"நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வினர் யாரும் ஒழுங்காக வேலை பார்க்கவில்லை; தலைமை மீது யாருக்கும் விசுவாசம் இல்லை; தி.மு.க.விடம் சோரம் போய்விட்டீர்கள்' என்றெல்லாம் சமீபத்தில் கூட்டப்பட்ட அ.தி.மு.க.வின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மா.செ.க்கள் கூட்டத்தில் ர.ர.க்கள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார் எடப்பாடி பழனிச்சாமி.
இதனை ஜீரணிக்கமுடியாமல் குற்றசாட்டுகளுக்குப் பதிலளிக்க எழுந்த மா.செ.க்கள் சிலரை, ”"உங்கள் லட்சணம் எனக்குத் தெரியும், உட்காருங்கள்'’என்று எடப்பாடி கோபப்பட்டதில் ஒட்டுமொத்த கூட்டமும் அப்செட்டானது.
தலைமைக் கழகத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பியவர்கள் ரிலாக்ஸ் ஆக வெகு நேரமாகியிருக்கிறது. அதன்பிறகே மா.செ.க்கள் ஒவ்வொருவரும் மற்ற மா.செ.க்களை தொடர்புகொண்டு எடப்பாடி நடந்துகொண்ட விதத்தைப் பற்றி விவாதிக்கொண்டார்கள்.
இதுகுறித்து மா.செ.க்களுக்கு நெருக்கமான அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் நாம் விசாரித்த போது, ‘’"எடப்பாடியின் பேச்சு மா.செ.க்களை மிகவும் காயப்படுத்திவிட்டது. மா.செ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியின் அடிமட்டத் தொண்டர்களாகவே பணி செய்வோம். யார் நல்லவர்கள் என நினைக்கிறாரோ அவர்களுக்குப் பதவி கொடுத்து எடப்பாடியே கட்சியை நடத்திக்கொள்ளட்டும்'' என எடப்பாடிக்கு எதிராக மா.செ.க்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். "ராஜினாமா மூடில் மா.செ.க்கள் இருக்கிறார்கள். இதனை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் எடப்பாடி என்பது தெரியவில்லை'' என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
எடப்பாடிக்கு நெருக்கமான தரப்பில் நாம் விசாரித்தபோது, "ஜெயலலிதா உயிருடன் இருந்திருந் தால் தேர்தல் காலத்தில் மா.செ.க்கள் இப்படி எதிரிகளிடம் சமரசம் ஆகி யிருப்பார்களா? சோரம் போயிருக்க முடியுமா? தி.மு.க. அமைச்சர்கள், தி.மு.க. தொழிலதிபர்கள் ஆகி யோரோடு கைகோர்த்துக் கொண்டு எத்தனை மா.செ.க்கள் கடந்த 3 ஆண்டுகளில் சம்பாதித் திருக்கிறார்கள் தெரியுமா? இதெல்லாம் எடப்பாடிக்குத் தெரியும். தெரிந்தும், அவர் கண்டிக்காமல் விட்டதற்கு காரணம்,…தேர்தல்னு வந்துட்டா அ.தி.மு.க. என்கிற உணர்வை மறக்கமாட்டார்கள் என்பதால்தான். ஆனால், இந்த தேர்தலில் அந்த உணர்வை மறந்துவிட்டார்கள் என்பதுதான் எடப்பாடியின் ஆதங்கம்.
தனது தலைமையில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த 4 ஆண்டு காலமும் மா.செ.க்கள் எல்லோரையும் சம்பாதிக்க அனுமதித்தார் எடப்பாடி. ஆட்சியில் மா.செ.க்கள் எல்லோரும் செல்வச் செழிப்புடன்தானே இருந்தார்கள்... அப்புறம் என்ன? கட்சிக்கும் தலைமைக்கும் விசுவாசமாக இருக்கலாமே! அதனை தேர்தல் நேரத்தில் தானே காட்ட முடியும்? மா.செ.க்கள் செய்தார்களா? மா.செ.க்கள் மீது வேட்பாளர்கள் தம்மிடம் ஏற்கனவே தெரிவித்திருந்த அதிருப்தி களை வைத்துதான் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார் எடப்பாடி. அது தப்பு கிடையாது. ராஜினாமா செய்துவிட லாமா? என மா.செ.க்கள் யோசிப்பதும் எடப் பாடிக்கு தெரியும். ராஜி னாமா செய்தால் செய்து கொள்ளட்டும்.
ராஜினாமா செய்து விட்டு என்ன செய்வார் கள்? தி.மு.க., பா.ஜ.க.வில் சேர்வார்களா? சேரட்டும். அப்படி சேர்ந்தால் அது ஒருநாள் பரபரப்பு செய்திதானே தவிர... அவர்களின் அரசியல் எதிர் காலத்துக்கு எந்த உத்தரவாதமும் இருக்கப் போவதில்லை. ஒவ்வொரு மாவட்டம் வாரியாக, பூத் வாரியாக மா.செ.க்கள் என்னென்ன செய்தார்கள் என்கிற விபரங்களெல்லாம் எடப்பாடிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
தேர்தல் முடிவுகள் வரட்டும். எடப்பாடியின் முகம் அப்போது தெரியும். எதிரிகளிடம் சோரம் போனதை ஆதாரப்பூர்வமாக காட்டி பலருக்கும் கல்தா கொடுப்பார் எடப்பாடி. அந்த முடிவில் தான் இருக்கிறார்''‘என்று நம்மிடம் விவரிக்கின்ற னர் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள். இந்த நிலையில், மா.செ.க்கள் மீது எடப்பாடி காட்டிய கோபத்திற்கு எதிராக கச்சை கட்டுகிறார் அ.தி.மு.க. வின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி. சோசியல் மீடியாக்களில் அவரது ஆவேசம் தெறிக்கிறது.
இதுகுறித்து அவரிடம் பேசியபோது, "அ.தி.மு.க.வின் பூத் ஏஜெண்டுகள் சரியாக வேலை செய்யவில்லை. தி.மு.க.விடம் விலை போய்விட் டார்கள் என எடப்பாடி குற்றம்சாட்டுவது அபத்தம். விலை போனது பூத் ஏஜெண்டுகள் இல்லை. அவர்தான் விலை போய்விட்டார். அவர் தேர்வு செய்த வேட்பாளர்கள் யாரேனும் தி.மு.க.வை எதிர்த்து போட்டியிடும் வலிமை வாய்ந்தவர்களா? டம்மி வேட்பாளர்களை நிறுத்தி தி.மு.க.வுக்கு நன்மை செய்திருக்கிறார்.
தொண்டர்களை குறை சொல்கிறார் எடப்பாடி. அவர்களை குறை சொல்ல இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? தலைமைக்குரிய தகுதியோடு கட்சியை வழிநடத்துகிறாரா? இல்லையே! அப்புறம் எப்படி தொண்டர் களை குறை சொல்ல முடியும்? அ.தி.மு.க. ஆளும்கட்சியாக இருந்த நிலையில் இவரை முதலமைச்சராக்கினார்கள். அதற்காக நான்தான் அ.தி.மு.க.வின் அதிகாரம் பெற்ற தலைமை என இவர் செயல்பட்டால் எப்படி ஏற்றுக்கொள் வார்கள்?
இவர், கட்சியை வலிமைப்படுத்தி கட்சிக்கு வெற்றியைத் தேடித்தந்து தனது தலைமையின் வலிமையை நிரூபித்திருந்தால் தொண்டர்களை குறை சொல்லலாம். ஆட்சியில் இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் கட்சியை வலிமையாக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பா.ஜ.க.விடமும் தி.மு.க.விடமும் இவர்தான் சமரசமாக இருக்கிறார். தன்னையும் தனது குடும்பத் தையும் முன்னாள் அமைச்சர்களையும் வழக்குகளில் இருந்து பாதுகாக்கவே இந்த சமரசம்.
அ.தி.மு.க.வை உருவாக்கியவரோ, வளர்த்தவரோ இல்லை எடப்பாடி. பண பலத்தாலும் பா.ஜ.க.வாலும் கட்சித் தலைமையை கைப்பற்றி, தொண்டர்களின் உரிமைகளை பறித்தவர். தேர்தல் முடிவுகள் எடப்பாடியின் அதிகாரத்துக்கு முடிவு கட்டும்''’என்கிறார் ஆவேசமாக.
இதற்கிடையே கால் மூட்டு வலியை சரி செய்துகொள்வதற்காக ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்ள கேரளாவிற்கு சென்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு மா.செ.க்களை மாற்றுவது குறித்த பட்டியலை தயாரித்து வருவதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.