டைரக்டர் சிங்காரத்தை முடக்கிப் போட்ட சென்ஸார் போர்டு!
திரையுலகில் நான் நுழைந்த காலங்களில் ஸ்ரீதர் என்றால் காதல் கதைகள், கே.எஸ்.ஜி. என்றால் வலுவான குடும்பக் கதைகள், ஏ.பி.என். என்றால் பக்திப் படங்கள்... என பிரபல இயக்குநர்களுக்கு ஒரு பிராண்ட் இருக்கும். என்வரைக்கும் முடிந்தவரை இதை தவிர்த்துவந்தேன். எனது "மதுரகீதம்', "மாங்குடி மைனர்', "எங்க மாமா', "சுடரும் சூறாவளியும்', "மைக்கேல்ராஜ்', "தனிக்காட்டு ராஜா', "காசி யாத்திரை', "மின்சாரக் கனவு', "அட்ரா சக்கை... அட்ரா சக்கை', "மைனர் மாப்பிள்ளை' ஆகிய படங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாகவும், அது மாதிரி... இது மாதிரி என்றில்லாமல், எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக இருக்கவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைப்பேன்.
அந்த உழைப்பிற்கான பலனை மகிழ்வோடு சுவைத்திருக்கிறேன். முதன்முதலாக முழுக்க, முழுக்க சினிமா துறையிலுள்ள வெவ்வேறு டிபார்ட்மென்ட் கதாபாத்திரங் களை இணைத்து "டைரக்டர் சிங்காரம்' என்ற தலைப்பில் கதை எழுதி, அன்றைய பிரபல நகைச்சுவை நடிகர்கள் அனைவரையும் நடிக்க வைத்து நானே இயக்கினேன்.
முதல் காட்சியே ஏவி.எம்.ராஜேஸ்வரி தியேட்டர் வெளிப்புறத்தில் ஒரு பேனர் வைக்கப்பட்டிருக்கும். பலபேர் அதைச் சூழ்ந்து நின்று வேடிக்கை பார்ப்பார்கள். "டைரக்டர் சிங்காரம்' வெற்றிகரமான 69-வது வாரம். கதை சிங்காரம், வசனம் சிங்காரம், பாடல்கள் -ஒளிப்பதிவு -எடிட்டிங் -ஆர்ட் டைரக்ஷன் -ஸ்டண்ட் -டான்ஸ் -இசை, இறுதியாகவே இயக்குநர்... சிங்காரம்.
வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் ஒருவர் "ஏங்க இந்தப் படம் 69 வாரம் ஓடுது?'' எனக் கேட்க, இன்னொருவர், "மக்கள் விரும்பிப் பார்க்கிறாங்க ஓடுது'' என்பார்.
மூன்றாமவர் குறுக்கிட்டு, "அதில்லேங்க... இந்த டைரக்டர் ஒரு பேட்டி குடுத்திருக்காருங்க. அதிலே "என் படத்தைப் புரிஞ்சுக்கணும்னா, பார்க்கிற ஒவ்வொருத்தரும் குறைஞ்சபட்சம் பதினைஞ்சு தடவையாவது பார்க்கணும், அப்பதான் இதை முழுமையா புரிஞ்சுக்கிட்டு ரசிக்க முடியும்'னு சொல்லியிருக்காரு''.
"அட ஆச்சரியமாயிருக்கே?''
"நான் இதுவரை பதினாலு தடவை பார்த்திட்டேன். இன்னைக்கு பதினைஞ் சாவது தடவையா பார்க்கப்போறேன். இன்னிக்கு புரிஞ்சிடும்னு நம்புறேன்.''
"இதுவர யாருமே பதினைஞ்சு தடவை பார்க்கவே இல்லையா?''
"பார்த்திருக்காங்க. பார்த்தவங்க வாய் திறந்து எந்தக் கருத்தையும் சொல்லமாட்டாங்க.''
"ஏங்க அப்படி?''
"டைரக்டரோட பேட்டி முடிவிலே "பதினைஞ்சு தடவை பார்த்தும் புரியலேன்னா... நீங்க ஒரு அடிமுட் டாள்னு அர்த்தமுங்க' எனச் சொல்லியிருக் காருங்க.''
"ரொம்ப வித்தி யாசமா இருக்கே. அவ சியம் நானும் பதினைஞ்சு தடவை பார்த்திட வேண்டியதுதான். ஆமா... டிக்கெட் கவுன்ட்டர் எங்கே?''
"அது திறக்கிறதே இல்லே''
"ஏன்?''
"அட்வான்ஸ் புக்கிங்கிலேயே போகுது. இன்னும் இரண்டு வாரத்துக்கு டிக்கெட் இல்லே...''
இப்படி ஆரம்பிக்கிற கதையிலே இயக்குநர் சிங்காரமா தேங்காய் சீனிவாசனும், அவர் உதவியாளர்களாக சோ, சுருளிராஜன் "என்னத்தே' கன்னையா போன்றோர் நடித்தனர். அவங்க பண்ற அலப்பறை தாங்க முடியாது. சொந்தமா சில வசனங்களைப் பேசி பெரும் கலகலப்பை உண்டாக்கினாங்க. இந்தப் படத்தில் மீடியேட்டர் முனுசாமின்னு ஒரு கதா பாத்திரம். சாமிக்கண்ணு அண்ணன் நடிச்சாருங்க. மொத்த தமிழ் திரையுலகின் பிரபல மீடியேட்டர் இவர்தான். இவர் படம் பார்க்க வர்றார் என்றாலே படத்தை போட்டி போட்டு வாங்க விநியோகஸ்தர்கள் க்யூவில் நிற்க ஆரம்பிச்சிடுவாங்க. அவருக்கும் உதவியாளர்கள் இருக்காங்க. அவங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பணி கொடுக்கப்பட்டிருக்கும். அது வாங்க வர்ற விநியோகஸ்தர்களின் குணாதிசயங்களுக்கு ஏற்றபடி மாற்றப்படும். புதுசா படம் எடுக்கிறவங்க இந்த மீடியேட்டர்கிட்ட படுற பாடு... எழுதி மாளாதுங்க.
இந்த மீடியேட்டர் புது தயாரிப்பாளர், புது இயக்குநர் படத்தைப் பார்த்தா அவங்களை தன் ஆபீசுக்கு வரச்சொல்லுவாரு, வந்ததும் "படம் பிரமாதம்! நான் சொல்ற சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்தா உங்க படம் சில்வர் ஜுபிலிதான்'' என்பார். "முதல்ல சின்னச் சின்ன மாற்றங்களை சொல்ல ஆரம்பிச்சு, பின்னர் சண்டையை மாத்தி எடு, பாடல்களை திருப்பி எழுது, காமெடியா அது.... காமெடியன்ஸ மாத்தி வேற டிராக் எழுதி எடுங்க' என்பார். அப்புறம், "இது என்ன டைட்டில்... "மானல்ல மைதிலி!', யாருக்குப் புரியும். படத்தின் தலைப்பை "பன்னிக்கார பரிமளா' அப்படி வைங்க... படம் "ஆட்டுக்கார அலமேலு' மாதிரி வசூல் பண்ணும்'' என சொல்லுவார். (அன்றைய காலகட்டத்தில் இப்படி மீடியேட்டர்கள் இருந்தாங்க.)
அதே மாதிரி ஒளிப்பதிவு உதவியாளர், லைட்... நாயகி முகத்தில் எப்படியிருக்கிறது என மீட்டருடன் மிக அருகே போய் பார்க்கும் போது... மெல்லிய குரலில் தன் தேவைகளை நாயகிகிட்டே கேட்டு தொல்லை கொடுப்பாரு. அதை மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தவிப்பா நாயகி... இதுமாதிரி நாயகன் டான்ஸ் மாஸ்டரை காக்கா பிடிச்சு, நாயகி யோட மிகமிக நெருக்கமா... உடலோட உடல் உரசுற மாதிரி டான்ஸ் அசைவுகளையும், உணர்ச்சியைத் தூண்டும் இடங்களைத் தொட்டு கிள்ளுற மாதிரியும் அமைக்கச் சொல்லுவார்.
ஃபைட் காட்சிக்கு நாயகி தேவை யில்லாமல் இருந் தாலும், அவரை யும் சேர்த்து தன்மேல் அவ விழுற மாதிரியும், பல வினாடிகன் விலக முடியாமல் நாயகி நாயகன்மேல் படுத்திருப்பது போல் காட்சியமைக்கச் சொல்வார் நாயகன். புதுமுகங்களை டைரக்டர் எப்படி சரிபடுத்துகிறார், மேக்கப்மேன் பண்ற அட்டகாசம், காஸ்ட்யூமர் அளவு எடுக்கும் போது செய்ற சிலுமிஷம்...
இப்படி சினிமாவில் உள்ள அவலங்களை நகைச்சுவைக் காட்சிகளாக அமைத்திருந்தேன்.
படத்தைப் பார்த்தவர்கள் பாராட்டினார் கள். முதல்தடவை படம் சென்ஸாருக்கு போன போது... நிறைய காட்சிகளை நீக்கி ஸ்க்ரீன்ப்ளே ஆர்டரை மாற்றிக்கொண்டு வரச்சொன்னாங்க. அதன்படி செய்துகொண்டு போனால், மறுபடியும் திருத்தங்கள் சொன்னார்கள். மூன்றாவது முறை போனபோது சென்சார் செய்ய முடியாது என பிடிவாதமாகச் சொல்லிவிட்டார்கள். உடனே தென்னிந்திய திரைப்பட சேம்பரில் உதவி கேட்டுப் போனேன்.
அவர்கள், "சினிமா துறையை மட்டமாக விமர்சிக்கிற மாதிரி படம் முழுவதும் இருப்ப தால் நாம் சிபாரிசு செய்ய முடியாது' என கைவிட்டனர். வேறு வழியில்லாமல் படச்சுருள் களை ஜெமினி "லேப்'பில் பாதுகாப்பாக வைத்துவிட்டு லட்சக்கணக்கில் நஷ்டத்தோடு அடுத்த படங்களுக்கான வேலை செய்யப் போய்விட்டேன். சிலகாலம் கழித்துப் போய் ஜெமினியில் அப்படத்தின் ரீல்களை டிஜிட்ட லில் மாற்றக் கேட்டேன். அவை கெட்டுப் போய்விட்டதாகச் சொன்னார்கள்.
பின்குறிப்பு:
இதுவரை எங்கேயும் இந்தப் படத்தைப் பற்றி நான் பேசியதுமில்லை... எழுதியதுமில்லை. நக்கீரனுக்காக மட்டுமே எழுதியுள்ளேன். "டைரக்டர் சிங்காரம்' என்ற என் படக் கதையை வெப் சீரிஸுக்காக கொடுத்துவிட்டேன். படப்பிடிப்பு, பிரபல நகைச்சுவை நடிகர்களை வைத்து "டைரக்டர் ஜாக்ஸன்' என்ற பெயரில் ஆரம்பமாகிவிட்டது.
(திரை விரியும்)
படம் உதவி: ஞானம்