயக்கி, தயாரித்தேன். அந்தப் படத்திலும் ஒரு பாடலை வைக்க விரும்பி வாலி ஸாரை எழுதச் சொன்னேன். அதிலும் அண்ணா இருக்க வேண்டும் என்றேன். பாடல் பிறந்தது... "அண்ணா நீங்க நெனச்சபடி நடந்திருக்கு... புரட்சித் தலைவர் கையில் நாடிருக்கு'... செம ஹிட்டான பாடல். முதல் பாடல் பூவையாரது 1967ல். இரண்டாவது பாடல் வாலி ஸாரது, 1977. இன்னும் ஒரு கடமை பாக்கியிருக்கிறது. காலம் கனியட்டும், என் காணிக்கை மூன்றாவது முறை யாக வெளிவரும். அதுவும் இதய தெய்வம் எம்.ஜி.ஆருக்கானது. படத்தின் பெயர் எம்.ஜி.ஆர். இல்லம்.
எனக்கு மிகவும் பிடித்தவர்கள் பட்டியலில் அண்ணன் பழ.நெடுமாறனும், ஐயா வீரமணியும் முக்கியமானவர்கள். பல நல்ல விஷயங்களை, நான் இவர்களிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். அண்ணன் பழ.நெடுமாறன், எனக்கு சில பதவிகளைத் தந்து அழகு பார்த்தவர். பல அரசியல் நிகழ்வுகளை, சில அரசியல் தலைவர்களைப் பற்றி எனக்குச் சொல்லித் தந்தவர். டெல்லிக்கு அழைத்துப்போய் பிரதமர், பிற அமைச்சர்களோடு இலங்கை பிரச்சினை பற்றி பேச வைத்தவர். மதுரையில் நடந்த பல ஈழப் போராட்டங்களில் என்னை பேச வைத்தவர். தன் சொந்த தம்பிபோல் என் மீது பாசம் காட்டுபவர். எனக்கு "எழுச்சி இயக்குனர்' என்ற பட்டத்தை தந்தவர் இவர்தான்.
அய்யா வீரமணி, திடலில் பல கூட்டங்களில் என்னை பேசவைத்து அழகு பார்த்தவர். ஈழப் போராட்டத்துக்கு முழு ஆதரவு கொடுத்து பலமுனையில் உதவியவர். திருச்சி கழக மாநாட்டில், போராளிகளின் படங்களைத் திறக்க வாய்ப்பளித்தவர். எழுச்சிப் பயணத்தில் நம்மோடு கன்னியாகுமரி வரை வந்தவர். எங்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் தானும் கலந்து, கழகத்தையும் கலந்துகொள்ள வைத்து "மனிதச் சங்கிலி' வலுப்பெறவும், வெற்றியடையவும் முழு ஒத்துழைப்பு நல்கியவர். திடலில் எனக்கு "இனமான இயக்குநர்' என்ற சிறப்பு பட்டத்தை தந்து பாராட்டியவர். எப்போதும் ஒரே மாதிரி பழகும் சிறப்பான தன்மையுடையவர்.
(திரை விரியும்...)
படம் உதவி: ஞானம்