"எனக்கு இங்கு இன்னும் வாய்ப்பிருக்கு'' என பா.ஜ.க. தரப்பிலிருந்து எல்.முருகன் போட்டியாளராகக் களமிறங்க, "கட்சி வாக்குகளுடன், எங்க சமூக வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் எங்களுக்கே'' என அ.தி.மு.க. தரப்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தனபாலும் களத்திலிறங்க, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் 'ஆ.ராசாவிற்கு' செக் வைக்கப்பட்டிருக்கிறது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளோடு, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒரு சட்டமன்றத் தொகுதி இணைந்து உருவானது நீலகிரி தொகுதி. மலைப்பகுதிகளையும், சமவெளிப்பகுதிகளையும் உள்ளடக்கிய நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் சமவெளிப் பகுதிகளில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் பலமிக்க கட்சியாக இருக்க, மலைப்பகுதிகளில் பலமான கட்சியாக தி.மு.க. இருந்தது என்பதை புள்ளி விபரங்கள் பறைசாற்றுகின்றன.
"ஊட்டி, கூடலூர் மற்றும் குன்னூர் சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க. தான் ஸ்ட்ராங்க் என முன்ன இருந்தது. இப்பொழுது அந்த புள்ளி விபரம் பூஜ்யமே. கூடலூரில் தாயகம் திரும்பிய தமிழர்களின் வாக்குகள், மலைவாழ் மக்களின் வாக்குகள் ஆகியனவும், கூடலூர் டவுன், குன்னூர் டவுன் மற்றும் ஊட்டி டவுன் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையினரின் வாக்குகள் மட்டுமே தி.மு.க.விற்கு பலம். அதுபோல் திம்பம் மலைப்பகுதி வாக்குகள் தி.மு.க.விற்கு கேள்விக் குறியே. கடவுள் விவகா ரத்தில் தேவையில்லாமல் பேசி பிரச்சினையாக்கியவர் ராசா. இங்கு ராசாவிற்கு எதிராக கடையடைப்பு நடைபெற்ற பொழுது அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டது நினைவிருக்கலாம். அதுபோக, மலைப்பகுதி களில் மேற்கு நாடு சீமை, பொறங்காடு சீமை, குந்தா சீமை மற்றும் தொதநாடு சீமை ஆகிய 4 சீமைகளில் வாழ்ந்துவரும் படுகர் சமூகத்தினர் தற்பொழுது பா.ஜ.க.வையே சார்ந்து இருக்கின்ற னர். ஏனெனில், ஒவ்வொரு அட்டியிலும் (கிராமத்திலும்) பா.ஜ.க.வினர் பலமாக வேரூன்றியுள்ளனர். சமவெளிப் பகுதிகளில் வாழும் கன்னடம் பேசும் ஒக்கலிகர் சமூக வாக்குகளும், அவிநாசி, அன்னூர் பகுதிகளில் வெற்றிக்கு உதவிடும் அருந்ததியர் வாக்குகளும் எப்பொழுதுமே அ.தி.மு.க.விற்கு சென்றிருக் கின்றன. செய்த சாதனைகள், வாக்குறுதிகள், பண பலம் மட்டுமே உள்ள ராசா, தீவிர களப்பணிகளைச் செய்தால் மட்டுமே இங்கு வெற்றி சாத்தியம். அதுவும் குறைந்தபட்ச வாக்கு கள் வித்தியாசமே வெற்றியைத் தீர்மானிக்கும்'' என்கிறார் குன்னூரை சேர்ந்த டேவிட்.
நீலகிரி நாடாளுமன்ற வேட்பாளராக எல்.முருகன் அறிவிக்கப்பட்டதையடுத்து ஏ.டி.சி. பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தை துவக்கினர் ஊட்டி நகர பா.ஜ.க.வினர். இதே வேளையில், உதகை கலை ஞர் அறிவாலயத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியின் வேட்பாளர் ராசாவுக்காக மாவட்டம் முழுவதும் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்து, தி.மு.க. வேட் பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண் டிய பணிகள் குறித்து ஆலோசனை செய்தனர் மாவட்ட தி.மு.க.வினர்.
ஊட்டி டவுனை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகியோ, "சுமார் 6 மாதத்திற்கு மேலாகவே இங்கு வேலை செய்து வருகின்றோம். அருந்ததியர் சமூக வாக்குகள் அ.தி.மு.க.விற்கு தான் என்றாலும், அதே சமூகத்தை சேர்ந்த எல்.முருகனுக்கும் அந்த வாக்குகள் கிடைக்கும் என்பதில் உறுதியாய் இருக்கின்றோம். அதுபோக, கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் மற்றும் பரந்து வசித்துவரும் சுமார் 2 லட்சம் படுகாஸ் வாக்குகளும் எங்களுக்குத் தான் என்பதால் வெற்றி எங்களுக்கு எளிதாகின்றது'' என்கிறார் அவர்.
அ.தி.மு.க. தரப்பில் நகரச் செயலாளர் சரவணகுமார், வர்த்தக அணி செயலாளர் குருமூர்த்தி ஆகியோர் எம்.பி. சீட்டுக்காகக் காத்திருந்த நிலையில், அருந்ததியர் சமூக வாக்குகளை மட்டுமே நம்பி களத்திலிறக்கப் பட்டுள்ளார் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகனான லோகேஷ் தமிழ்ச்செல்வன். மற்ற இரு வேட் பாளர்களையும் நாடறிந்த நிலை யில், அ.தி.மு.க. வேட்பாளரை அவிநாசி சட்டமன்றத் தொகுதி தாண்டி யாருக்கும் தெரியாது என்பது பலவீனமே! நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமார் களத்தில் உள்ளார்.
"நீலகிரியைப் பொறுத்தவரை தங்களுக்குத் தான் வெற்றி என தி.மு.க., பா.ஜ.க. இரண்டும் மல்லுக்கட்டி வருகின்றனர். அ.தி.மு.க. -ஸ்டி லேயே இல்லை. இதில் பா.ஜ.க.வின் கிரவுண்ட் வொர்க் கனகச்சிதம். "அண்ணே... நாமதான் ஜெயிப்போம்' என ராசாவுக்கு வெற்றுக் கனவினை மட்டும் விதைத்துவரும் தி.மு.க.வினர், திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் மட்டுமே தி.மு.க.விற்கு வெற்றி சாத்தியம். அதிலும் அருந்ததியர் இன வாக்கு களை குறிவைத்து, 'அருந்ததியருக்கென உள் ஒதுக்கீடு கொண்டு வந்தது தி.மு.க. தலைவர் கலைஞரே' எனும் பிரச்சாரத்தை கடைப் பிடித்தால், அருந்ததியர் வாக்குகள் இந்தப் பக்கம் திரும்ப சாத்தியமுண்டு. பொதுவாக மேட்டுப்பாளையத்தில் எப்பொழுதும் அறுவடை செய்வது அ.தி.மு.க. மட்டுமே. இந்த முறை மதத் தீவிரவாதத்தை கடைப்பிடித்துள்ள தால் பா.ஜ.க.விற்கு வாக்குகள் திரும்பும். அதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில் கனவில் மட்டுமே வெற்றி''" என்கின்றார் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி ஒருவர்.
ராசாவிற்கு செக்! எப்படி மீள்வார்?