ss

(50) ரீல்.... ரியல் ஆச்சு!

நான் பாட்டாக படமாக்கிய ஒரு விஷயம் "பாண்டி விழா'வாக... (பாண்டிச்சேரியில் நடந்த விழாவாக) மலர்ந்தது. ஆமாம்... பாட்டில் நான் காட்சிப்படுத்திய விஷயம் நாட்டிலே நடந்தது. பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. ரீலும் ரியலாச்சு என்பதால்... எனக்கு அப்படியொரு மகிழ்ச்சி.

Advertisment

பச்சைத் தமிழன் என பெரியாராலும், "குணாளா... குலக்கொழுந்தே' என அண்ணாவா லும், "காமராஜர் என் தலைவர்; அண்ணா எனது வழிகாட்டி' என எம்.ஜி.ஆராலும், பெருந் தலைவர் என சிவாஜிகணேசனாலும் புகழப்பட்ட காமராஜர், இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் "கிங் மேக்கர்' ஆக திகழ்ந்தார். இந்திரா காந்தியை பிரதமராக்கியவர் காமராஜரே. காங்கிரஸ் கட்சியின் பிரச்சினைகளை சுமூகமாகத் தீர்த்ததால் "காமராஜர் பிளான்' என்பதன் சுருக்கமாக "கே. பிளான்' என மற்றவர்கள் பிரமிக்கும் அளவுக்கு காமராஜரின் அணுகு முறை இருந்தது.

ஆனால் ஒரு கட்டத்தில் காமராஜருக்கும், இந்திராகாந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டாகி, கட்சி இரண்டாக உடைந்தது. இந்திரா தலைமையில் இயங்கிய காங்கிரஸ் "இந்திரா காங்கிரஸ்' எனவும், காமராஜர் உள்ளிட்ட மூத்த தலைவர்களைக் கொண்ட காங்கிரஸ் "ஸ்தாபன காங்கிரஸ்' எனவும் செயல்பட்டு வந்தது.

Advertisment

பொதுப்படையானவர்கள் பலரும் மீண்டும் காங்கிரஸ் ஒன்றிணைய வேண்டும் என்கிற ஆவலுடன் இருந்தனர். வாத்தியார் எம்.ஜி.ஆரின் ஆளான எனக்கும் அந்த ஆசை இருந்தது.

1978-ல் "தெய்வக் குழந்தைகள்' என்ற படத்தை எழுதி தயாரித்தேன். ஜெய்சங்கர், முத்துராமன், ஜெயா, வரலட்சுமி, சுருளிராஜன், அப்போது குழந்தை நட்சத்திரமாக இருந்த பேபி ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பில் எஸ்.பி. முத்துராமன் இயக்கினார். அந்தக் காலகட்டத் தில் படங்களில் நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் எல்லா எழுத்தாளர்களிடமும் இருந்தது. எனக்குள்ளும் இருந்தது.

ss

இந்திராகாந்தி அம்மையாரும், கர்மவீரர் காமராஜரும் பிரிந்திருந்த நேரம். "இது நாட்டுக்கு நல்லதல்ல' என எப்போதும் என் மனதை இந்த விஷயம் உறுத்திக்கொண்டிருத்தது. அதனால் இந்தப் படத்தில் அதுபற்றி சொல்லவேண்டும் என எண்ணிணேன். கவிஞர் கண்ணதாசன் அவர்களை வரவழைத்து, இந்த விஷயத்தைச் சொல்லி "எனக்கு ஒரு பாட்டு வேண்டும். குழந்தைகள் கலை நிகழ்ச்சியில் பேபி ஸ்ரீதேவி பாடுவதுபோல்... பாட்டின் இறுதியில் பல அரசியல் தலைவர்களின் புகைப்பட போஸ்டர்களை குழந்தைகள் தாங்கி வருவார்கள். அதில் பேரறிஞர் அண்ணா படமும் இடம்பெறும்; பாட்டின் இறுதியில் காமராஜர் படத்தையும், இந்திரா அம்மையார் படத்தையும் இரு குழந்தைகள் எடுத்துவரும். அதை ஸ்ரீதேவி தன் இரு கைகளிலும் வாங்கி, ஒன்றாக இணைத்துக் காட்டு வதுபோல பாடல் காட்சியை எடுக்கவுள் ளேன். இதுதான் பாடல் சூழல்'' என்றேன்.

கவிஞர் மிகுந்த உணர்ச்சிவசப் பட்டு, என்னைப் பாராட்டினார். சில நிமிடங்களில் அந்த வரகவி வார்த்தைகளைக் கொட்டினார்.

எத்தனை மேதைகள் கண்டோம் -நாம்

எவர்தான் அவர்வழி நின்றோம்.

அறிவுக்கு படிப்பது பாடம் -இதில்

அரசியல் கலப்பது பாவம்

கட்சிகள் புரிவது குழப்பம் -இளங்

காளையின் தேவை ஒழுக்கம்

உறக்கத்தை மறந்தவன் தலைவன் -நல்ல

ஒழுக்கத்தை வளர்ப்பவன் தலைவன்

கடந்ததை மறப்பவன் தலைவன் -தன்

கடமையை நினைப்பவன் தலைவன்

-இப்படி அத்தியாவசிய வார்த்தைகளால் அழகு செய்திருந்தார் கண்ணதாசன்.

"கடந்ததை மறப்பவன் தலைவன்' என்ற வரி வரும்போது இந்திராவின் படத்தையும், "கடமையை நினைப்பவன் தலைவன்' என்ற வரி வரும்போது காமராஜரின் படத்தையும் உயர்த்திப் பிடிப்பார் ஸ்ரீதேவி. பின்பு இருவரின் படத்தையும் ஒன்றாக சேர்த்துக் காண்பிப்பது போல அந்தப் பாடல் காட்சியில் என் எண்ணத்தை வெளிப்படுத்தினேன்.

இந்தப் பாடல் காட்சியை மிகச்சிறப்பாக இயக்கியிருந்தார் எஸ்.பி.முத்துராமன். அற்புதமாக நடித்திருந்தார் ஸ்ரீதேவி. இன்றைய இந்திய அரசியல் சூழலுக்கும் கூட இந்தப் பாட்டும் அதன் காட்சிகளும் பொருந்தும்.

அதே ஆண்டு டிசம்பரில் என் "ராஜபார்ட் ரங்கதுரை' வெளியாகிறது. அது ஓடிக் கொண்டி ருக்கும்போதே... என் காதுகளில் தேனாக ஒரு செய்தி. இந்திராவின் கட்சியும், காமராஜர் கட்சியும் இணையப்போகின்றன; அதற்கான விழா பாண்டிச்சேரியில் நடக்கப்போகிறது எனபதுதான் அந்த இனிய செய்தி. உடனே சிவாஜி சாரையும் அவர் தம்பி சண்முகம் அவர் களையும் சந்தித்து... அந்த கட்சிகள் இணைப்பு நிகழ்ச்சியை குறும் படமாக்கி; தியேட் டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் "ராஜபார்ட் ரங்க துரை' படத்துடன் இணைத்து; சென்சார் பண்ணி வெளியிடும் பொறுப்பையும், செலவையும் நானே ஏற்றுக் கொள்வதாகச் சொன்னேன். உடனடியாக மேலிடங்களில் அனுமதி பெறப்பட்டது. அந்தநாளில் பல அதிசயங்கள் நடந்தன. கூட்டம் மதியம் மூன்று மணிக்கு பாண்டிச்சேரியில். சிவாஜி சார், சண்முகம் சாருடன் நானும், என் படக் குழுவும் அன்று மதியமே பாண்டிச்சேரி சென்றுவிட்டோம். மதியம் ஜீவரத்ன உடையார் வீட்டில் சாப்பாடு. ஏறத்தாழ அதே தேரம், அதே வீதியில்... அண்ணன் எம்.ஜி.ஆர். தனது பிரச்சார வாகனத்தில் நின்றபடி சென்றதைப் பார்த்தேன்.

மதிய உணவு முடித்து, சற்று ஓய்வுக் குப் பின், கட்சிகள் இணைப்பு மாநாடு நடக்கும் இடத்திற்குச் சென்றோம். பெரும் கூட்டம். மேடையில் இரண்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. காமராஜர் வந்து ஒரு நாற்காலியில் அமர்ந் தார். மேடையில் எல்லா தலைவர்களும் இருப்பதைப் பட மாக்கலாம் என எண்ணியிருந்தேன். ஆனால் நான் விசாரித்தபோது இரு தலைவர்கள் மட்டுமே அமர்வார்கள் என்று தெரியவந்தது. "அப்படியானால் சிவாஜி சார் மேடையில் அமர மாட்டாரா?'' என நான் கேட்டேன். சிவாஜி சார் பேசிவிட்டு இறங்கிவிடுவார் என்றனர்.

ss

காமராஜர் அமர்ந்திருக்க, சிவாஜி சார் மேடையேறிப் பேசத்தொடங்கியதும், மக்களிட மிருந்து கைதட்டலும், ரசிகர்களிடமிருந்து விசிலும் பறந்தன. நான் அந்தக் காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் வானில் ஹெலிகாப்டர் பறந்துவருவது தெரிந்தது. மக்கள் ஆர்ப்பரித்தனர். ஹெலிகாப்டர் தரையிறங்க, இந்தியாவின் இரும்புப் பெண்மணி இந்திராகாந்தி இறங்கி வந்து, மேடையேறி காமராஜரை வணங்கிவிட்டு அருகிலுள்ள நாற்காலியில் அமர்ந்தார். நான் எல்லாவற்றையும் படமாக்கினேன். எவ்வளவு கம்பீரமாக காட்சியளித்தது அந்த மேடை. அந்த இரு தலைவர்களும் என் பார்வையில் ஜொலித்தார்கள். கறையற்ற, குறையற்ற. நெஞ்சுரம் கொண்ட, நேர்மையாளன் கர்மவீரர் காமராஜர் -அறிவால், செயலால், தியாகத்தால் உலகமே மதிக்கும் இரும்புப் பெண்மணியான இந்திரா அம்மையார். இருவரையும் ஒருசேரக் கண்டு கடலெனக் கூடியிருந்த மக்கள் கூட்டம் கைதட்டி மகிழ்ந்தது. இந்திய நாடே எதிர் பார்த்த இணைப்பு நடந்தேறியது. அனைத்தும் என் கேமராவில் பதிவானது.

என் எடிட்டிங் அறையில் படச் சுருள் களுடன் நான் சிந்தித்த படி... மின்னலென ஒரு புது எண்ணம். யாரிடமும் சொல்லா மல் எடிட்டர் உதவி யோடு செய்து பார்த்தேன். "சபாஷ்' என என்னையே நான் மெச்சிக்கொண்டேன். இந்தியாவின் இரு பெரும் தலைவர்கள் மேடையில் அமர்ந் திருக்கையில், உலகமே பார்த்து வியக்கும் நம் நடிகர் திலகம் பேசுவதுபோல் எடிட் செய்து, அனைவருக்கும் காட்டினேன். மிகவும் பாராட்டினார்கள். சகோதரர் -கதாசிரியர் பாலமுருகன் தன்ய்ய்ண்ய்ஞ் ஈர்ம்ம்ங்ய்ற்ழ்ஹ் கொடுத்தார். அந்தக் குறும்படத்துக்கு "பாண்டிவிழா' என பெயரிட்டு, சென்சார் செய்து, "ராஜபார்ட் ரங்கதுரை' ஓடிக் கொண்டிருந்த அத்தனை தியேட்டர்களிலும் படத்துடன் இணைத்து குறும்படத்தை ரிலீஸ் செய்தேன். மக்கள் பாராட்டினார்கள். சிவாஜி சார் என்னைத் தட்டிக் கொடுத்தார். காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்துச் சொன்னார்கள். அளவிலா மகிழ்ச்சியடைந்தேன்.

முன்கூட்டியே என் படப் பாடலில் சொன்னது பலித்ததல்லவா?

ரீல்... ரியலானது; கனவு நனவானது!

(திரை விரியும்)