நான் முதன்முதலில் இயக்கிய "மதுரகீதம்' படம் திரைத்துரையினரிடமும், ரசி கர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. படத்தைப் பார்த்த அன்றைய பிரபல விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான ஆர்.எம்.சுந்தரம், என் அலுவலகத்துக்கு வந்து தன் நிறுவனத்திற்கு படம் பண்ணித் தரவேண்டும் எனக் கேட்டு முன்பணமும் கொடுத்தார். அதற்குப் பின்பு பலபேர் என்னைப் படம்பண்ணித் தரச்சொல்லி வந்தார்கள். ஆனால் நான் ஒப்புக்கொள்ளவில்லை. ராமாநாயுடு சாருக்கு ஒரு தெலுங்குப் படமும், சுந்தரம் அவர்களுக்கு ஒரு படமும் ஒப்புக்கொண்டேன்.
"மதுரகீதம்' படம் பற்றி கேள்விப்பட்ட பிரபல ஹிந்தி நடிகை ஷபனா ஆஸ்மி, ராமாநாயுடு சாரிடம் பேசிவிட்டு பம்பாயிலிருந்து சென்னை வந்தார். அவருக்கு ராஜலட்சுமி தியேட்டரில் சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஷபனா ஆஸ்மிக்கு பாஷை புரியாததனால், அவருடன் அமர்ந்து நான், அவருக்கு விலாவாரியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னேன். நாங்கள் இருவர் மட்டுமே படம் பார்த்தோம். படத்தை அவர் மிகவும் ரசித்துப் பார்த்தார். படத்தில் ஸ்ரீவித்யா ஏற்றிருந்த கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாகவும் சொன்னார்.
ஆனால் என் துரதிர்ஷ்டம்...
கதைப்படி விஜயகுமார் கதாபாத்திரம், தன்னுடைய சொந்த வாழ்க்கை வளர்ச்சிக்காக தான் காதலித்தவளுக்கு துரோகம் செய்யும் வில்லத்தனம் கொண்டது. இந்த வில்லத்தனமான கேரக்டரை இந்தியில் செய்ய எந்த நாயகனும் விரும்பவில்லை. கதாநாயகன் இல்லாமல் இந்தியில் ரிஸ்க் எடுக்க நாயுடு சாரும் விரும்பவில்லை. "மதுரகீதம்' படத்தை இரு பெண் கதாபாத்தி ரங்களை (ஸ்ரீவித்யா, ஸ்ரீப்ரியா) நம்பித்தான் எடுத்தேன். அதனால் பிற மொழிகளில் இந்த சின்ன படத்தை எடுக்க யாரும் முன்வரவில்லை.
இந்தப் படத்தில் இன்னொரு சுவாரஸ்யமும் நடந்தது.
"படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன்தான் இசையமைக்க வேண்டும்'' என பிடிவாதமாக இருந்தார் நாயுடு சார். ஆனால் நானோ, பல நாட்களாக என் நாடகங்களுக்கு இசையமைத்து வந்த சந்திரபோஸ்-தேவா ஆகிய இருவரையும் இசையமைப்பாளர்களாக அறிமுகப்படுத்துவதாக முன்பே வாக்கு கொடுத்திருந்தேன். அதனால் நாயுடு சாரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன். "சந்திரபோஸும் தேவாவும் இணைந்து கம்போஸ் பண்ணி வைத்துள்ள பாடல்களை கேளுங்கள். உங்களுக்கு அது பிடிச்சிருந்தா என் வேண்டுகோளை நிறைவேற்றுங்கள்'' என்றேன்.
"அப்படியா? சரி.. இங்க வேண்டாம், உன்னோட ஆபீஸ்ல ஏற்பாடு செய். நான் வந்து பாடல்கள கேக்குறேன்'' என்றார்.
சொன்னபடியே வந்து பாடல்களைக் கேட்டார். அவருக்கு மிகவும் பிடித்துவிடவே, புதிய இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்த எனக்கு பச்சைக்கொடி காட்டினார். ஆனால் இந்த சூழ்நிலைக்குள் தேவாவுக்கு தூர்தர்ஷனில் நிரந்தர வேலை கிடைத்தது. தேவா அந்த வேலையில் சேர விரும்புவதாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
இந்த இடத்தில் தேவாவைப் பற்றி ஒரு விஷயம் சொல்லியே ஆகவேண்டும். அந்த காலகட்டத்தில் நான் அடிக்கடி குற்றாலம் போவதுண்டு. ஏனென்றால் என் முதல் பட தயாரிப்பாளர்கள் (எம்.ஜி.ஆரின் புதிய பூமி) திரு.சங்கரன், திரு.ஆறுமுகம் சகோதரர்கள், தென்காசியை சேர்ந்தவர்கள். சென்னையில் அவர்களது அலுவலகத்துக்கு மேல்மாடியில் ஒரு அறையை நான் வாடகைக்கு எடுத்து தங்கியிருந் தேன். அவர்கள் ஊருக்குப் போயிருக்கும் சமயத்தில் ஆபீஸ் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்படும். பல சமயங்களில் சாப்பிடுவது, சினிமாவுக்குப் போவது எல்லாமே அவர்களோடுதான். நாளடைவில் அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக ஆகிவிட்டேன். அவர்கள் ஊருக்குப் போகும்போது என்னையும் உடன் அழைத்துச் செல்வார்கள். தென்காசி பார்வதி லாட்ஜ், பரதன் தியேட்டர், குற்றாலம், செங்கோட்டை எல்லாமே எனக்கு அத்துப்படி. அவர்களின் உறவினர்கள் அனைவரும் என்னோடு பாசத்தோடு பழகுவார்கள். அம்பா சமுத்திரம் மணி முதலியார், ஆறுமுகம் அவர்களின் மாமனார், அவர் மகன் மணி, மணி முதலியாரின் இரு தம்பிகள், கா.மு.கதிரவன், ராஜாபிள்ளை அண்ணாச்சி, பரதன் தியேட்டர் முதலாளி, காந்தி, முருகன், குற்றாலிங்க முதலியார், அவர் மகன் டாக்டர் அண்ணாதுரை... இப்படி ஏராளமானபேர் என்னோடு இனிமை யாகப் பழகினார்கள்.
சென்னையில் 1965-67 காலகட் டத்தில் ஜே.ஆர். மூவிஸ் அலுவலகத் திற்கு வராத அர சியல்வாதிகள் என்று யாருமே கிடையாது. சங்கரன், ஆறுமுகம் சகோதரர்கள் அனை வரிடமும் நன்றாகப் பழகுவார்கள். விருந்தோம்பலில் அவர்களை யாரும் முந்திவிட முடியாது. எஸ்.எஸ்.தென்னரசு, சேது செட்டியார், செ.மாத வன், திருநெல்வேலி சேர்மன் மஜீத், சூரியநாராயணன், தங்கபாண்டி யன்... இப் படி தி.மு.க. பிரமுகர்கள் பலரும் அங்கு அடிக்கடி வந்துபோவார்கள். அவர்கள் அனை வரும் என்னிடமும் நன்றாகப் பழகுவார் கள். மாலை நேரங் களில் கலையுலகத் தினர் பலரும் வருவார்கள். சீட்டு விளையாடுவார்கள். இதனால் ஜே.ஆர். மூவிஸ் எப்போதும் களையோடு காணப் படும்.
நான் மகாலிங்க புரத்தில் தனி அலுவலகம் எடுத்து அங்கு போனபின்பும், அடிக்கடி குற்றாலம், கன்னியாகுமரி, திருச்செந்தூர் போய் ஒருவாரம் தங்கி வருவதுண்டு. அக்கம்பக்கத்திலுள்ள சினிமா கொட்டகைகளுக்குப் போய் முன்பு பார்க்காமல் விட்ட பழைய படங்களை இரவுக் காட்சி பார்க்கும் பழக்கம் எனக்கிருந்தது. செங்கோட்டையில் ஒருநாள் இரவு ஆர்.எஸ். மனோகர் நடித்த "வண்ணக்கிளி' என்ற படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்டாக இருக்கும்.
தேவாவும், சந்திரபோஸும் என்னைப் பார்க்க வந்தார்கள். "முதல் பாடல் அம்மன் பாட்டா இருக்கட்டும், அதை பதிவு பண்ணலாம்''னு சொன்னேன், சம்மதித்தார்கள். இரண்டு, மூன்று ட்யூன் போட்டுக் காண்பித்தார்கள். எனக்கு திருப்தியில்லை. "நான் ஒரு பழைய பாட்டு சொல்றேன், அந்த மெட்டுல... அந்த ராகத்தை யொட்டி ஒரு பாட்டு உருவாக்குங்களேன்'' என்றேன். அப்படியே செய்ய சம்மதித்தார்கள். "வண்ணக்கிளி' படத்தில் இடம்பெற்ற "சித்தாட கட்டிக்கிட்டு... சிங்காரம் பண்ணிக்கிட்டு...' என்ற பாடலைச் சொன்னேன். கொஞ்ச நேரத்திலேயே தேவா ஒரு ட்யூனை பாடிக்காட்டினார். எனக்குப் பிடித்துவிட்டது. உடனே, என் நண்பர் கவிஞர் பூவை.செங்குட்டுவனை வரவழைத்து, அந்த மெட்டுக்கு வரிகள் எழுதச் சொன்னேன்.
எங்கம்மா மகராசி எல்லாம் என் கைராசி
அருள்மாரி தரவேண்டும் கருமாரி மகமாயி
என எழுதினார். அந்தப் பாடலை "மச்சானைப் பாத்தீங்களா' படத்தில் சிவகுமார்-ஸ்ரீதேவிக்காக படமாக்கினேன். இன்றுவரை அந்தப் பாடல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்தப் பாடல் படமாகி வெளிவருவதற்கு முன்பே தூர்தர்ஷன் வேலையில் சேர்ந்துவிட்டார் தேவா. இப்போதும் நான் தேவாவுடன் பணியாற்றிக்கொண்டி ருக்கிறேன். தங்கமான மனிதர்.
"மதுரகீதம்' படத்தில் இசையமைப்பாளராக சந்திரபோஸை அறிமுகப்படுத்தினேன். புதியவர் இசை என்பதால் கண்ணதாசன் அவர்களை இந்தப் படத்தில் பாடல் எழுத வைத்தேன். "புது மியூசிக் டைரக்டர்தான?' என நினைக்காமல், என் அலு வலகம் வந்து ட்யூனை கேட்டு பாடல்களை எழுதி னார். அத்தனை பாடல்களும் வரவேற்பை பெற் றன. "சுகமான ராகம் சுவையான சங்கீதம்' என்கிற டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன் இருவரும் சேர்ந்து பாடிய பாடல் பெரிய ஹிட் டானது. "காய்ந்த சினையும் மீன்களாகும்' என்ற பாடல் வரிகள் பலராலும் பாராட்டப்பட்டது. "கண்ணன் எங்கே? ராதை மனம் ஏங்குதம்மா' என்ற பாடல் மிக புதுமையாக இருக்கிறதென ரசித்தனர். "மதுரகீதம்' என்ற பெயருக்கு ஏற்றபடி பாடல்களும் இசையும் ஒரு மகுடம் போல் அமைந்தது. எனது கதை வசனமும் மிகுந்த பாராட்டைப் பெற்றது.
இந்தப் படத்திற்கு ஐந்து அல்லது ஆறு விருதுகள் கிடைக்கும் என ஒரு கணக்குப் போட்டு நம்பிக்கையோடு இருந்தேன் நான். இடையில் ஒருநாள்... "16 வயதினிலே' படத்தைப் போய் பார்த்தேன். மலைத்துப்போனேன். நிச்சயமாக சிறந்த இயக்குநருக்கான விருது எனக்கில்லை என்பதை புரிந்துகொண்டேன். ஆனாலும் மதுரகீதத்திற்கு தமிழக அரசின் நான்கு விருதுகள் கிடைத்தன. நான் கதை சொல்லும்போதே ஸ்ரீவித்யாவிடம் சொன்னதுபோலவே, ஸ்ரீவித்யாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. சிறந்த வசனகர்த்தா விருது எனக்கு கிடைத்தது. தரமான தமிழ் படத்திற்கான பரிசாக தமிழக அரசின் 1 லட்ச ரூபாய் தயாரிப்பாளருக்கு கிடைத்தது. தமிழ் படத்தை ஹைதராபாத்தில் எடுத்ததற்காக ஆந்திர அரசு 1 லட்ச ரூபாய் மானியம் வழங்கியது. 5 லட்ச ரூபாயில் எடுத்த படத்திற்கு 2 லட்ச ரூபாய் அரசு மூலம் கிடைத்தது.
எம்.ஜி.ஆரின் ஒப்பனை முகம்...
(திரை விரியும்...)
படம் உதவி: ஞானம்