cc

"பாபா' படம் வெளிவந்த நேரம். ஒரு கட்சியின் நிறுவனரும், ரஜினியும் கடுமையாக மோதிக்கொண்டனர். எனவே குறிப்பிட்ட அந்தக் கட்சி போட்டி போட்ட ஆறு தொகுதிகளிலும் அவர்களைத் தோற்கடியுங்கள்' என்று தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தார் ரஜினி. ஆனால் அந்தக் கட்சி ஆறு தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. அதையும் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டாரே தவிர, பகையை வளர்க்கவில்லை ரஜினி.

அதேபோல் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், பெப்சியோடு இணைந்து நடத்திய "பாசத் தலைவருக்கு பாராட்டு விழா!' நிகழ்ச்சியில் அஜித் பேசிய பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்க விரும்பி... தான் அன்றைய முதல்வர் கலைஞர் அருகே அமர்ந்திருப்பதைப் பற்றிக்கூட கவலைப்படாமல், எழுந்து நின்று கைதட்டி தன் ஆதரவை, பேசிக்கொண்டிருந்த அஜித்துக்கு தெரிவித் தார். -இப்படி ஏராளமான செயல்கள் மூலம் தமிழ்த் திரையுலகம், அரசியல், ஆன்மிகம் ஆகிய மூன்று தளங்களிலும் திருப்பு முனையை ஏற்படுத்தியவர் சகோதரர் ரஜினிகாந்த்!

Advertisment

அமாவாசையிலே பிறந்த தன் மகன் நிச்சயமாக திருடனாத்தான் வருவான் என தந்தையே நம்பினார். ஆனால் நல்ல மனிதனாக மட்டு மில்லாமல், சொல்வதைச் செய்பவ னாகவும் வளருகிறான்... வாழ் கிறான். இந்த ஒற்றை வசனத்தின் மீது கட்டப்பட்ட கதைதான் ரஜினி நடித்த "மனிதன்' திரைப்படம்.

நான் பார்த்தவரைக்கும் எம்.ஜி.ஆருக்குப் பின்னால், தான் நடிக்கும் திரைப்படங்களை தன் முதுகில் சுமந்துபோய் வெற்றியடைய வேண்டும் என நினைப்பவர் ரஜினிதான். இது இப்படித்தான் இருக்க வேண்டும் என கட்டளைகள் பிறப்பிக்க மாட்டார். "ஏன் ஸார், இது இப்படியிருந்தால் நன்றாக இருக்குமா?' என்றுதான் கேட்பார். இறுதியாக இயக்குநர் சொல்வதைச் செய்வார், எதிர்க்கமாட்டார்... மறுக்கமாட்டார்.

அது எப்படி சாத்தியப்படும் என்று கேட்டால்... அந்த இயக்குநர், ரஜினி சொன்னதை ஏற்றுக்கொண்டிருப்பார். அவர் சொன்னதால் அல்ல, நிச்சயமாக அவர் கருத்தோ, மாற்றமோ சரியாகவே இருக்கும் என்பதனால்.

Advertisment

ஒரு பஞ்ச் வசனம், அதை பல்வேறு விதமான ஸ்டைலோடு சொல்வது, யாரும் திரையில் செய்யாத ஒரு "ஜிமிக்'... அதை நாயகியிடம் ஒருவித மாக, வில்லனிடம் வேறுவிதமாக, குடும்பத்தில் இன்னொரு விதமாக, பொதுவெளியில் எல்லோரும் கை தட்டும் விதமாகச் செய்து படத்தை தூக்கி நிறுத்தும் பக்குவம் அவரிடம் இருந்தது.

சாதாரணமாக பார்ப்பவர்களுக்கு கமல், தன்னை வருத்தி நடிப்பது தெரியும். ஆனால் ரஜினி விளையாட்டுத்தனமாக எல்லாவற்றையும் செய்வது போலவே படும். ஆனால் அதற்கு அவர் எவ்வளவு ஹார்டு ஒர்க் பண்ணியிருப்பார் என்பது தெரியாது.

தன் மனம் வேதனைப்பட்ட காலத்தில்... அதைத் தாண்டிவர அவர் கடைப்பிடித்த கட்டுப் பாடுகள், மனதை ஒருநிலைப்படுத்தி செய்த தியானங்கள், ஒற்றை மனிதனாக நடத்திய போராட் டங்கள், அங்கேதான் அவரது ஆன்மிக எண்ணங் கள், இறை யாத்திரைப் பயணங்கள், பக்தி அவருக்கு துணை நின்றன. இந்த மனிதரிடம் இருந்த தன்னம் பிக்கை போல் எவரிடமும் நான் பார்த்ததில்லை. எம்.ஜி.ஆர். நல்லவர், வல்லவர். ரஜினிகாந்த் தன்னை நல்லவராக மாற்றிக் கொண்டவர்.

முன்னவர் திருஞானசம்பந்தர், பின்னவர் திருநாவுக்கரசர். ஆங்கிலத்தில் ஒரு Saying உண்டு. Some are born great. 'Some achieve greatness. On some greatness is thrushed upon.'

rajini

கலை, காலத்துக்கு காலம் மாறும். அந்தந்த காலத்தில் ஒருவர் பிரகாசமாக பரிமளிப்பார். அடுத்த மாற்றம் வரும்போது வேறொருவர் பிரகாசிப்பார். இது கலையுலகுக்கு மட்டுமே பொருந்தும். திருக்குறள், திருவாசகம், பைபிள், குரான் இவை மாறாதவை. இவை படைப்புகள். கலை, திரைக்கலை, இசை மாற்றத்துக்கு உட் பட்டவை. வெள்ளைக் குதிரையில் முன்னாள் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர் "வாழ்விலோர் திருநாள்' எனப் பாடியபடி வந்த போது தியேட்டரில் விசில்கள் பறக்கும். பல வரு டங்கள் பின்னால் எம்.ஜி.ஆர். குதிரைகள் பூட்டிய ரேஸ் வண்டியில் குலதெய்வம் ராஜகோபாலோடு "அச்சம் என்பது மடமையடா' என பாடிக் கொண்டே வந்தபோது திரைக்கு சூடம் காட்டப் பட்டது, தேங்காய்கள் உடைக்கப்பட்டன, கலர் பேப்பர்கள் பறக்கவிடப்பட்டன, கோஷங்கள், விசில் சத்தம் என ஒரே அமர்க்களம். நான் இயக்குநரான காலத்தில் "தனிக்காட்டு ராஜா' படத்தில்... "நான்தான் டாப்பு மீதியெல்லாம் டூப்பு' என ரஜினி திரையில் பாடியபோது... மக்கள் எழுந்து ஆட ஆரம்பித்தனர். ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் எனக்கு பெருத்த உற்சாகத்தைத் தந்தது. ஆனால் "இதெல்லாம் சரியா?' என்று இன்று கேட்டால், என் பதில் வேறாகத்தான் இருக்கும்.

எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜய் மூவரையும் எனக்கு அதிகமாகவே பிடிக்கும். ஆனால் மூவரும் மூன்றுவிதமானவர்கள். அவரை மாதிரி இவர், இவரை மாதிரி அவர் என சொல்லவே முடியாது. ரசிகர்களும் அப்படித்தான்.

எம்.ஜி.ஆர். ரசிகர்கள், அவரை கட்சியை விட்டு தூக்கிப் போட்டபோது, தனிக் கட்சியை ஆரம்பித்து விட்டு எம்.ஜி.ஆர்.தான் தலைவர் எனப் பிரகடனப்படுத்தினர். அவரை கோட்டையில் முதல்வர் நாற்காலியில் அமர வைக்கும்வரை ஓயவே யில்லை. ரஜினி கட்சி ஆரம்பித்து, பொறுப்புகளை பகிர்ந்து கொடுத்து எல்லாமே தயாரான நிலையில்.... அவர் பின் வாங்கினார். ஆனால் நடிப்பை விடவில்லை. படங்களில் நடித்தார். ரசிகர்களும் எதுவுமே நடக்காதது போல் படங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். ரஜினி எல்லா கட்சிக்காரர் களுடன் அன்பாகப் பழகுவார். அவர்களும் இவரை மதித்தே நடந்தனர். தன் மனசாட்சிக்கு எது சரின்னு படுதோ, அதை தயங்காமல் செய்வார்.

"இந்தம்மா மீண்டும் ஆட்சிக்கு வந்தா தமிழ்நாட்டை அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது'' என ஜெயலலிதா பற்றி பேசினார். சிறிதுகாலம் கழித்து மியூசிக் அகாடமியில் நடந்த கூட்டத்தில் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார். புலி வாலைப் பிடித்த கதையைச் சொன்னார். இவர்தான் தமிழ் படங்கள் பல நாடுகளில் ஓட காரணமாயிருந்தார். அயோத்திக்கும் போவார்... அம்பானி வீட்டுக்கு கல்யாணத்துக்கும் போவார். ரஜினி எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்.

எம்.ஜி.ஆர்.... அண்ணா வழியில் வந்தவர், ரஜினி ஆன்மீக வழியில் வந்தவர், இப்போது விஜயும் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

ss

"ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூவே சர்க்கரை' என்பார்கள். அர்ஜுனன் களத்தில் இல் லாத சமயம் பார்த்து, கௌரவர்கள் பத்ம வியூகம் அமைக்கிறார்கள். அதனைச் சமாளிக்க அதனை உடைத்து உள்ளேபோகும் போர்த்திறன் தெரிந்த அபிமன்யு அனுப்பப்படுகிறான். திரும்பிவரும் போர்யுக்தி அபிமன்யுவுக்குத் தெரியாது. அதற்குள் அர்ஜுனன் வந்துவிடுவான் என பாண்டவர்கள் நம்பினார்கள். அவன் வரமுடியாத சூழலை எதிரிகள் ஏற்படுத்தியிருப் பது பாண்டவர்களுக்குத் தெரியாது. இது அன்றைய கள நிலவரம்.

தமிழ்நாட்டு அர சியலை இந்த நிலைக்கு ஒப்பிடலாமா? பதில் சொல்ல நான் தயாராக இல்லை. ஆனால் ஆண்ட வர்களின் அமைச்சர்கள் பலபேர் ஊழல், லஞ்சம், சொத்துக் குவிப்பு எனச் சிக்கலில் இருப்பது நாடறிந்த உண்மை. இதே நிலை ஆள்பவர்கள் அணி யிலும் நடக்கிறது. இதையெல்லாம் தாண்டி, பெரும் விசுவாசமான தொண்டர்கள், அதிலும் கை சுத்தமான தொண்டர்களைக் கொண்ட ஒரு தலைவனால்தான் மத்திய அரசை எதிர்த்து மாநிலத்தைக் காத்திட முடியும். இந்த சூழ்நிலை யைப் புரிந்துகொண்டு மக்கள் தங்கள் ஜனநாயக கடமையைச் செய்ய முன்வந்தால் மட்டுமே மாநில உரிமைகளைக் காக்க முடியும்.

அண்ணா சொன்னதுபோல், இந்த நிலையில் மக்கள் பிடிவாதம் காட்டக்கூடாது. பற்று வேறு, பிடிவாதம் வேறு. மாநிலத்தைக் காக்க பற்றுள்ள, பலமுள்ள, சுத்தமான, ஊழலற்ற தலைவன் வேண் டும். காங்கிரசை வீழ்த்த அண்ணாவால் முடிந்தது. கலைஞரை வீழ்த்த எம்.ஜி.ஆரால் முடிந்தது. தற்போது ஜனநாயக விரோதப் போக்கை கடைப் பிடித்து, மத அரசியலை வளர்த்து, மாநில உரிமை களைப் பறிக்க சட்டங்கள் தீட்டும் ஒன்றிய அரசை வீழ்த்தி, நம் மாநிலத்தை காத்து நிற்க மாசற்ற ஒரு தலைவன் வேண்டும். அவன் விரல் காட்டும் பாதையில் வேங்கையெனப் பாய ஒரு தொண்டர் கூட்டம் தேவை. அந்தக் கூட்டத்தில் கறை படிந்த கைகள் ஒன்றுகூட இருக்கக்கூடாது. அது யாரென் பதை, பண அரசியல், பதவி அரசியல், ஜாதி அரசியல், மத அரசியல் செய்பவர்களிலிருந்து தேர்ந்தெடுக்க முடியாது. அரசியலிலும், ஆட்சி யிலும் ஊழல் செய்தவர்களைச் சேர்க்க முடியாது.

1967 -அண்ணாவால் அது முடிந்தது. 1977 -எம்.ஜி.ஆரால் நடந்தது.

2026...ல் யாரால் முடியும்?

(திரை விரியும்)