/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinemakottaigai_0.jpg)
(9) 17 வயதில் எம்.ஜி.ஆர். படத்துக்கு கதை எழுதினேன்!
சினிமா படம் என்பது எனக்கு வியப் பாகவும், வசீகரமாகவும் தெரிந்ததற்கு முதல் முக்கிய காரணம்... தமிழாசிரியராக இருந்த என் அப்பா, சினிமாவை விரும்பாதவராக இருந்தார். அதனால்தான் சிறுவயதில் சினிமா பார்க்கிற பாக்கியமே எனக்கு அமையவில்லை.
எப்படியோ... அவருக்குத் தெரியாமல் நண்பர்களுடன் சேர்ந்து 12 வயதில்தான் "மலைக்கள்ளன்' படம் பார்த்தேன். என் முதல் படமே எம்.ஜி.ஆரும், கலைஞரும் சம்பந்தப்பட்ட படமாக இருந்ததால் எனக்கு பிரமிப்பாக இருந்தது.
"மலைக்கள்ளன்' படம் என்னுடைய பால்ய பருவத்தையே மடைமாற்றிவிட்டது. நான் சினிமாவுக்கு வர வேண்டும் என்ற உந்துதலை உருவாக்கிய அந்தப் படம்தான், சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் எனக்கு ஏற்படுத்தியது.
சினிமாவில் வரவேண்டும்; அப்படி வந்தாலும் எம்.ஜி.ஆர். போல் வரவேண்டும் என எண்ணத்தில் ஒரு விதையை ஆழ விதைத்தேன்.
திரையரங்க இருட்டிலே அவரால் ஈர்க்கப்பட்ட நான், அவரது தீவிர ரசிகனானேன். அவர் படங்களை வரைவது, அவரைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது, அதில் என் கற்பனைகளையும் கலந்து நண்பர்களிடம் அதை பேசிக் காட்டுவது, நடித்துக் காட்டுவது அதெல்லாம் எழுதி மாளாது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinemakottaigai1_0.jpg)
"நாடோடி மன்னன்' திரைப்படத்தை பத்து தடவைக்கு மேல் பார்த்தேன். படத்தில் இடம்பெற்ற பாட்டுக்காக; எம்.ஜி.ஆர். பேசிய வசனங்களுக்காகவே இத்தனை தடவை பார்த்தேன். அப்போதே "எம்.ஜி.ஆர்.தான் இந்த குகநாதனுக்கு குருநாதர்' என தீர்மானித்தேன். பன்னிரெண்டு வயதில் நான் எம்.ஜி.ஆர். மேல் வைத்த பக்தியும் பாசமும், ஆண்டவன்மீது ஆண்டாள் வைத்த பக்திக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல.
கடல் கடந்து வாழ்ந்த இந்த குகன், தன்னுடைய ராமனை முதன்முதலில் தொடர்புகொண்டது கடிதம் மூலமாகத்தான்.
எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதியதும், அந்தக் கடிதத்தை முதலில் எங்கள் வீட்டு பூஜையறையில் வைத்து பூஜித்துவிட்டு, எம்.ஜி.ஆரின் "தாய் இல்லம்' ஆன சென்னை ராயப்பேட்டை லிலாயிட்ஸ் ரோடு முகவரிக்கு (தற்போதைய அ.தி.மு.க. தலைமை அலுவலகம்) அனுப்பினேன்,
"நான் உங்கள் படங்களைப் பார்த்தேன்; நல்ல பாடல்களைப் பாடுகிறீர்கள்; கருத்துள்ள வசனங்களைப் பேசுகிறீர்கள். அதனால் நான் உங்களுடைய சிஷ்யனாக இருக்க விரும்பு கிறேன். கலையுலகில் உங்களோடு பயணிக்க விரும்புகிறேன்; அதற்கு நான் தகுதி யானவனா? என நீங்கள்தான் சொல்ல வேண்டும். நீங்கள் அங்கேயும், நான் இங்கேயும் இருந்தால்... அது நடக்காது. அதனால் உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். எப்போது வரலாம்?''
-இப்படியாக அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தேன்.
எம்.ஜி.ஆரிடமிருந்து பதில் கடிதம் வந்தது.
"என்மேல் இவ்வளவு பற்று வைத்திருப்பதற்கு நன்றி! நீங்கள் இங்கே வரவேண்டாம். நான் விரைவில் இலங்கை வரவிருக்கிறேன். அப்போது நான் உங்களை சந்திக் கிறேன். முதலில் நன்றாகப் படித்து நல்ல பெயர் எடுங்கள்''
இவ்வாறு அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
நான் படிப்பில் கவனம் செலுத்தினேன். யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து கொழும்பு வந்து படிக்க ஆரம்பித்ததும்... பல விஷயங்களில் எனக்குத் தெளிவு கிடைத்தது.
கலைஞரைப் பற்றி கொழுப்பிட்டியில் சலூன் கடை நடத்திய மாயவரம் தமிழர்கள் மூலம் பல அரிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன். அந்த காலகட்டத்தில்... "மந்திரி குமாரி' படத்தில் வில்லனாக நடித்த எஸ்.ஏ.நடராஜன் பேசும் கலைஞரின் வசனங்களை தெருக்களிலே சாமானியர்கள் கூட பேசிக்காட்டுவார்கள். அங்கே நடக்கும் நாடகங்களில் "பராசக்தி' வசனங்களை பலர் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் கொழும்பில் "வடிஸ் வீரமணி' என்பவர் நாடகங்கள் நடத்து வார். அவரது நாடகத்தில் நகைச்சுவை வேடத்தில் எஸ்.எஸ்.சந்திரன் நடிப்பார். அங்கேதான் அவருக்கும் எனக்கும் இடையிலான பழக்கம் ஏற்பட்டது. அது நட்பாக மலர்ந்தது.
(பிற்காலத்தில் நான் சென்னையில் "காசி யாத்திரை' நாடகம் நடத்தியபோது, அதில் சில காட்சிகளில் எஸ்.எஸ்.சந்திரன் நடித்துள்ளார். இதுபற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன. அதுபற்றி பிறகு பேசலாம்...)
இந்த காலகட்டத்தில் நான் வானொலி நாடகங்களில் நடிப்பதற்கு நடந்த நடிகர்கள் தேர்வில் வெற்றிபெற்று இலங்கை வானொலி நாடகங்களில் நடித்துவந்தேன். கல்லூரியில் G.C.E. Ordinary Levelமாணவனாக படித்தும் வந்தேன்.
இனி... திரையுலகமே என் எதிர்காலம் என முடிவு செய்தேன்.
என் கலை ஆர்வத்தையும், திறமை யையும் அறிந்த எனது பாட்டி, என்னை தமிழகத்திற்கு அனுப்பி, தன் தமையனார் வீட்டில் தங்கிப் படிக்கவைக்க விரும்பினார். அதனால் என் சினிமாவுக்கான நுழைவு சுலபமானது. நான் என் தாயகம் தமிழகம் வந்தேன். புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் என் தாயார்வழி உறவினர்கள் தங்கியிருந்தனர். நான் என் பெரியம்மா வீட்டில் தங்கியிருந்துதான் பச்சையப்பன் கல்லூரியில் படித்துவந்தேன்.
எம்.ஜி.ஆருக்கு நான் கடிதம் எழுதி; பதிலுக்கு அவர் கடிதம் எழுதி.... நான் சென்னை வந்து எம்.ஜி.ஆரை தொலைவிலிருந்து பார்த்து தரிசித்து தவமிருந்தேன்.
அந்த தவத்திற்கான பலனாக... பச்சையப்பன் கல்லூரி மாணவனாக இருந்த என் 17 வயதில், பெரும் புகழ்பெற்ற "மக்கள் திலகம்' எம்.ஜி.ஆருக்கு "புதிய பூமி' கதை எழுதும் பாக்கியம் கிடைத்தது.
சூப்பர்ஹிட் "புதிய பூமி' படத்தின் அறியப்பட்டிருக்காத விஷயங்கள்... நான் சென்னை -புரசைவாக்கம் வந்தது, அறிஞர் அண்ணாவின் காஞ்சிபுரம் வீட்டருகே வீடு எடுத்து தங்கியது... அந்த பொற்காலங் கள்...
(திரை விரியும்...)
படம் உதவி: ஞானம்
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinemakottaigai2_0.jpg)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/cinemakottaigai-t.jpg)